சென்னை,பிப்.26 – சென்னை ஆலந்தூர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணி களை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று (25.2.2024) நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று விட்டன. சில இடங்களில் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. குறிப்பாக முகலிவாக்கம். கொளப்பாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வளத்துறை மூலம் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளுக்கான அனுமதி கடந்த ஆண்டு கிடைத்த நிலையில், சென்ற ஆண்டு மழைக்கு முன்னதாக பணிகள் நிறைவு பெறவில்லை. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக்குள் பணிகள் நிறைவு பெற்றுவிடும். இந்த பணிகள் தற்போது தீவிர மாக நடந்து வரும் நிலையில், வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவடையும்.” -இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு: ரூபாய் 100 கோடி அபராதம் செலுத்த ஜெயலலிதாவின் சொத்துக்கள் நகைகளை ஏலம் விட முடிவு
சென்னை,பிப்.26- மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விட்டு அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராத தொகையை கட்டு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ.10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது.
இதனை எதிர்த்து ஜெயலலிதா உட்பட 4 பேரும் கருநாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 4 பேரையும் நிரபராதிகள் என விடுவித்து தீர்ப்பளித்தது.
அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு உச்சநீதிமன் றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன் மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஜெய லலிதா உயிரிழந்தார். உயர்நீதிமன்றத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது.
அதே நேரத்தில் ஜெயலலிதா மீதான குற்றச் சாட்டுகளை கைவிடுவதாக கூறி விட்டு செலுத்த வேண்டிய அபராதத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா இறந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவருக்கான அவரது தொகையை யாருமே செலுத்த முன்வராததால் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது சொத்துக்களை விற்று அபராதம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட 28 கிலோ நகைகள், 800 கிலோ வெள்ளி நகைகள், வைர நகைகளை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அப்போது கைப்பற்றியிருந்தனர். இவைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அந்த நகைகளை ஏலம் விட்டு அவரது தொகையில் ஒரு பகுதியை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன்படி ஜெயலலிதாவின் நகைகள் வருகிற மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டு உள்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அதனை அரசு கருவூலத்தில் சேர்த்து பின்னர் நகையின் மதிப்பு கணக்கிடப்பட்டு தற்போதைய மதிப்பின்படி ஏலத்தில் விட்டு பணம் திரட்டப்படும் இந்த நகைகள் மட்டும் 40 கோடி ரூபாய் வரை ஏலம் போகும். அதனை வைத்து அபராத தொகையை செலுத்திவிட்டு மீதமுள்ள ரூ.60 கோடிக்கு அசையா சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதை தவிர வழக்கு கட்டணமாக 5 கோடி ரூபாயை கருநாடக அரசுக்கும் வழங்க வேண்டியுள்ளது. இதற்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலமாகவே முழுமையாக கட்டப்படும் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment