திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இது 86ஆவது ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியவர். 11 வயதிலேயே சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா அவர்கள் திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று பாராட்டினார். நல்ல வருமானம் தந்து வந்த வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு பெரியார் அழைப்பை ஏற்று விடுதலை நாளிதழின் ஆசிரியர் ஆனார். 55 ஆண்டுகளாக அதன் ஆசிரியராக திறம்பட செயலாற்றி வருகிறார்.
‘மிசா’ சிறைவாசியாக சென்னை சிறையில் நானும் ஆசிரியரும் ஓராண்டு காலம் இருந்தோம். அவரும் தாக்கப்பட்டார். இதுவரை 52 முறை சிறை சென்றுள்ளார். படிப்பது, எழுதுவது, பிரச்சாரம் பயணம் பத்திரிகைப் பணி, கல்விப்பணி என்று சளைக்காமல் செயல்படும் ஆசிரியரை ‘தமிழினப் பல்கலைக் கழகம்’ என்று அழைக்கலாம்.
பொதுவாக எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் திராவிடர் கழகம் என்ன சொல்கிறது ஆசிரியர் என்ன அறிக்கை கொடுக்கிறார் என்று தான் கலைஞர் அவர்கள் உற்றுக் கவனிப்பார்கள். அப்படித்தான் நாங்களும் கவனிக்கிறோம். நாங்கள் செல்லும் பாதையை பெரியார் திடல் தான் தீர்மானிக்கிறது. மதவாத ஆபத்தும் ஜாதிவெறியும் தலைதூக்கும் இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரியரின் வழிகாட்டுதல்கள் அதிகம் தேவை, அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
( தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழர் தலைவர் ஆசிரியரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக வெளியிட்ட அறிக்கை – ‘முரசொலி’ – 2.12.2018)
No comments:
Post a Comment