தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்! - கவிஞர் கலி.பூங்குன்றன் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

தெரு முழக்கம் பெரு முழக்கமாகட்டும்! - கவிஞர் கலி.பூங்குன்றன்

2-42

நேற்று (24.2.2024) சனியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக மாநில இளைஞரணிப் பொறுப் பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் கூடியது. மாநிலம் தழுவிய நிலையில் 225 கருஞ்சட்டைச் சிறுத்தைகள் கூடினர்.
இயக்க வரலாற்றில் இவ்வளவு எஃகு தோள்கள் இளை ஞர்கள் எழுந்து நிற்பது இந்தக் கால கட்டத்தில்தான்.
2023 மே மாதம் முதல் 2024 பிப்ரவரி மாதம் முடிய 42 மாவட்டங்களில் 3,321 இருபால் இளைஞர்கள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் புடம் போட்டு எடுக்கப்பட்டனர். மாணவர்கள் 1,865, மாணவிகள் 1,456, பட்டப் படிப்பு மாணவர்கள் 1,371, பள்ளி மாணவர்கள் 1,950.

வேறு எந்தக் கால கட்டத்தையும்விட இது மிகப் பெருஞ் சாதனை!

பாசிசப் பாம்பு தலைதூக்கும் கால கட்டத்தில் தந்தை பெரியார் என்னும் சித்தாந்த சம்மட்டி தேவைப்படுகிறது.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடினார்.

‘‘மக்கள் தொகுதி எக்குறையாலே
மிக்க துன்பம் மேவு கின்றதோ
அக்குறை தீர்க்கும் ஆற்ற லுன்னோனைச்
சிக்கென ஈன்று சீர்பெறுதல் இயற்கை!”

புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடல் வரிகளை ஒப் பிட்டுப் பார்க்கும் எவருக்கும் பளிச்சென்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மனக் கண் முன் தோன்றுவார்.
அன்று புத்தர் தோன்றி ஆரிய வருணாசிரமத்தின் ஆணி வேருக்கு அறவழி ஆயுதத்தால் முடிவு கட்டினார். ஆரியத்தின் வீழ்ச்சியும், எழுச்சியும் வரலாற்று வழி நெடுக நடந்து வந்திருக்கிறது.
தந்தை பெரியார் சகாப்தத்தில் மீண்டும் ஆரியம் அடி வாங்கியது. எந்தக் கல்வி உரிமை சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் உரிமையற்றது என்று ஆரிய மனு தர்மத்தால் ஆக்கப்பட்டதோ, அதன் அடி மடியில் கை வைத்தார் வைக்கம் வீரர் பெரியார்
சமூக நீதி என்று அவர் உயர்த்தி பிடித்த ஒளிச் சுடரில் கல்வி உரிமை, சுயமரியாதை, சமதர்மம், பேதமற்ற பெரு வாழ்வு, பாலியல் சமத்துவம் இவை எல்லாம் பளிச்சிட்டன. இருட்டில் பதுங்கி நச்சுப் பல்லால் கடித்த நாகங்கள் நல்ல அளவு அடி வாங்கின.

கல்வி நீரோடை எங்கும் எங்கும் பாய்ந்தோடின! பிறப்பால் இழிவுபடுத்தப்பட்ட மக்கள் கழனி பச்சைப் பசேல் எனப் பூத்துக் குலுங்கிற்று.
மக்களின் மூளையில் கூடு கட்டிக் கொண்டிருந்த பார்ப்பனீயப் பக்திக் கழிவுகள் கழுவிக் கழுவி வெளி யேற்றப்பட்டன.!
பார்த்தது ஆரியம்… அரசியல் பெயரால் முகமூடி அணிந்து, பழைய மனுதர்மத்துக்குச் சத்துணவு ஊட்டி, சாமர்த்தியமாக மேலே எழுந்து வரும் கால கட்டம் இது.
ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை, பஜ்ரங்தள், விஷ்வ இந்து பரிஷத் – ஏபிவிபி என்று பல முகமூடிகளை அணிந்து, பா.ஜ.க. என்ற அரசியல் குட்டியையும் ஈன்றெடுத்து அதிகார அரியணையில் ஏற்றி – ஆட்டம் போட ஆரம்பித்தது.

பக்திப் பித்துப் பிடித்து பரட்டைத் தலையோடும் வட புலத்தார்களைத் தம் வலையில் சிக்க வைப்பது அவர்களுக்கு எளிதாகவே இருக்கிறது.
திராவிட சித்தாந்தத்தின் திருவுருவமான தந்தை பெரியார் அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் தென்மாநிலங்களைப் பொறுத்தவரை – ஆரியத்திற்கு சாவோலையாக அமைந்துவிட்டன.

இன்றுவரை முண்டி முண்டிப் பார்க்கிறார்கள் – ஈரோட்டுச் சூரியனின் வெப்பம் ஆரிய சித்தாந்தக் காட்டைப் பொசுக்கித் தீர்த்தது!
இரண்டு முறை ஒன்றிய அரசின் அதிகார பீடத்தில் நின்று கொக்கரித்தனர். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடித்த கதையாக சகலத்தையும் ஸநாதன குடையின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் வகையில் மூன்றாவது முறையும் ஒன்றிய அரசின் லகானை தம் கையில் பாதுகாப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள நயவஞ்சகத்தின் எந்த எல்லைக்கும் செல்லும் போக்கைப் பார்க்க முடிகிறது.
இதற்கொரு முடிவுக் கல்லறையை எழுப்ப வேண் டாமா? அதற்கான ‘‘கரசேவை” தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணிலிருந்து தான் புறப்பட்டாக வேண்டும்.
அந்த வீச்சு – சென்னை பெரியார் திடலில் நேற்று (24-2-2024) கூடிய திராவிடர் கழக இளைஞரணி கருஞ்சிறுத்தைகளின் கர்ச்சனையில் கனல் தெறித்தது!
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – பிரச்சாரப் பெரு வெள்ளத்தைக் கரை புரள ஓடச் செய்வீர்!
‘‘தெரு முழக்கம்- பெருமுழக்கமாகட்டும்!” என்ற சாணை முறுக்கேறிய முழக்கத்தைக் கொடுத்துள்ளார் தகைசால் தமிழர் – தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

அய்யா தன் காலத்தில் இருவரை அடையாளம் காட்டினார். அன்னை மணியம்மையார் – அடுத்து ஆசிரியர் வீரமணி.
அந்த நம்பிக்கை கடுகு மூக்கு முனையளவுக்கூடப் பொய்க்கவில்லை!

பழனியிலே பார்ப்பனர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களைப் பாடைகட்டித் தூக்கிச் செல்லும் அளவுக்கு நமது ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.
பீ கொடுத்த வாக்குறுதிகளைக் காக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்றனர். அந்த வகையில் பார்க்கப் போனால், கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்திருக்கவேண்டும்.
பீ ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பொத்தென்று விழும்” என்று வீராப்புப் பேசினார் மோடி.
‘‘வாக்குறுதி என்னாச்சு” என்று மக்கள் வேங்கை களாக வீச்சுடன் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவை யெல்லாம் வெறும் ‘‘ஜூம்லா” என்று பொறுப்பு வாய்ந்த பதவியிலே வீற்றிருக்கிற உள்துறை அமைச்சர் அமித்ஷா நமட்டுச் சிரிப்புடன் உதடுகளை அசைக்கிறார்.
மக்களைப்பற்றி இவர்களின் மதிப்பு என்ன என்பது விளங்கிவிட்டது.

♦ சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து விட்டார்கள்.
♦ சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தள்ளப் பட்டவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என்பதைக் குப்புறத் தள்ளித் துவைக்க ஆரம்பித்துவிட்டனர். ஏற் கெனவே கல்வியிலும், உத்தியோகத்திலும் அஜீரணம் ஏற்படும் அளவுக்கு அனுபவித்த கூட்டத்துக்கு ராஜ பாட்டை அமைக்கும் ஒரு திட்டத்தை அதிவிரைவில் அமல்படுத்தி விட்டது பா.ஜ.க. அரசு. பொருளாதாரத்தல் நலிந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக் கீடாம். ஏற்கெனவே நீதிமன்றங்களால் செல்லாது என்று தூக்கி எறியப்பட்ட அந்தச் சட்டம், செல்லரித்துக் காணாமல் போய்விட்டது. இப்பொழுது அதே நீதிமன்றம் செல்லும் என்று செப்படி வித்தை காட்டுகிறது. காரணம், எல்லாத் தன்னாட்சி அதிகார மய்யங்களையும் கசக்கிக் கைக்குட்டையாக்கி வியர்வையைத் துடைக்கப் பயன் படுத்துகிறது மோடி தலைமையிலான பாசிச ஒன்றிய பி.ஜே.பி. அரசு.

ஒரே நாடு என்கிறது – இந்தியா எந்தக் காலத்தில் ஒரே நாடாக இருந்தது?

புராணங்களில் கூட 56 தேசங்கள் என்றுதானே கூறுகின்றன. வெள்ளைக்காரன் தன் நிர்வாக வசதிக்காக வடிவமைத்ததுதான் இந்தியா என்னும் துணைக் கண்டம்.
ஒரே மொழி என்கிறார்கள் – ஒரே மதம் என்கிறார்கள் – ஒரே கலாச்சாரம் என்கிறார்கள் – இவற்றின் பொருள் என்ன? இந்தியாவில் வாழும் இனங்கள், அவர்களின் மொழிகள், கலாச்சாரங்கள் காலாவதியாக்கப்பட்டு பார்ப்பன – ஆரிய – சமஸ்கிருத கலாச்சாரம் என்ற ஒன்று மட்டுமே கோலோச்ச வேண்டும் என்ற சதித் திட்டம் –

நரித் தந்திரம் இதில் பதுங்கி இருக்கிறது, புரிகிறதா?

ஒரே தேர்தல் என்கிறார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் அணிந்திருப்பது ஈரோட்டுக் கண்ணாடி அல்லவா – அதனால்தான் பளிச்சென்று சொன்னார், ‘‘ஒரே தேர்தல் என்றால், 2024 இல் நடக்க இருக்கும் இந்த ஒரே தேர்தலோடு சரி என்பதுதான் இதன் பொருள்.”
அரசமைப்புச் சட்டத்திற்கு லாடம் கட்டியாயிற்று. அதன் முகவுரையில் கண்டுள்ள செக்குலர் (மதச்சார் பின்மை), சோசலிஸ்ட் (சமதர்மம்) இந்த அர்த்தமுள்ள ஆழமான சொற்களை நீக்கிவிட்டு, அதிகாரப்பூர்வமாக குடியரசு நாள் விளம்பரங்களை ஊடகங்களுக்கு அரசு செலவில் கொடுக்கின்றனர்.
அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப் பட்ட அரசமைப்புச் சட்டத்தைக் கசக்கிக் காலடியில் போட்டு மிதித்துவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தை அலங்கரிக்கச் செய்யவேண்டும் என்பதுதான் அவர் களின் திட்டம். ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ்.கோல்வால்கர் தான் எழுதிய ‘‘ஙிuஸீநீலீ ஷீயீ ஜிலீஷீuரீலீts” (‘‘ஞானகங்கை” தமிழில்) எனும் நூலில் இதையே எழுதியுள்ளார். மாநிலங்களே இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகிறார். 1957 சட்டமன்ற ஜனசங்கத் தேர்தலில் இது தெளிவாகவே பட்டாங்கமாய் குறிக்கப்பட்டுள்ளது.

கருநாடக மாநிலத்திலிருந்து பிரிவினைக் குரல் கேட்கும் அளவுக்கு மோடி அரசின் மூர்க்கத்தனம் கொம்பு தீட்டிப் பாய்கிறது.
இதற்கு மேலும் பி.ஜே.பி. அரசு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

பாசிச பயங்கரத்தைத் தடுக்கவேண்டாமா? மூடு குழி வெட்ட வேண்டாமா?
பாசிச பா.ஜ.க.வின் பயங்கர விஷம் தோய்ந்த பார்ப்பனீய பாய்ச்சலைக் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டாமா?
மக்களிடம் செல்லுங்கள்! தெரு முழக்கம் கேட்கட்டும் – அதுவே பெரு முழக்கமாக ஒலிக்கட்டும் – எங்கெங்கும் ஒலிக்கட்டும்!
தந்தை பெரியார் தடத்தில் நின்று தமிழர் தலைவர் குரல் கொடுத்துள்ளார்.
இந்தக் குரல் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – இந்தியத் துணை கண்டத்திற்குப் பொருந்தக் கூடியது.

இந்தியா கூட்டணியின் செவிகளுக்குச் செல்லட்டும் – செயல்பாட்டுக்கு வரட்டும் – வெற்றி நமக்கே – இந்தியா கூட்டணிக்கே!

வெல்லட்டும் இந்தியா கூட்டணி!
வீழட்டும் பாசிச பா.ஜ.க. கூட்டணி!!

No comments:

Post a Comment