பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்- மாநிலமே நிலை குலைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்- மாநிலமே நிலை குலைந்தது

அமிர்தசரஸ், பிப்.17- விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுதழுவிய முழுஅடைப்புப் போராட்டம் நடந்தது. பஞ்சாப்பில் பேருந் துகள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரியானாவில் சுங்கச்சாவ டிகளில் மறியல் போராட்டம் நடந்தது.

முழுஅடைப்பு
வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறு திப்படுத்த சட்டம் கொண்டுவர வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக நேற்று (16.2.2024) நாடுதழுவிய முழு அடைப்புப் போராட்டம் (பாரத் பந்த்) நடத்த சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, நேற்று (16-2-2024) நாடு முழுவதும் முழுஅடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தன.

பேருந்துகள் ஓடவில்லை
பஞ்சாப் மாநிலத்தில் முழு ஆதரவு காணப்பட்டது.அங்கு பஞ்சாப் போக்கு வரத்து தொழிற்சங்க பணியாளர்கள், முழுஅடைப்புக்கு ஆதரவாக பணிக்கு வரவில்லை. எனவே பேருந்துகள் ஓட வில்லை. தனியார். பேருந்துகளும் இயக் கப்படவில்லை. இதனால் பயணிகள் பேருந்தை எதிர்பார்த்து மணிக்கணக்கில் காத்துக் கிடந்தனர்.
மாணவர்களும், அலுவலகம் செல் பவர்களும் அவதிப்பட்டனர். பாட்டி யாலா, அமிர்தசரஸ், லூதியானா ஆகிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பெரோஸ்பூரில் பெரும்பாலான கல்வி நிறுவனங்களும், வணிக நிறுவனங் களும் மூடப்பட்டு இருந்தன. சந்தைகள் ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டன. ஹோசியார்பூர், கபூர்தலா ஆகிய நகரங் களிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. பாக்வாரா நகரில், கடைகளை அடைக்குமாறு வியாபாரிகளை விவசாயி கள் வற்புறுத்தினர்.

சாலை மறியல்
பெரோஸ்பூர்-பசில்கா சாலை உள் ளிட்ட இடங்களில் விவசாயிகள் மறிய லில் ஈடுபட்டனர். பதன்கோட்,தர்ன்தரன், பதிண்டா, ஜலந்தர் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பினர்.
கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வந்தனர்.

சுங்கச்சாவடிகள்
அண்டை மாநிலமான அரியானா வின் ஹிசார் நகரில், அரியானா போக்கு வரத்து தொழிற்சங்க பணியாளர்கள், முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பணிக்கு வரவில்லை. அதனால் அங்கு பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மற்ற வடமாநிலங்களிலும் முழு அடைப்புக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

No comments:

Post a Comment