‘சங்கி'-தம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 1, 2024

‘சங்கி'-தம்!

featured image

‘சங்கி’ என்ற சொல் சிரிப்பாய் சிரிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை சங்கி என்று விமர்சித்து விட்டார்களாம் – அதற்காக அவரது மகள் அய்ஸ்வர்யா என்பவர் ஆத்திரப்பட்டு – ‘லால் சலாம்’ படத்தின் இசைத்தட்டு விழாவில் கருத்தை உதிர்த்துள்ளார்.
‘‘அப்பாவை சங்கி என்று சொல்லும்போது கோபம் வரும். இப்போது சொல்லுகிறேன், ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்திருந்தால், அவர் ‘லால்சலாம்’ படத்தில் நடித்திருக்கமாட்டார்” என்றார்.

இதன்மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்? சிறுபான்மையின மக்களை அவதூறாகப் பேசினால், நடத்தினால், அவர்களுக்குச் ‘‘சங்கி” என்று பெயர் என்பதை ஒப்புக் கொண்டதற்கு அவரைப் பாராட்டலாம். அந்த அர்த்தத்தில் தன் தந்தையார் சங்கியல்ல என்று தந்தை பாசத்தோடு பேசி இருக்கிறார்.
அதே சமயத்தில் இன்னொரு செய்தியும் வெளிவந்துள்ளது – பி.ஜே.பி.யின் தேசிய மகளிரணி தலைவர் திருமதி வானதி சீனிவாசன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
‘‘பி.ஜே.பி.,க்கு எதிரான கொள்கையை வைத்திருப்பவர்களும், எதிர் கருத்து வைத்திருப்பவர்களும், எங்களை இழிவுபடுத்தும் ஒரு சொல்லாக ‘சங்கி’ என்பதைப் பயன்படுத்துகின்றனர். இது ரொம்ப நாளாகவே நடந்து கொண்டிருக்கிறது.”

‘‘சங்கி என்றால் நான் அர்த்தம் சொல்லட்டுமா? இந்த நாட்டை நேசிக்கின்ற, இந்த நாட்டின் நலன்களில் சமரசம் செய்துகொள்ளாத உண்மையான குடிமக்கள்தான் சங்கி. அப்படி எங்களை சங்கி என்று சொன்னால், எங்களுக்குப் பெருமைதான்” என்று சொல்லியிருக்கிறார்.
இதில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ‘சங்கி’ என்று சொன்னால், கொச்சைப்படுத்துவதாகக் கோபப்படுகிறார் நடிகர் திரு.ரஜினிகாந்தின் மகள் அய்ஸ்வர்யா.
சங்கி என்றால் பெருமைக்கு உரியதுதான் என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார் பி.ஜே.பி.யின் வானதி சீனிவாசன்.
இதில் எது உண்மையாக இருக்க முடியும்?
ஹிந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்கிறார்கள். வேதம் (சுருதி), மனுதர்மம் (ஸ்மிருதி) இரண்டும் அவர்கள் ஏற்படுத்தவிருக்கும் ஹிந்துராஜ்ஜியத்திற்கு அச்சாணி போன்றவை.
மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 19 என்ன சொல்லுகிறது? மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்களாம்.
இதனை நாங்கள் எதிர்க்கிறோம் – எரிக்கிறோம்.
திருமதி வானதி எங்களோடு இணைந்து குரல் கொடுக்க முன்வருவாரா?
– மயிலாடன்

No comments:

Post a Comment