‘திராவிட மாடல்’ ஆட்சியில் சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாகும் அதிசயமும் மோடியின் ‘விஸ்வகர்மா’ திட்டமும்
– குடந்தை கருணா
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வில் வென்று உரிமையியல் நீதிபதியாக இம்முறை பல முதல் தலைமுறை பட்டதாரிகள் தேர்வாகியுள்ளனர்.
எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள், தமிழ் வழியில் படித்து அதன் காரணமாக ‘திராவிட மாடல் அரசு’ கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக பலனடைந்த மாணவர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள் என அடித்தட்டு மக்கள் கல்வியில் சிறப்பாக படித்து முன்னேற சிறந்த வாய்ப்பினை தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம், தந்தை பெரியார் தொடங்கி கடந்த நூறாண்டாக செய்த பணிகள், அதன் விளைச்சலை இன்றைக்கு தந்து கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சிதான் இந்த மாணவர்களின் வெற்றி.
அரசுப் பள்ளியில் படித்தவர் சுதா. சிவில் நீதிபதி தேர்வில் வென்றுள்ளார். திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள திருத்துறைப்பூண்டி. அதன் அருகே உள்ளது நாலாநல்லூர் என்ற சின்ன கிராமம். அங்கே வசித்து வரும் கணேசன் மற்றும் சந்திரா தம்பதியின் மகள் சுதா. இவரது பெற்றோர் விவசாய கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி.
இவரைப் போலவே மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள முனிவலம்குடியில் கூலி வேலை செய்துவரும் சுப்பிரமணியன் மற்றும் அஞ்சம்மாள் தம்பதியின் மகன் பால தண்டாயுதம். கடின உழைப்புக்குப் பின் நீதிபதியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். ஏழ்மையை வென்று 36 வயதில் நீதிபதியாகி உள்ள பால தண்டாயுதத்திற்கு ஊர் மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உச்சியில் இருக்கிறது புலியூர் குக்கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் சிறீபதி என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகியிருக்கிறார். தேர்வு தேதிக்கு இரண்டு நாள்கள் முன்புதான் குழந்தை பிரசவித்திருக்கிறார் சிறீபதி. ஆனாலும் முயற்சியை கைவிடாத சிறீபதி, அந்த நிலையிலும் சென்னைக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். தற்போது சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிப்பெற்று சாதித்துள்ளார். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த அரசாணையின் காரணமாக சிறீபதி நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சக்திநாராயண மூர்த்தி என்பவர் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வென்று, சிவில் நீதிபதியாகத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். இவரின் தாய் ஜெயலட்சுமி மாற்றுத்திறனாளி. உடல்ரீதியாகப் பல்வேறு இன்னல் களைச் சந்தித்து வரும் ஜெயலட்சுமி, தினமும் நீதிமன்றத்துக்குச் செல்வதற்குக்கூட ஒருவரின் உதவியை நாட வேண்டியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் மகள் தனலட்சுமி வழக்குரைஞர் படிப்பு முடித்து, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். இவர் சமீபத்தில் நடந்த நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். எந்த வித பயிற்சி மய்யத்திற்கும் செல்லாமல் கடின உழைப்பால் நீதிபதியாகி உள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியை சேர்ந்த பால்பாண்டி மகன் நிவாஷ் (24). இவரது தாயார் சிறுவயதிலேயே இறந்து விட்டதால், பாட்டி வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு, அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தார். தொடர்ந்து மதுரை அரசு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு தமிழ் வழியில் பயின்ற அவர், அரசு பள்ளியில் பயின்று இளம் வயதிலேயே நீதிபதியாக பணியாற்ற உள்ள அவருக்கு உசிலம்பட்டி பகுதி வழக்குரைஞர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த மயில்வாகனன் காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் புன்னகை (24). தற்போது நடந்த நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். காவல்துறையின் சார்பில் தந்தை நீதிமன்றத்திற்கு வந்தால், நீதிபதியாக வீற்றிருக்கும் தன் மகளைப் பார்த்து நிமிர்ந்து மரியாதை செலுத்த வேண்டும். எத்தகைய மாற்றம் நடந்துள்ளது தமிழ்நாட்டில். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 4 பேர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்த லூர்து பிரான்சிஸ். இவர், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியில் இருந்தபோது, கடந்த 25.4.2023இல் மணல் கடத்தல் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப் பட்ட நேரத்தில் அவரது இளைய மகன் மார்ஷல் ஏசு வடியான், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் நடத்தும் மாஜிஸ்திரேட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். பின்னர் நடந்த முதன்மை தேர்வு, மெயின் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மார்ஷல் ஏசுவடியான், தற்போது நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி பெற்று மாஜிஸ்திரேட் பணிக்கு தயாராகி வருகிறார். மகனை நேர்மையான நீதிபதியாக்க வேண்டும் என்பது லூர்து பிரான்சிஸின் கனவாக இருந்தது. அந்த கனவை மகன் நிறைவேற்றி உள்ளார்.
சலவைத் தொழிலாளியான கணேசன் – மேகலா இணையரின் இரண்டாவது மகனான பாலாஜி காஞ்சிபுரத்தில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நிலையில், அதனை தொடர்ந்து வழக்குரைஞராக வேண்டும் என எண்ணிய பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அரசு சிவில் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் தன்னை தயார் செய்து கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வில் 12,500 பேர் தேர்வு எழுதிய நிலையில் இவர் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதித் தேர்விலும் 472 நபர்களில் ஒருவராக தேர்ச்சி பெற்றுள்ளார். ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 11ஆம் தேதி வெளியான முடிவுகளின் படி 237 நபர்களில் இவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவை அனைத்தும் தமிழ் நாட்டில் கடந்த நூறு ஆண்டுகளாக திராவிடர் இயக்கம் தொடர்ந்து செய்த கல்விப் புரட்சியால் அடித்தட்டு மக்கள் பெறும் வெற்றிகள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராகக் கொண்டு வந்த சட்டம், அருந்ததியர்க்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு. இதன் காரணமாக 2013-2014ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் 86 மாணவர்கள் சேர முடிந்தது. பொதுப் போட்டியில் 2 மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.
இவற்றை முடக்குவதற்கு மோடி அரசு கொண்டு வந்த சட்டம் தான் நீட் தேர்வு. தொடர்ந்து கல்வியில் மாற்றம் என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன்படி, மாணவர்களுக்கு தொழிற்கல்வி புகட்டுகிறோம் என்ற பெயரில், குடும்பத் தொழிலுக்கு மாணவர்களை விரட்டும் திட்டம்.
இது போதாதென்று, அண்மையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள ‘விஸ்வகர்மா திட்டம்’. இதன்படி, ஒரு புதிய குலதர்மத் தொழிலை ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தி, பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் செய்வார்கள் – அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்றும் அத்திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது மோடி அரசு.
சலவைத் தொழில், தச்சுத் தொழில், படகு செய்தல், கருமான் பட்டறைத் தொழில், குயவன் மண்பாண்டத் தொழில், சுத்தி முதல் துடைப்பம் – விளக்குமாறு கட்டும் தொழில் (Broom Maker), பொம்மை செய்தல், சிகை நீக்கும் தொழில் (Barber), கைத்தறித் தொழில், பூக்கட்டும் தொழில், தையல் தொழில், மீன் பிடித் தொழில் முதலியன இத்திட்டத்தில் வரும். இதனைச் செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மானிய அடிப்படையில் கடன் அளிப்பார்களாம்! 18 வயது உள்ளோர் இந்த திட்டத்தில் சேர முடியும் என்றால், அம்மாணவர்கள் எவ்வாறு உயர் கல்வி பெற முடியும்?
திராவிட இயக்கம் போராடி, ஒடுக்கப்பட்ட மக்களை உயர் பதவிகள் சென்றடைய தொடர்ந்து சட்டங்களும், திட்டங்களும் நிறைவேற்றி வருகிறது.
ஆனால், மோடி அரசு, ஒடுக்கப்பட்ட மக்கள் மேலே செல்வதைத் தடுத்து, அவர்கள் சமூகத்தின் கடை நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
`அந்த ஒசந்த சேர்ல நீ உட்காரணும்யா..!’ – என்ற தாய் ஜெயலட்சுமியின் வைராக்கியத்தை அவர் மகன் நிறைவேற்றியுள்ளார். இதைத் தான் ; திராவிடர் இயக்கம், திராவிட மாடல் ஆட்சி அடித்தட்டு மக்களின் முன்னேற்ற, ஒசந்த இடத்தில் உட்கார வைக்க, தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்பதுதான் தமிழ் நாட்டிற்கு பெருமை.
இந்த பெருமைகள் தொடர வேண்டுமா? அல்லது ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் அழுத்தும் மோடியின் விஸ்வகர்மா திட்டங்கள் தொடர வேண்டுமா? என்பது தான் நம் முன் உள்ள முக்கிய கேள்வி.
No comments:
Post a Comment