ஒரு கைத்தடி பல்லாயிரம் ஆண்டுகால சமூகக் கொடுமைகளைத் தகர்த்தெறிந்தது.
காலங்காலமாகக் குட்டுப்பட்டுக் குனிந்து கிடந்தவர்களுக்குப் பிடிமானம் தந்து உயர்த்தியது. சுயமரியாதை உணர்வுடன் – பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட மனிதர்களாகத் தலைநிமிர்ந்து நடப்பதற்கான பாதைக்கு வழிகாட்டியது.
அந்தக் கைத்தடிதான், தந்தை பெரியார் நடத்திய ஓயாத சமூக சீர்திருத்தப் போராட்டம்.
உலகில் பிறந்த சிந்தனையாளர்களில், தத்துவ ஞானிகளில், சமூகப் புரட்சியாளர்களில் தந்தை பெரியாருக்குத் தனி இடம் உண்டு. தனது போராட்டங்களின் நோக்கங்கள் சட்ட வடிவமாகி நிறைவேறுவதைக் கண்முன்னே காணும் பெருமையைப் பெற்றவர் பெரியார்.
அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டமன்ற உறுப்பினராகவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராகவில்லை. அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ பொறுப்பேற்கவில்லை.
இந்தப் பதவிகளை வெறுத்தார்; ஒதுங்கினார்; தேர்தல் அரசியலே தேவையில்லை என்ற நிலைப்பாட்டைஎடுத்தார். ஆனால், தேர்தல்களத்தில் வென்றவர்களால் பெரியாரின் கருத்துகளைச் சட்டவடிவமாக்காமல் இருக்க முடியாது என்கிற நிலையை பெரியாரின் பெரும்பணி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் உருவாக்கியிருந்தது.
மூதறிஞர் ராஜாஜி ஆட்சிக் காலத்தில், தந்தை பெரியார் போராட்டம் நடத்தி, தன் கொள்கையை வெற்றி பெறச் செய்தார். பச்சைத் தமிழர் எனப் பெரியாரால் புகழப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ‘பெரியார் சொல்கிறார். காமராஜர் செய்கிறார்” என்று பத்திரிகைகள் தலையங்கம் எழுதும் அளவிற்குப் பெரியாரின் சிந்தனைகள் கல்வித்துறையில் செயல்வடிவம் பெற்றன. பேரறிஞர்அண்ணாவோ தனதுஆட்சியையே பெரியாருக்குக் காணிக்கை என அறிவித்தவர்.
– தளபதி மு.க.ஸ்டாலின். 17.9.2022
No comments:
Post a Comment