கலைஞர் நினைவிடத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்தும் டிஜிட்டல் அருங்காட்சியகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 26, 2024

கலைஞர் நினைவிடத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்தும் டிஜிட்டல் அருங்காட்சியகம்

சென்னை,பிப்.26- 2021-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கலைஞர் நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண் டமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. அறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நினைவிடம் ஆகியவற்றின் திறப்பு நிகழ்ச்சி இன்று (திங்கட் கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெறுகிறது. இதனை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கலைஞர் நினைவிடத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளடங்கி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணாவின் நினை விடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளன. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்னால் கலைஞர் நினைவிடம் அமைந்துள்ளது. கலைஞர் அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
கலைஞரின் நினைவிடத்தில் ‘ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தனது மறைவுக்கு பின்னர் இந்த வாசகத்தை தனது சமாதியில் எழுத வேண்டும் என்று கலைஞர் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கலைஞரைப் பாராட்டி சோனியாகாந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கலைஞர் சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கலைஞரின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன.

அவரது நினைவிடத்தின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் கலைஞரின் இந்த தோற்றம் இரவு நேரத்தில் ‘லேசர்’ மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டிஜிட்டல் அருங்காட்சியகம்

கலைஞர் சமாதியை சுற்றிப் பார்த்தவுடன், 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் உலகம்’ என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் குளுகுளு ஏ.சி. காற்று மனதை வருடுகிறது. கலைஞர் எழுதிய புத்தகங்களின் பெயர்கள் ‘க’ என்ற ஒற்றை எழுத்தில் உள்ளடக்கி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்த எழுத்துதான் ‘கலைஞர் உலகம்’ அருங் காட்சியகத்தின் இலச்சினை ஆகும்.

‘கலைஞர் எழிலோவியங்கள்’ என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையை கலைஞரின் இளமைக் காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. இதில் கலைஞரின் இறுதிப்பயண புகைப்படங்களும், ‘அப்பா என்று அழைத் துக் கொள்ளட்டுமா தலைவரே?’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதமும் இடம் பெற்றுள்ளது. இது மனதை கலங்க வைக்கின்றன.
‘உரிமை வீரர் கலைஞர்’ என்ற பெயரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் நுழைந்தால் ஆச்சரியம் காத்திருக்கிறது. சுதந்திர நாளன்று தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றிடும் உரிமையை பெற்றுத் தந்து சென்னை கோட்டையில் கலைஞர் உரை யாற்றுவது போன்ற காட்சி அமைப்பு ‘3 டி’ தொழில்நுட்பத் துடன் இடம் பெற்றுள்ளது. கம்பீரமாக நின்றபடி தனது குரலில் கலைஞர் கருணாநிதியே பேசுவது போன்ற வியப்பு ஏற்படுகிறது.

கலைஞருடன் ‘செல்பி’

‘கலைஞருடன் ஒரு செல்பி’ என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். புகைப்படத்தை எடுத்தவுடன் ‘டிஜிட்டல்’ தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று ‘வாட்ஸ்-அப்’ எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
‘கலைஞரின் சிந்தனை’ சிதறல்கள் என்ற பெயரில் பிரமாண்ட அறை ஒன்றும் அமைந்துள்ளது. இதில் ‘ஏ.வி.’ தொழில்நுட்பத்தில் கலைஞர் பேசுவது போன்று காட்சி அமைப்புகள் இருக்கின்றன. ‘புதிரை வெல் கலைஞர் வழி செல்’ என்ற தலைப்பில் கலைஞர் பற்றிய கேள்விகள் தொடு திரையில் வருகின்றன. சரியான பதிலை சொல்பவர்களை கலைஞரே பாராட்டுவது போன்று குரல் ஒலிக்கிறது. கலைஞர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ உள்பட 8 புத்தகங்களின் தலைப்புகளுடன் ‘டிஜிட்டல்’ திரை வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த புத்தகத்தை தொட்டாலும், அந்த புத்தகம் பற்றிய விளக்கம் காட்சிப் பதிவாக தோன்றுகிறது. இந்த அறையில் 9 அடி உயரத்தில் கலைஞரின் மெழுகு உருவச்சிலையும் அமைய இருக்கிறது.

20 நிமிடங்கள் ஓடும் குறும்படம்

‘கலையும், அரசியலும்’ என்ற தலைப்பில் 79 பேர் அமரும் வகையில் மினி தியேட்டரும் உருவாக்கப்பட் டுள்ளது. 60 அடியில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் வாழ்க்கை வரலாறு 20 நிமிடங்கள் குறும்படமாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திருவள்ளுவர் சிலை, வள்ளுவர்கோட்டம், அண்ணா மேம்பாலம் போன்ற திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் அருங்காட்சியகத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்லும் பாதைகளில் பளிச்சிடுகின்றன. கலைஞர் நினைவிடத்தில் இருந்து மெரினா கடற்கரையின் அழகை ரசிக்கும் வகையில் பூங்கா போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

‘ஆன்லைன்’ முன்பதிவு

கலைஞர் நினைவிடம் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கலைஞர் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.2.2024) திறந்து வைத்தவுடன் நாளை (27.2.2024) முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகத்தை இணைய வழியில் முன்பதிவு செய்துதான் பார்வையிட முடியும். இதற்காக தனியே இணையதளம் உருவாக்கப்படும். முன்பதிவு விவரத்தை இங்கு அமைந்துள்ள சேவை கட்டட அலுவலகத்தில் காட்டினால் கையில் ‘டேக்’ கட்டி விடுவார்கள். அதன்பின்னர் அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.

கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இலவசமாக பார்வையிடலாம். கலைஞர் அருங்காட்சியகம் விரைவில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும். கலைஞர் நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்தின் பராமரிப்பு பணியை பொதுப் பணித்துறையே மேற்கொள்ள வேண்டும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார் ‘ என்றார்.

No comments:

Post a Comment