மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மோகன் (யாதவ்) தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பசுப் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. இதில் பேசிய முதலமைச்சர், ‘‘மழைக் காலங்களில் மாடுகள் முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனைத் தடுக்கும் வகையில், பசுக் காப்பகங்களுக்கு வழங்கப்படும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும், ‘‘இறந்த பசுக்களுக்கு முறையான தகன ஏற்பாடுகளை செய்யவேண்டும்” என்று சொன்னதோடு, ‘‘இறந்த பசுக்களுக்குக் கோவில்கள் அமைக்கவேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அமைச்சர்கள் குழு ஆதரவு தெரிவித்ததுடன், இந்த முயற்சியில் சமூக அமைப்புகளை ஈடுபடுத்தப் பரிந்துரைத்துள்ளது. மேலும் இதற்கான நிதி கால்நடை வளர்ப்புத்துறை மற்றும் முதலமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் என்று முடிவு செயப்பட்டது
மத்தியப் பிரதேச அமைச்சரவையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
பி.ஜே.பி.க்கும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட காவிகளுக்கும் மனிதர்களைப்பற்றிக் கவலையில்லை; மாறாக மாடுகளைப்பற்றி – அதிலும் குறிப்பாக பசு மாடுகளைப்பற்றித்தான் ரொம்ப ரொம்பக் கவலை!
அதன் சிறுநீருக்குப் பெயர் மூத்திரம் அல்ல – கோமியம்! உத்தரப்பிரதேசத்தில் இரவு நேரங்களில் மாடுகளைப் பள்ளிக்கூட வளாகங்களில் கட்ட ஏற்பாடு செய்கிறார்கள் என்றால், இவர்களை என்ன சொல்ல?
இன்றைக்கு பசு மாடுகளுக்காக இவ்வளவு வாய் நீளம் காட்டுகிறார்களே- பசுக்களைக் கொன்று யாகம் நடத்தியவர்கள்தானே இந்த ஆரியப் பார்ப்பனர்கள் (யஜூர் வேதத்தில் ஒரு பட்டியலே இருக்கிறதே!) (அஷ்ட தச பசு விதானம்).
பதினொரு பசுக்களைக் கொன்று நடத்தும் யாகத்திற்குப் பெயர் ஏகாதசீன பசுவிதானம் என்பதாகும்.
ஏன், மனிதர்களையே கொன்று யாகம் நடத்தி உள்ளார்களே – அதற்குப் பெயர் புருஷயஜ்ஞ!
உருவத்தில் மனிதர்களாகவும், உள்ளத்தில் மிருகங்களாகவும் உலாவுகிறார்களே, என்ன சொல்ல?
– மயிலாடன்
No comments:
Post a Comment