‘‘நெஞ்சுக்கு நீதியில்” ஆறு பாகங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக எழுதித் தந்தார்கள். ‘‘தாய்வீட்டில் கலைஞர்” என்ற நூல், 6 பாகத்தையும் தாண்டி, இப்பொழுது ஏழாவது பாகமாக இந்த நூல் வந்திருக்கிறது – அதுதான் பொருத்தமாக இருக்கும்.
‘குடிஅரசு’ இதழின் துணை ஆசிரியராக இருந்து 40 ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்து, அன்னை மணியம்மையார் கையாலே ஓராண்டு காலம் சாப்பிட்டு, தன்னுடைய ரத்தத்தைத் தொட்டு திராவிடர் கழகத்துக் கொடியை உருவாக்கியது, புதுவையில் கலைஞர் தாக்கப்பட்ட நேரத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஓடோடிச் சென்று, மடியில் படுக்கவைத்து காயத்திற்கு மருந்து போட்டது, என்னுடைய அண்ணன் மு.க.முத்து பிறந்தபொழுது, குழந்தையை பெரியார் கையிலே கொடுத்து அழகு பார்த்தது; என் அண்ணன் அழகிரி அவர்கள் திருமணம் நடைபெற்றபொழுது அந்தத் திருமணத்திற்கு வந்து அவர் வாழ்த்தியது – இப்படி எத்தனையோ காட்சிகள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
அதிலும் குறிப்பாக அண்ணன் அழகிரியினுடைய திருமணம் பெரியார் திடலில்தான் நடந்தது. திருமணம் முடிந்து, தந்தை பெரியார் அவர்களுக்கு கோபாலபுரத்தில் விருந்து. அந்த விருந்து நேரத்தில், நான்தான் பெரியாருக்கு உணவு பரிமாறினேன் – அதை இப்பொழுது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
தமிழர்தம் இல்லமெல்லாம், உள்ளமெல்லாம் இருக்கவேண்டிய நூல். இதனை உருவாக்கி இருக்கக்கூடிய ஆசிரியர் அவர்களை நான் உள்ளபடியே நன்றியால், பாராட்டுகிறேன் என்று சொல்லக்கூடாது; வணங்குகிறேன்.
இந்த இரண்டு இயக்கங்களுக்குள்ளும் இருக்கக்கூடிய நட்பும், உறவும் உலகில் உள்ள வேறு எந்த இயக்கத்திற்கும் இருந்திருக்க முடியாது; யாராலும் அடையாளம் காட்டிட முடியாது.
முரண்பட்டு மோதல் நடத்திய காலங்கள் இருந்தது; மறுக்கவில்லை.யானை தனது குட்டியைப் பழக்கும்பொழுது மிதிக்கும், அடிக்கும் என்பதைப் போல, பெரியார் எங்களைத் திட்டித் திட்டிப் பழக்கினார் என்று கலைஞர் அவர்களே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.
தந்தை பெரியார் மீது, தலைவர் கலைஞர் வைத்திருந்த மரியாதை என்பது உணர்வுப்பூர்வமானது. அதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம், இந்த மேடையில் கூட அதைக் காட்சிப்படுத்திக் காட்டினார்கள்.
(தளபதி ஸ்டாலின் தஞ்சையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் ஆற்றிய உரை – 6.10.2023)
No comments:
Post a Comment