போலிகளை அடையாளம் காண்பீர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 20, 2024

போலிகளை அடையாளம் காண்பீர்!

featured image

மனோஜ் சிறீனிவாஸ்தவா என்ற பாஜக பிரமுகர் தமிழ்நாடு அரசு குறித்து தொடர் வதந்திகளைப் பரப்பி வருகிறார்.
17.02.2024 அன்று சமூகவலைதளத்தில் 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் காவல்துறை அதிகாரியை பாஜக பிரமுகர் தாக்கிய பழைய காணொலியை தமிழ்நாட்டில் நடப்பதைப் போன்று பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் ஹிந்தியில் எழுதி இருப்பதாவது: “பாலியல் வன்கொடுமை குற்றவாளி டி.எம்.கே. சட்டமன்ற உறுப்பினர் மன்சூர் முகமது என்பவர் விசாரணைக்குச் சென்ற காவல்துறை அதிகாரியை தாக்குகிறார். இதற்கு ஸ்டாலின் அரசும் துணை நிற்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இவரது இந்தப் பதிவு 20 லட்சத்திற்கும் அதிகமான முறைகள் பார்வையிடப்பட்டுள்ளது.
இது ஒரு எடுத்துக்காட்டே – இது போன்று திராவிட முன்னேற்றக் கழகம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் போன்றோர் குறித்து ஆயிரக்கணக்கான போலி செய்திகள், படங்கள், வீடியோக்கள் பாஜகவினரால் வட இந்தியாவில் ஹிந்தி மொழியில் தொடர்ந்து பரப்பப் பட்டுக்கொண்டு இருக்கிறது.
அதை தடுக்கவோ அல்லது விளக்கம் கொடுக்கவோ யாருமே இல்லாத நிலை உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு – பீகார் மாநிலத்திற்கு இடையே பெரும் கலவரத்தை உருவாக்க முயன்ற மனீஷ் கஷ்யப் என்ற நபர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஓராண்டாக மதுரை சிறையில் இருந்து பின்னர் பீகார் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நிதீஷ் குமார் பாஜக ஆதரவோடு முதலமைச்சர் ஆனதும் அவரை பிணையில் விட்டு விட்டனர். அவர் தினசரி முக்கிய தொலைக்காட்சிகளில் தமிழ்நாடு குறித்து மோசமாக பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. தொழில் நுட்பப் பிரிவின்(IT Wing) கவனத்துக்கு இது வந்ததா என்று தெரியவில்லை.
பொய்யும் புனை சுருட்டும் பிஜேபி சங்பரிவார் வட்டாரத்துக்குக் கை வந்த கலை – இவை இரண்டும் அவர்களின் இரு விழிகள்.
சீனாவின் ஷாங்காய் பேருந்து நிலையத்தின் படத்தினை குஜராத் அகமதாபாத் பேருந்து நிலையம் என்று விளம்பரம் செய்த மோசடி நினைவிருக்கிறதா?
மக்களவைத் தேர்தல் வருவதற்குள் இது போன்ற அபாண்டமான பொய்ப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்ட கோடிக்கணக்கான ரூபாய் களைச் செலவு செய்து கூலிக்கு ஆள் அமர்த்தி விபரீத விளையாட்டை நடத்திக் காட்டுகிறார்கள்.
நாம் அதே போன்ற முறைகளைப் பின்பற்றா விட்டாலும் பிஜேபி – காவிக் கும்பலின் மோசடிகளை அவ்வப்போது அம்பலப்படுத்துவது அவசியமும் – காலத்தின் கட்டாயமுமாகும். இளைஞர்களே போலிகளை அடையாளம் காண்பீர்! காண்பீர்!!

 

No comments:

Post a Comment