“வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும் சக்திகளின் அதிகாரக் கரங்களால் ‘நீட்’ திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ – மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீரில் தொடங்கி புதுச்சேரி யூனியன் பிரதேசம் வரை மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன. அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமான, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு திணிக்கப்பட்டுள்ளது. தாய்மொழியாம் தமிழ் மொழியைக் கந்தலாக்கி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்துவதற்கான சதிவலை பின்னப்படுகிறது.
இன்னும் பல வடிவங்களில் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ள இந்தக் காலச்சூழலில் பெரியாரும், அண்ணாவும், தலைவர் கலைஞரும் நம்மிடையே இல்லை என்றாலும், அவர்கள் வழங்கிய லட்சிய தீபம் நம் கைகளில் அணையாத அற்புத விளக்காகச் சுடர் விடுகிறது.
அந்தச் சுடரை உயர்த்துவோம்! இனப்பகை எனும் இருட்டை விரட்டுவோம்! ஜனநாயக விரோத சக்திகளை எதிர்கொள்ளும் வலிமையைப் பெருக்கும் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் பவளவிழாவினை பயிற்சிக்களமாக்குவோம். கி.வீரமணியின் அறிவுரைகளுக்குச் செவி மடுப்போம். தன்மானம் காக்கும் போரில் வெற்றியன்றி வேறில்லை என்ற ஆர்ப்பரிப்புடன் அணிவகுப்போம்”
(தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 27.8.2019 அன்று ‘முரசொலி’யில் எழுதிய கடிதம்.)
No comments:
Post a Comment