ஆளும் பா.ஜ.க.வுக்குச் சாதகமான ஒரு சார்பு பணந்திரட்டும் சட்டம்!
வெளிப்படைத்தன்மையற்றதும் – ஜனநாயகத்துக்கு விரோதமானதுமான தேர்தல் பத்திரச் சட்டம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!
மறுசீராய்வு உள்ளிட்ட முறையில் ‘புதிய முயற்சிகள்’ எடுக்க ஒன்றிய பி.ஜே.பி. அரசு முயன்றால், தக்க வகையில் அதை மக்கள் எதிர்கொள்ளவேண்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் எதிர்ப்புத் தெரிவித்தும், அதனைப் பொருட்படுத்தாது ஒன்றிய பி.ஜே.பி. அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திரச் சட்டம் செல்லாது என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது – மறு சீராய்வு மனு போன்ற முறையில் ஒன்றிய அரசு முயற்சிக்கக் கூடும் என்றும், அதனை எதிர்கொள்ள வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அமலில் இருந்து வருகின்றது.
பொதுவாழ்வில் ஊழல் ஒழிப்புப் பற்றி பலமுனை களில் பலராலும் பேசப்பட்டு வந்தாலும், அதன் ஊற்றுக்கண் நம் நாட்டுத் தேர்தல் முறையில்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
தனி நபர்களைவிட கம்பெனிகளின் நன்கொடை அவர்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குக் கொடுக் கப்படுவதே பெரும் பங்கு ஆகும்!
எவரும் – எந்த கார்ப்பரேட் கம்பெனிகளும் பயனில்லாது நன்கொடை தரமாட்டார்கள்!
நம் நாட்டில் கிராமியப் பழமொழி ஒன்று – ‘‘ஆதாயம் இல்லாமல் அவர் ஆற்றோடு போவாரா?” என்பதே!
முன்பு அதிகபட்சமாக நன்கொடை ரூ.20 ஆயிரம் மட்டுமே என்ற விதி இருந்தது.
இதன்மூலம் ஜனநாயக ஆட்சி மறைமுகமாக கார்ப்பரேட் முதலாளிகளின் ஆட்சியாக மாறிடும் வாய்ப்பு உண்டு.
பொதுத்துறை நிறுவனங்கள்
தனியாருக்குத் தாரை வார்ப்பு
பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம்கூட தனியார் மயமாக்கி, அவற்றை தனியார் பெரும் முதலாளிகளுக்கு – மலிவான விலைக்கு விற்பனை செய்தோ அல்லது நீண்ட கால குத்தகை முறைமூலமோ, அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமான பீடிகை களை – அதன் ஓர் அம்சமான சமதர்மத்தையே காணாமற் செய்யும் சூழ்நிலை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கண்கூடாகவே தெரிகிறது!
அத்தகையவர்களுக்குத் தாரை வார்ப்பதும், அவர்களிடமிருந்து ஏராளமான நன்கொடையை கட்சிக்கான நிதியாகப் பெறுவதற்கும் ஒரு வழிமுறை யாக முற்றிலும் வெளிப்படைத்தன்மை (Transparency) இல்லாத வகையில், தேர்தல் பத்திரச் சட்டம் நிறை வேற்றப்பட்டது. அரசியல் கட்சிகளுக்கு அதிகபட்சமாக ஒரு கம்பெனியின் மொத்த வருவாயில் ஏழரை சதவிகிதம்தான் நன்கொடை வழங்கலாம் என்ற அளவீடு வரம்பு (Cap) முன்பு இருந்ததையும் நீக்கி, எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம் என்ற ஒரு புதுத் தேர்தல் நன்கொடை முறையை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. (ஆர்.எஸ்.எஸ்.) அரசு 2017-2018 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை யில் தேர்தல் பத்திரங்கள் திட்டம்மூலம் அறிமுகப் படுத்தியது.
ரிசர்வ் வங்கி உள்பட எதிர்ப்புத் தெரிவித்தும் – அவற்றைப் பொருட்படுத்தாத மோடி அரசு
அதற்கு வழிவகை செய்யும் வகையில்,
1. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934
2. மக்கள் பிரதித்துவச் சட்டம் 1951
3. வருமான வரித்துறைச் சட்டம் 1961
4. கம்பெனிகள் சட்டம் 2013
ஆகியவற்றை – அத்துறையினரேகூட பல மாறு பட்ட கருத்துகளைக் கூறியும், அவற்றைப் பொருட் படுத்தாது, இதற்கு வசதியாக பல திருத்தங்களைச் செய்து இந்தத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை வெளியிட்டு நன்கொடைப் பெறுவதை அமலாக்கி பல ஆயிரம் கோடிகள் குவிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தின்படி, பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் ரூ.1000, ரூ.10,000, ஒரு லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை, நம் நாட்டைச் சேர்ந்த தனி நபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கி, தாங் கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கலாம்.
இதில் நிதி அளிக்கும் தனி நபர் அல்லது கார்ப்பரேட் கம்பெனி பெயர் உள்ளிட்ட எதுவும் இருக்காது.
இப்படி அளிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், அதைப் பணமாக மாற்றிக் கொள்ள தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்படி 15 நாள்களுக்குள் அந்தப் பத்திரத்தை மாற்றாவிட்டால், அத்தொகை பிரதமரின் பொது நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
ஏற்கெனவே இருந்த விதிமுறைகள்
தூக்கி எறியப்பட்டுள்ளன!
முன்பிருந்த நன்கொடைக்கான உச்சவரம்பு ஏழரை சதவிகிதம் – லாபம் பெறும் நிறுவனமா – நட்டத்தில் இயங்கும் நிறுவனமா என்பதையெல்லாம் அலசி ஆராய வகை செய்த பழைய சட்ட நடைமுறையும் இதில் விடைபெற்றுக் கொண்டது!
ஒரே ஒரு நிபந்தனை – இந்த தேர்தல் பத்திரம் (Electoral Bonds) மூலம் பணம் நன்கொடை பெற அந்த அரசியல் கட்சி குறைந்தபட்சம் – நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் ஒரே ஒரு சதவிகிதம் வாக்குகளையாவது பெற்ற கட்சியாக இருக்கவேண்டும்.
இதற்கு வழிவகை செய்யும் இந்த சட்டத் திருத்தங் கள் அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளுக்கும், வெளிப்படை தன்மைக்கும் முற்றிலும் விரோதமாக உள்ளதால், இவற்றைச் செல்லாததாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப் பட்டன!
ஏழரை சதவிகிதம்வரை நன்கொடை வழங்கலாம் என்ற வரைமுறையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது!
எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங் கள்மூலம் நன்கொடையைத் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குத் தரலாம் என்பதைப்போலவே, இன்னொரு பெரிய திருத்தம், முந்தைய சட்ட நடைமுறையில் வெளிநாட்டுக் கம்பெனிகள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர முடியாது என்ற அந்தத் தடையும் நீக்கப்பட்டு, அவர்களும் தாராளமாக, ஏராளமாக நன்கொடை தரலாம் என்ற புதிய திருத்தம் அதில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது!
முன்பு சுட்டிக்காட்டியதுபோல, நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) போன்றவை இத்திட்டத்திற்கு எதிரான கருத்துகளை மோடி அரசுக்கு எடுத்துச் சொன் னதையும்தான் தேர்தல் ஆணையமும், அதன் வெளிப் படைத்தன்மையைப் பறிப்பது இத்திட்டம் என்று கூறி, தனது ஆட்சேபனைகளை எடுத்து வைக்கத் தவறவில்லை.
மூன்று அமைப்புகள்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
நொடித்துப்போன கம்பெனிகள் கூட அரசின் சலுகையைப் பெறுவதற்கு, கருப்புப் பணம் செலவிட்டு, தேர்தல் பத்திரத்தை வாங்கி, நன்கொடை கொடுக்க வழி ஏற்பட்டால், அதன் விளைவுகள் மோசமாகும் என்று வருமான வரித்துறையும் எச்சரித்தது!
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது மோடி அரசு அவற்றை நிராகரித்தது.
இதனால்தான் இந்தத் தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக,
1. ஜனநாயக சீர்திருத்தச் சங்கம்
2. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
3. காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் ஆகியோர் தனித்தனியே வழக்குப் போட்டனர், உச்சநீதிமன்றத்தில்.
அதன் விளைவே – தலைமை நீதிபதி டி.ஒய்.சந் திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,
பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய அய்வர் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து, ஒருமித்த கருத்துடன், இந்தத் தேர்தல் பத்திரம்மூலம் நன்கொடை பெற்றுள்ளது செல்லாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு Landmark தீர்ப்பைத் தந்துள்ளனர்!
252 பக்கங்களைக் கொண்ட
உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு!
நான்கு நீதிபதிகள் கையொப்பமிட்ட ஒரு தீர்ப்பு வாசகங்களோடு, தனியே கூடுதலாக சில வாதங்களை யும் சுட்டிக்காட்டிட, தனியே ஒரு நீதிபதியும் எழுதி யுள்ள இந்த இரு பகுதித் தீர்ப்புகளும் சேர்ந்து 252 பக்கங்களில் விரிவாகப் பல்வேறு தரப்பின் வாதங் களையும், ஆணைகளையும் விவரித்து, தீர்ப்பினை வழங்கியுள்ளனர். (இறுதியில் அதைத் தருவோம்).
அதற்குமுன் வாசகர்கள் அறியவேண்டிய முக்கியத் தகவல்கள் நன்கொடைகள்பற்றி (ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் தந்துள்ள விவரங்கள்).
மார்ச் 18 – ஜனவரி 2024 வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனையின் வாயிலாக மொத்தம் 16,518.11 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது!
பத்திரிகைச் செய்திகளின்படி இந்தப் பட்டியலில் முதல் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி
1. பா.ஜ.க. – 6,565 கோடி ரூபாய் பத்திரங்கள்
2. காங்கிரஸ் – 1,547 கோடி ரூபாய் பத்திரங்கள்
3. திரிணாமுல் காங்கிரஸ் – 823 கோடி ரூபாய் பத்திரங்கள்
4. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 367 கோடி ரூபாய் பத்திரங்கள்
5. தேசியவாத காங்கிரஸ் – 231 கோடி ரூபாய் பத்திரங்கள்.
(ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் பணம் பெறவில்லை என்று மறுத்துள்ளது).
கடந்த 2022 – 2023 ஆம் நிதியாண்டில் மட்டும், பா.ஜ.க.வின் மொத்த வருமானம் 2,360 கோடி ரூபாய். இதில் தேர்தல் பத்திரங்கள்மூலம் ரூ.1,300 கோடி.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக வந்த நிதியில், பாதிக்கும் மேற்பட்டவை கார்ப்பரேட் நிறுவனங்களி லிருந்து கிடைத்துள்ளன.
(நடப்பு நிதியாண்டிற்கான கட்சி வாரியான தரவு தணிக்கை அறிக்கை பின்னரே வரும்).
இந்தத் தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத் தன்மை அறவே இல்லை. இது ஜனநாயகத்திற்கு மரண அடியாகும்.
இது எப்படி என்றால்,
வங்கி காசோலை கொடுத்து, தேர்தல் பத்திரங்கள் வாங்கிய ஒருவரிடமிருந்து பணம் கொடுத்து அதை வேறு ஒருவர் வாங்கலாம். அவர்மூலம் அரசியல் கட்சிக்குச் செல்லலாம். இதனால் நன்கொடை கொடுத்தவர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியாது!
நன்கொடை விவரங்களை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் வெளியிட வலியுறுத்தல்
1. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை கொடுத்தோர்பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது.
2. ஸ்டேட் பேங்க் உடனடியாக, தேர்தல் பத்திரங்கள் விற்பனையை நிறுத்தவேண்டும்.
3. இதுவரை தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர் அவற்றின் மதிப்பு, அவற்றை பெற்ற கட்சிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் 2024, மார்ச் 3 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திற்குக் கொடுக்க வேண்டும்.
4. இதுவரை கட்சிகள் அந்தத் தேர்தல் பத்திரங்களைப் பணமாக மாற்றாமல் வைத்திருந்தால், அந்தக் கட்சிகள் அவற்றை ஸ்டேட் பேங்கில் ஒப்படைக்கவேண்டும்.
5. நன்கொடை அளித்தவர்களின் வங்கிக் கணக்கில், அந்தப் பத்திரங்களின் விலையை ஸ்டேட் பேங்க் திருப்பி செலுத்தவேண்டும்.
இந்தத் தேர்தல் பத்திர முறை – கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கே என்ற முகமூடி போட்ட மோடி அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது!
6. வாக்காளர்கள் சரியான முடிவு எடுப்பதற்கு வசதி யாக கட்சிகள் பெறும் நன்கொடை குறித்தும், நன்கொடை வழங்கியவர்கள் குறித்தும் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.
இதை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19(1) ஏ பிரிவு உறுதி செய்கிறது.
நன்கொடை கொடுத்தது யார்? என்ற வெளிப்படைத் தன்மைக்கே இடமில்லை!
தேர்தல் பத்திரத்தில் யார் நன்கொடை அளிக்கிறார் என்ற தகவல் இடம்பெறாததால், தகவல் தெரிந்து கொள்ளும் (RTI) உரிமை மக்களுக்கு மறுக்கப்படுகிறது! அதனால் இந்தத் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நன்கொடைகளுக்கு வரவு- செலவு காட்டத்
தேவையில்லையாம்!
‘‘விற்பனையான தேர்தல் பத்திரங்களில் பெரும்பாலா னவை அதிகபட்ச தொகையாக ஒரு கோடி ரூபாய்க்கு உரியவை. பிரதிபலன் இல்லாமல் நன்கொடைகளை எதற்கு அரசியல் கட்சிகளுக்குத் தரப் போகிறார்கள்? இந்த ரகசியம் காக்கப்படுவதால், இந்தத் தேர்தல் பத்திரம் ஆளுங்கட்சிக்கே எப்போதும் சாதகமாக இருக்கும்.
அடுத்து மிகப்பெரிய நிறுவனங்கள் (கார்ப்பரேட்) தாங்கள் அளிக்கும் நன்கொடை குறித்த தகவல்களை தங்களுடைய வரவு – செலவுக் கணக்கில்கூட தெரிவிக்க வேண்டியதில்லை என்ற ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஏற்புடையதல்ல” என்றும் நிராகரித்துள்ளது உச்சநீதி மன்றம்!
‘‘அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு சட்டத்தையும், ஒரு நடைமுறையையும் தவறாகப் பயன்படுத்துவதை, அரசமைப்புச் சட்டம் ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது” என்று தீர்ப்பில் ஆணி அடித்ததுபோல் கூறியுள்ளது உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆணைகளில்.
திசைதிருப்ப வேறு வகைகளில்
ஒன்றிய அரசு முயற்சிக்கக் கூடும்!
நமது ஜனநாயகம் இதன்மூலம் மிகப்பெரிய ஆபத்திலிருந்து மீளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது நமது நம்பிக்கை என்றாலும், இதை திசை திருப்பும் வித்தைகளையும் யோசித்து, மறுசீராய்வு அல்லது அவசரச் சட்டம் என்ற வேறு பல ‘புதிய முயற்சிகள்’ வரவும் வாய்ப்பு உண்டு – ஆளுங்கட்சி எடுக்கவும்கூடும்!
மக்களுக்கு இது விளங்கும் வகையில் தீர்ப்பளித்த மாண்பமை நீதிபதிகளுக்கும், வழக்குப் போட்டு நீதி கேட்டுப் பெற்ற ஜனநாயகக் காவலர்களுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டும், வாழ்த்தும்!
இது இந்த 10 ஆண்டுகளில் பனிப் பாறைகளின் முனை மட்டும்தான் – (Tip of the iceberg).
மற்ற துறைகள்பற்றியும் வெளியே வரவேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20-2-2024
No comments:
Post a Comment