ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

ஆசிரியர் விடையளிக்கிறார்

featured image

கேள்வி 1 : நம்ம பெரியார் திடல் செல்லப்பிள்ளை, உங்கள் அபிமான தோழர், நாடாளுமன்ற ஹீரோ – மானமிகு ஆண்டிமுத்து இராசா அவர்களை எல்லோரும் தாக்குகிறார்களே ஏன்?
– எஸ்.நல்லபெருமாள், வடசேரி
பதில் 1 : முதலில் கேள்வியில் ஒரு சின்னத் திருத்தம். “பெரியார் திடலின் (தி.மு.க.) கொள்கைப் பிள்ளை” என்பது. அது பிரச்சாரத்தில் காய்த்த மரம். எனவேதான் கல்லடி அதிகம் பெறும் நிலை. நல்ல பயிற்சி – விழுப்புண் வீரர்களான நம் உடன்பிறப்புகளுக்கு இப்படிப்பட்ட பொன்னைப் புடம் போடும் அனுபவம் நல்லதுதானே!

கேள்வி 2 : தூத்துக்குடியில் போராடியவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு – டில்லியில் போராடியவர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு! தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதனால் பாஜகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர்களுக்குத் தெரியாதா?
– கு.வேல்முருகன், வேலூர்
பதில் 2 : யதேச்சதிகாரர்கள் உங்களைப் போல் சிந்தித்துப் பழக்கப்பட்டதாகத் தெரியவில்லை – வரலாற்றுப் படி – பார்த்தால்!

கேள்வி 3 : கூட்டணி இல்லாவிட்டாலும் பாஜகவின் பினாமியாகத்தான் அதிமுக இருக்கும் என்று தேர்தல் குறித்து விவாதிக்கும் போது கூறுகின்றனரே?
– ம.சந்தானமூர்த்தி, மதுராந்தகம்
பதில் 3 : கூட்டணியில் இரண்டு வகை. தேர்தலுக்கு முன்னாலும் பின்னாலும் – கூட்டணி இல்லை என்று கூறுவது சரியே! அளவுக்கு மீறிய சந்தேகம் யாருக்கும் நல்லதல்ல!

கேள்வி 4 : விலங்குகளுக்கு மதத் தலைவர் பெயர் மற்றும் சர்ச்சைக்குரிய பெயர் வைக்கவேண்டாம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து?
– வே.தாமரைச்செல்வி, மதுரை
பதில் 4 : நியாயம்தானே! அதை செல்லமாகப் பெயரிட்டு அழைக்கும்போது வீண் சர்ச்சை தேவையின்றி ஏற்படும் ஆபத்து உள்ளதே!

கேள்வி 5 : மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் சரியான திசையில் பயணிக்கிறதா?
– மனோஜ், மடிப்பாக்கம்
பதில் 5 : சட்ட நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகள். சரியாகத்தான் நமது தி.மு.க. அரசு உள்ளது. இதில் உரிமை – உறவு இரண்டில் முன்னுரிமை உரிமைக்கே என்றுதான் நடந்து காட்டுகிறது. வீண் பழிகளை நம்ப வேண்டாம்!

கேள்வி 6 : பாலியல் அத்துமீறல்களில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் மெத்தனம் குறித்து நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறாரே?
– ஆதித்யா, மேடவாக்கம்
பதில் 6 : செல்லமாக கடிந்து கொள்ளுவதால் பயனில்லை. அத்தகைய நிறுவனங்கள் தொடரலாமா என்று உயர்நீதிமன்றங்களில் தீர்வு காணப்பட வேண்டியது அவசரம். காரணம் பல பெண்களின் எதிர்கால வாழ்வு – பிரச்சினை இதில் உள்ளது.

 

கேள்வி 7 : உக்ரைன் – ரஷ்யா போர் முடிவில்லாது தொடர்வதற்கு பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் சதி காரணமா?
– தவம், மதுரை
பதில் 7 : இதற்கு ஆயுத விற்பனை வல்லரசுகளும், அய்.நா. என்ற ஒரு பல்லில்லா நிறுவனமும் அடிப்படையானவை. அந்தோ மனித உரிமையே! உன் பாடு இப்படியா ஆவது? பரிதாபம்! பரிதாபம்!!

கேள்வி 8 : “அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது – ஒட்டுமொத்த இந்திய மக்கள் மகிழ்ச்சியைக் கண்ட பிறகும், காங்கிரஸ் வெறுப்புணர்வோடு, எதிர்மறை எண்ணத்திலேயே வாழ்கிறது” என்று பிரதமர் மோடி சாடியுள்ளாரே…?
– செ.சாக்கியமுனி, காஞ்சி
பதில் 8 : இதுவே உண்மைக்கு மாறானது! இராமன் கோயில் திறப்பைப் பற்றி சங்கராச்சாரியார்களும், சிறீரங்கம் அய்யங்கார் பார்ப்பனர்கள் பலரும், மற்ற பல கட்சியினரும் மகிழ்ச்சியாக இல்லையே! மக்கள் இதனால் ஓட்டுப் போடுவார்கள் என்பது வீண் ஆசைகள். தேர்தலுக்குப் பிறகு பாருங்கள்!

கேள்வி 9 : காஸா மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தஞ்சமடைந்துள்ள கடைசி புகலிடத்திலும் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றது. அய்.நா.வும், உலக நாடுகளும் கைகட்டி, கண்மூடிக் கொண்டிருப்பது ஏன்?
– ஆ.வினோத், பொன்னியம்மன் மேடு, சென்னை
பதில் 9 : 7ஆவது கேள்விக்கான பதிலிலேயே இதற்கான விடை உள்ளது. படியுங்கள்!

கேள்வி 10 : ‘இந்துக்களுக்கென்று நடத்தை விதிமுறைகள் தயாரிக்கும் பண்டிதர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்று நாளேடுகளில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளதே. இது மீண்டும் வருணாசிரம கோட்பாட்டை கடைப்பிடிக்க ஆர்.எஸ்.எஸ்.சால் திட்டமிடப்பட்ட ஆபத்தான ஒன்றாகத் தெரிகிறதே?
– கவிதா, திருப்பத்தூர்
பதில் 10 : அதிலென்ன சந்தேகம்? ஹிந்து ராட்டிர ஒத்திகை இராமன் கோயில் மூலம் தொடங்கியது இப்படிப்பட்ட அறிவிப்புகளால் தொடர்கிறது போலும்!

No comments:

Post a Comment