இதுதான் குஜராத் மாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 17, 2024

இதுதான் குஜராத் மாடல்!

குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த திருமண மாப்பிள்ளை குதிரையில் சென்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஆதிக்க ஜாதி வெறி யர்கள், மாப்பிள்ளையையும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகி விட்டதாகவும், இந்தியாவில் அதிக வருவாய் ஈர்க்கும் மாநிலங்களில் அதுவும் ஒன்று எனவும் அதன் முன்னேற்ற புராணங்களைப் பலர் பாடி வருகிறார்கள். குஜராத் மாடலை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அங்கு பிற்போக்குத்தனமும், ஜாதி, மத வெறியும் ஊறிப்போய் மண்டிக் கிடப்பதைப் பல்வேறு நிகழ்வுகளின் மூலம் பார்க்க முடிகிறது.
இந்தியா முழுவதும் ரத்தக் கறை ஏற்படுத்திய மதக் கலவரம் ஏற்பட்ட மாநிலம் என்ற பெயர் குஜராத்தை விட்டு 22 ஆண்டுகளாகியும் மறையாத நிலையில், அந்தப் பெயரை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வகையில் ஜாதி, மதவெறி கொடூரங்கள் அங்கு அரங்கேறி வரு கின்றன. அந்த வகையில்தான் குஜராத் மாநில தலைநகரான காந்திநகர் மாவட்டத்தில் உள்ள சதாசனா கிராமத்தில் ஒரு ஜாதி வெறிக் கொடூரம் அரங்கேறி இருக்கிறது. ஆதிக்க ஜாதியினர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த திருமண மாப்பிள்ளையையும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கொடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள்.
கலாச்சாரம், பண்பாடு என்ற பெயரில் காலம் காலமாக நல்ல ஆடை, காலணி அணிய அனுமதி மறுக்கப்பட்டு, ஆதிக்க ஜாதியினரின் தெருவுக்குள் நுழைய தடை செய் யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இன்று குதிரையில் ஏறி அமரும் அளவுக்கு வளர்ந்து விட்டார்களே என்ற வெறித்தனமான காழ்ப்புணர்ச்சியில் ஜாதி வெறியர்கள் இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றி உள்ளார்கள்.
குதிரையில் அமர்ந்து திருமண ஊர்வலம் சென்ற மாப்பிள்ளை விகாஸ் சாவ்டாவை ஜாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தி தாக்கி இருக்கிறது ஜாதி வெறிக் கும்பல். குதிரை மீது அமர்ந்திருந்த மாப்பிள்ளை விகாஸை தாக்கி கீழே தள்ளிய அந்தக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட திருமண மாப்பிள்ளையின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மாப்பிள்ளையின் உறவினர் சஞ்சை சாவ்டா காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரில், “குதிரையில் இருந்து மாப்பிள்ளையை கீழே தள்ளி ஓங்கி அறைந்தார்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
“எங்கள் ஜாதியினர் மட்டுமே குதிரையில் ஏற முடியும். நீங்கள் ஏறவே கூடாது என்று சொல்லி அவர்கள் தாக்கினார்கள். காரில் ஏறி செல்ல வற்புறுத்தினார்கள்.” என்று அவர் தெரிவித்து இருக் கிறார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சைலேஷ் தாக்கோர், ஜெயேஷ் தாக்கோர், சமிர் தாக்கோர், அஸ்வின் தாக்கோர் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்புகூட ஒரு கோயில் திருவிழாவை வேடிக்கை பார்த்த தாழ்த்தப்பட்ட தோழரைத் தாக்கினர். மீசை வைத்திருக்கிறார் என்பதற்காகவும் ஒருவர் தாக்கப் பட்டுள்ளார்.
குஜராத்தில் தண்ணீர்த் தொட்டியில் தண்ணீர் எடுப்ப தற்குத் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு, தொட்டியில் எழுதி வைத்திருக்கும் கொடுமையும் அங்கு நிலவுகிறது.
இந்த இலட்சணத்தில் ‘குஜராத் மாடல்’ என்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு வாய் நீளம் காட்டுகிறார்கள்?
தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மையினரும், பிற்படுத் தப்பட்டோரும் ஒருங்கிணைந்து, மதவெறி பாசிச பா.ஜ.க. ஒன்றிய அரசை மட்டுமல்ல, பா.ஜ.க. ஆட்சி புரியும் மாநிலங்களிலிருந்தும் விரட்டியடிக்க உறுதி கொள்ள வேண்டும் – இது மிகவும் அதி முக்கியம்! முக்கியம்!!
கரணம் தப்பினால் மரணம்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

Post a Comment