(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
கவிஞர் கலி.பூங்குன்றன்
(2.2.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ்.
வார இதழான ‘விஜயபாரத’த்தின் பதில்களுக்குப் பதிலடி இங்கே!)
கேள்வி: நூல்களின் தேவை என்ன?
பதில்: சாஸ்திரத்தின் சாரத்தை அறிய வேண்டும். அதன்பிறகு நூல்களின் அவசியம் என்ன? சாரத்தை கிரகித்த பிறகு இறையனுபூதிக்காக ஆழ்ந்து மூழ்க வேண்டும். இறைவனே உண்மை – உலகம் உண்மை யல்ல என்ற வேதாந்தத்தின் சாரத்தை தேவி எனக்கு அறிய செய்தாள் – ராமகிருஷ்ண பரமஹம்சர்.
நமது பதிலடி: இறைவனே உண்மை – உலகம் உண்மையல்லவாம்! உண்மையற்ற உலகில் ஏன் வாழ்ந்து தொலைக்கிறார்களாம் – ராமன் கோயில் கட்டுகிறார்களாம். வேதத்தின் சாரத்தைப் பற்றி வேறு பேசுகிறது ‘விஜயபாரதம்’.
வேதத்தின் தரம் எத்தகையது என்பதற்கு இதோ ஒன்றிரண்டு இங்கே:
“தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீனம் தெய்வதம்
தன்மந்திரம் பிரம்மண உதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்”
– ரிக்வேதம் 62ஆவது பிரிவு, 10ஆம் சுலோகம்
இதன் பொருள்:
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது, கடவுள் மந்தி ரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராம்மணர் களுக்குக் கட்டுப்பட்டவை – பிராம்மணர்களே நமது கடவுள்.
– இந்த வேதத்தைத்தான் எல்லோரும் ஏற்க வேண்டுமாம். ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதத்தின் விபரீதப் புத்தியைப் பார்த்தீர்களா?
“இந்திரா! உன்னை இந்த அதிகாலைப் படைய லுக்குக் கூப்பிடுகிறோம். சோமரசம் பிழியப்பட்டிருக் கிறது. தாகமுள்ள மானைப் போல் குடி.
எங்கள் ஆசைகளை குதிரைகளாலும், பசுக்களா லும் நிறைவேற்று” (ரிக்வேதம், 163-165).
“இந்திரனே! பழைமையாகவே தொன்றுதொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும், முதலில் உள்ளவர்களைக் கிழித்தெறியவும், நடுவில் உள்ளவர்களை நசுக்கிக் கொல்லவும்.
எவ்வளவு நாட்கள்தான் நீ மனதிட்பம் இல்லாதவன் போல், இருப்பாய்? வேள்வியை வெறுக்கின்ற, தெய் வத்தை வணங்காத தாசர்களை, உனது எரியும் ஈட்டி களைச் செலுத்திக் கொல்லவும்.”
– ரிக்வேதம், 2710
விஷ்ணு இந்தப் பூமியை மூன்று அடிகளால் அளந் தான், ஆக்ரமித்தான் அந்தப் பூமியை எங்களுக்குக் கொடுத்தான். அவன் எங்கள் தலைவனாக இருக் கட்டும்.
– ரிக்வேதம், 5926
அவன் ஆரியர்கள் வசிப்பதற்கான, பூமியை – மூன்று உலகங்களையும் – அளந்தான் – ஆக்ரமித்தான், மாட்டுத் தலையால் தன் தலையை மறைத்துக் கொண்டு சண்டை செய்த, தாசனைக் கொன்றான்
– ரிக்வேதம், 5927
யார் இந்த ஆரியர்கள் – தாசர்கள்?
திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இத்தகைய விஷயம் ரிக் வேதத்திலேயே அனேக சுலோகங்களாக இருக்கின்றன”– டாக்டர் ரோமேஷ சந்திர மஜும்தார் எம்.ஏ. (‘பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும்’, பக்.22)
ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடையத் தளங்களில் திரா விடர்கள் – தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும் ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
இது ஆரியக்கவிகள் திராவிடர் மீது கெண்டிருந்த வெறுப்பைக் காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
– சி.எஸ்.சீனிவாசாச்சாரி எம்.ஏ.,
எம்எஸ்.இராமசாமி அய்யங்கார் எம்.ஏ.
(“இந்திய சரித்திரம்”, பக். 16,17)
(1) ஆரியர் – திராவிடர் என்பது வெள்ளைக்காரன் இட்டுக் கட்டியதல்ல – வேதங்களிலேயே இடம் பெற்றிருக்கிறது. வேதங்களில் கூறப்படும் தாசர்கள், தஸ்யூக்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்களே என்பதும், இந்திரன் ஆரியர்களின் போர்த் தலைவன் என்பதும், மொடாக்குடிகாரன் என்பதும் ரிக் வேதத்தி லேயே கூறப்பட்டுள்ளது என்று ஆதாரங்கள் கூறு கின்றனவே. வேதத்தின் சாரம் பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழ் ‘விஜயபாரதம்’ பதில் கூறி இருக்கிறதே – இந்தப் பதிலடிக்கு முன் அவை எல்லாம் தாக்குப் பிடிக்க முடியுமா?
– – – – –
கேள்வி: இறைவன் மீது நாம் செலுத்தும் பக்திக்கு என்ன பலன் கிடைக்கும்?
பதில்: இறைவன் எல்லா உயிரினங்களிலும் இருக் கிறார் என்பது உண்மைதான். ஆனால் ஒவ்வொரு வரும் தத்தம் சமஸ்காரம், செயல்களுக்கு ஏற்ப வினைப் பயனை அனுபவிக்கிறார்கள். சூரியன் ஒன்றுதான். ஆனால் அதன் ஒளியின் பிரதிபலன்கள் இடம், பொருளின் தன்மைக்கு ஏற்ப வேறுபடுகின்றன.
நமது பதிலடி: இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறார் என்று சொல்லிவிட்டு, ஒவ்வொருவரும் தத்தம் சமஸ்காரம் செயல்களுக்கு ஏற்ப வினைப் பயனை அனுபவிக்கிறார்களாம்!
எல்லோரையும் இறைவன் படைத்தான், எல்லா உயிர்களிலும் அவன் இருக்கிறான் என்ற சொல்லி விட்டு, வினைப் பயன் தனித்தனி என்பது எங்கிருந்து குதித்தது? அவனின்றி தான் எதுவும் அசையாதே – அப்படி இருக்கும் போது வினைப்பயன்களுக்குப் பொறுப்பும் அந்த இறைவன் தானே!
– – – – – –
கேள்வி: வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய ராகுலின் யாத்திரை குறித்து?
பதில்: மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்த நிலையில் தற்போது தான் அமைதிக்குத் திரும்பியுள்ளது. அது காங்கிரசுக்கு பொறுக்கவில்லையோ என்னவோ? அரசியல் ஆதாயம் தேடி கலவர பூமியில் யாத்திரையை தொடங்கியுள்ளார்.
நமது பதிலடி: மணிப்பூர் பற்றி எரிந்த போது 56 அங்குல மார்பளவு உள்ள பிரதமர் மோடி எங்கே போயிருந்தார்? மணிப்பூர் இந்தியாவில் இல்லையா? மணிப்பூரைத் தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு மட்டும்தான் மோடி பிரதமரா?
மணிப்பூரில் ராகுல் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டபோது மக்கள் வெள்ளம் கரைபுரண்ட தைப் பார்த்து சங்கிகளுக்கு வயிறெல்லாம் கலக்குக் கலக்கு என்று கலக்க ஆரம்பித்துவிட்டதோ!
– – – – –
கேள்வி: ராமன் கோயில் கும்பாபிஷேகத்தை எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் புறக்கணித்தது குறித்து?
பதில்: போடா! ஆண்டவனே என் பக்கம் என்று ரஜினிகாந்த் ஒரு படத்தில் வசனம் பேசுவார். அதுபோல ஒட்டுமொத்த தேசமே மோடி பக்கம் நிற்கும்போது நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன?
நமது பதிலடி: அரைகுறையாக ராமன் கோயிலைக் கட்டி தேர்தல் இலாபத்துக்காக பிரதமரே அர்ச்சகராக மாறி குடமுழுக்கு செய்ததற்கு சங்கராச்சாரியார்களே கடும் கோபத்தோடு எதிர்க்குரல் கொடுத்துள்ளார்களே. அதற்கு என்ன பதில் ‘விஜயபாரதமே!’
No comments:
Post a Comment