முதன்முதலாக விசாகப்பட்டினக் கடற்கரை அருகில்
தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர்
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால்!
ஆந்திர மாநிலம் – விசாகப்பட்டினத்தில் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு – நினைவேந்தலில் பங்கேற்று கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் புகழாரம்!
விசாகப்பட்டினம், பிப்.27 முதன்முதலாக விசாகப் பட்டினக் கடற்கரை அருகில் தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர் இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால். தொண்டர்களை ஒருங்கிணைத்து வெற்றி காண்பதில் மட்டுமல்ல, அதையும் கடந்து தன் அமைப்பிற்கும் மேலாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நல்லுறவோடு சமூகப் பணியாற்றுவதிலும் சிறந்து விளங்கியவர் ஜெயகோபால் என்று அவருக்குப் புகழாரம் சூட்டி நினைவேந்தல் உரையாற்றினார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள்.
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெயகோபால் 7.2.2024 அன்று உடல்நலக் குறைவால் விசாகப்பட்டினத்தில் காலமானார். அவரது நினை வேந்தல் நிகழ்வும், படத்திறப்பும் 25.2.2024 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
விசாகப்பட்டினம் – தாபா தோட்டப் பகுதியில் உள்ள அல்லூரி சீதாராமராஜூ விஞ்ஞான கேந்திரம் அரங்கில் காலையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங் கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.
டாக்டர் ஜெயகோபால் மறைவினையொட்டி இரங்கல் செய்தியினை அவரது குடும்பத்தாருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அனுப்பி யிருந்தார். ஜெயகோபால் அவர்களது மகன் ஜெ.ரவி அவர்களுடன் கைப்பேசி மூலம் பேசி ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்திருந்தார்.
டாக்டர் ஜெயகோபால் படத்திறப்பு நிகழ்ச்சியின் தொடக்கமாக வருகை தந்த தலைவர் கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் டாக்டர் ஜெயகோபால் படம் திறக்கப்பட்டது. அவரது நினை வைப் போற்றிடும் வகையில் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழர் தலைவரின் உரை திரையிடல்
படத்திறப்பு நாளன்று தமிழர் தலைவர், முன்னரே ஒத்துக்கொண்ட நிகழ்வு காரணமாக நேரில் செல்ல இயலவில்லை. இருப்பினும் டாக்டர் ஜெயகோபால் அவர்களின் சமுதாயப் பணி குறித்தும், நாத்திகக் கொள்கைக்கு அவர் ஆற்றிய அரும்பணி, மற்றும் பெரியாரின் கொள்கைகள் பற்றியும், பெரியார் நிறுவிய இயக்கத்துடனான தொடர்பு பற்றியும் விரிவாகப் பேசி, ஒளி-ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தமிழர் தலைவரின் உரை நினைவேந்தல் நாளன்று வருகை தந்தோர் கவனத்திற்கு திரையிடப்பட்டது. தமிழர் தலைவரது உரை மிகவும் உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. தலைவரது உரை அச்சு வடிவிலும் வருகை தந்தோருக்கு வழங்கப்பட்டது.
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் உரை
நிகழ்வில் பங்கேற்ற திராவிடர் கழகப் பொதுச்செய லாளர் வீ.அன்புராஜ் ஆற்றிய நினைவேந்தல் உரை யின் சுருக்கம் பின்வருமாறு:
இந்திய நாத்திகர் குழுவைச் சேர்ந்த தோழர்களே, டாக்டர் ஜெயகோபால் அவர்களின் மகன் தோழர் ரவி அவர்களே, தொண்டறத் திலகமாய் விளங்கிய ஜெய கோபால் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்ப உறுப்பினர்களே, மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரவணக்கம் செலுத்த வருகை புரிந்துள்ள நண்பர்களே, நலவிரும்பிகளே –
அனைவருக்கும் என் பணிவான வணக்கம்.
ஆந்திர மாநிலத்து இளைஞர்கள் பலரை ஒருங் கிணைத்து முன்னேற்றப் பாதையில், அமைதி வழியில் செல்ல வழிகாட்டியவர் ஜெயகோபால் அவர்கள். நாத்திகர்களாக அவர்களை உருவாக்கி பகுத்தறிவா ளர்களாகவும் மாற்றிய தொண்டறம் மிக்கத் தலைவராக வாழ்ந்தவர் ஜெயகோபால். இளைய தலைமுறையின ரின் முற்போக்குச் சிந்தனைகளுக்கு தளம் அமைத்த புகழ்பெற்ற நாத்திகராகவும், மனித நேயராகவும் போற்றப்பட்டவர் அவர். அவருக்கு வீர வணக்கம் செலுத்தவே நாம் அனைவரும் இன்று இங்கே ஒன்று கூடியுள்ளோம்.
மறைந்த ஜெயகோபால் அவர்கள், இளைஞர்களி டையே மனமாற்றத்தை ஏற்படுத்துவதோடு நின்று விடவில்லை. கேள்வி கேட்கும் மனப்பான்மையையும், எதையும் விமர்சிக்கும் ஆற்றலையும், துணிவையும் அவர் கூடவே வளர்த்துள்ளார். தன் கொள்கைகளை நாடெங்கும் பரப்பி அரிய களப்பணிகளை ஆற்றவும் அவர் இளைஞர்களைத் தயார்படுத்தியுள்ளார். அவரு டைய வியக்கத்தகு பணிகளால் விழிப்புணர்வு அடைந்த இளைஞர்கள் ஏராளம்! கைதேர்ந்த சிற்பியைப் போல் அவர்களைச் செதுக்கி வடிவமைத்து வளர்ச்சியடையச் செய்தவர் ஜெயகோபால். பொது வாழ்வில் இது எத்தகைய கடினமான பணி என்பதை நாம் அறிவோம். தான் மேற்கொண்ட இலட்சியப் பணியில் ஒருநாளும் சோர்வடைந்ததில்லை அவர். இலக்கை நோக்கி இடையறாது பயணம் மேற்கொண் டார். அவர் காட்டிய பாதையில் சென்று முன்னேறிய பல இளைஞர்கள் இன்று பல உயர்ந்த பதவிகளில் உள்ளனர். நாட்டின் பல மாநிலங்களில் நாத்திகர் அமைப்புகளையும் ஜெயகோபாலின் தொண்டர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தவர் அவர். இருவருமே ஒத்தச் சிந்தனையாளர்களாக பழகிவந்தவர்கள். திராவிடர் கழகத் தலைவரின் நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்தவர் அவர். நிகரற்ற சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் உருவாக்கிய பகுத்தறிவாளர், மனித நேயர் இயக்கம் எங்கள் திராவிடர் கழகம். இளம் வயதிலேயே இந்த இயக்கத்தால் ஈர்க்கப்பட்டிருந்தார் ஜெயகோபால். இயக்கத்தின் கருஞ்சட்டைப் படையினர் அவர்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருந்தனர். அந்தத் தாக்கத்தால் அவரால் உருவாக்கப்பட்ட அமைப்பே Atheist Society of India என்ற அமைப்பு – நாத்திகத் தோழர்களின் கூட்டமைப்பு. கருப்புச்சட்டை இந்த அமைப்பைச் சார்ந்த தோழர்களின் தனிப்பட்ட அடையாளமாகவே மாறிவிட்டது.
தந்தை பெரியாரின் அடிச்சுவடுகளைப் பின்பற் றியே திரு.ஜெயகோபால் இந்த Atheist Society of India (ASI) அமைப்பின் பணிகளைத் திட்டமிட்டுச் செய லாற்றி வந்தார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செய லகமாக உள்ள பெரியார் திடலுக்கு பலமுறை அவர் வருகை தந்துள்ளார். பல பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் பங்கேற்றுள்ளார். திராவிடர் கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கலந்துக் கொண் டுள்ளார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் ஜெயகோபால் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருந்தார். ஜெயகோபால் அவர்களின் அழைப்பின் பேரில் அவர் விசாகப்பட்டினத்திற்கு வந்து, தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று, தலைமை தாங்கி விழாவுக்குச் சிறப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரின் சிலையை விசாகப்பட்டினக் கடற்கரை அருகில் அமைக்க அரும்பாடுபட்டு அதற்கென அரும்பணியாற்றியவர் ஜெயகோபால். அப்போது ஒன்றுபட்ட மாநிலமாக விளங்கி வந்தது ஆந்திரா. முதன்முதலாக அங்கு தந்தை பெரியாருக்கு சிலை அமைத்த பெருமைக்குரியவர் ஜெயகோபால். தொண்டர்களை ஒருங்கிணைத்து வெற்றி காண்பதில் மட்டுமல்ல, அதையும் கடந்து தன் அமைப்பிற்கும் மேலாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நல்லுறவோடு சமூகப் பணியாற்றுவதிலும் சிறந்து விளங்கியவர் ஜெயகோபால். ஒத்த சிந்தனையுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் நல்லிணக்கம் கொண்டவராக அவர் இருந்தார். பல மாநிலங்களில் இயங்கும் மனிதநேய, தொண்டறப் பணி இயக்கங் களுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந் துள்ளது.
திராவிடர் கழகத்தைச் சார்ந்த நாங்கள் அவரை எங்கள் பெரியார் திடலுக்கு அழைத்து வரச்செய்து சிறப்பான முறையில் கவுரவிக்க எண்ணியிருந்தோம். உடல் நலிவுற்ற நிலையில் ஜெயகோபால் அவர்கள் இருந்ததால், அது இயலாமல் போயிற்று. தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்கள் தமது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், ‘பெரியார் விருது’ அளித்து எங்கள் ஆசையை நிச்சயமாக நிறைவேற்றிக் கொள் வோம். விரைவில் அதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு, சென்னையில் சிறந்த முறையில் அந்த விழா நடைபெறும் என்று உறுதியளிக்கிறேன்.
அடிப்படையில் நாம் அனைவரும் பகுத்தறிவாளர் கள்தான். உடலால் ஏற்படும் மறைவு நம் எல்லோருக் குமே துயரமான இழப்புதான். இயற்கையால் நாம் எல்லோருமே என்றேனும் ஒருநாள் காலமாகும் நாள் வரப்போவதும் நிச்சயமே. ஆனால் ஜெயகோபாலின் மறைவு மற்ற சாதாரண மனிதர்களின் மறைவுக்கு இணையானதா என்ன! வாழ்நாள் முழுவதும் ஒரு கொள்கைப் பற்றுடன் வாழ்ந்தவரின் மறைவல்லவா அது! இனிவரும் உலகத் தலைமுறையினருக்கு பாதை அமைத்து விட்டல்லவா மறைந்திருக்கிறார்
அவர்! எனவே தனது தோழர்கள் மத்தியில், தொண் டர்கள் மத்தியில் அவர் மறைந்தும் வாழ்வார் என்பது உறுதி. ஒரு கொள்கை வீரராக நம்மிடையே அவர் காலத்தால் அழியாமல் வாழ்ந்துகொண்டேதான் இருப் பார். நம்மால் அவருக்கு இந்த உறுதியின் மூலமாகத் தான் வீரவணக்கம் செலுத்த முடியும். அதை மன நிறைவோடு இன்று இங்கே செய்வோம். நண்பர்களே! இந்த நாட்டின் ஈடு இணையற்ற பல நாத்திகத் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய ஜெயகோபாலின் புகழ் ஓங்கட்டும்.
வாழ்க அவரது தொண்டறம்!
வாழ்க மனிதநேயம்!
அனைவருக்கும் நன்றி!
– இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தமதுரையில் குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளரின் ஆங்கில உரை தெலுங்கில் மொழிபெயர்த்து சொல்லப்பட்டது.
நினைவேந்தலில் கலந்து கொண்டவர்கள்
நிகழ்வில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்களின் விவரம் வருமாறு:
ஜே.வி.வி. சத்தியநாராயணமூர்த்தி – இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில உதவிச் செயலாளர், எம்.வி.எஸ். சர்மா – இந்திய மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த மேனாள் எம்.எல்.சி., வி.வி. ரமணமூர்த்தி – ‘லீடர்’ நாளிதழின் ஆசிரியர், சத்தியநாராயணா – ‘மனபூமி’ தெலுங்கு நாளேட்டின் ஆசிரியர், பல்டேட்டி பென்டாராவ் – தலித் சேனா, டி.லதா – சைதன்ய மகிளா சங்கம், கே.பத்மா – மகிளா சேத்னா, கண்ட மோகன்ராவ் – வழக்குரைஞர், சரத் – மனித உரிமைக் கழகம், சைனி நரேந்திரர் – தலைவர், அனைத்திந்திய ஓபிசி கூட்டு நடவடிக்கைக்குழு, ஜெ.ரவி அஜய், ஆர்.எஸ்.வி. முரளி – இந்திய நாத்திகர் சங்கம் மற்றும் பலர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்திய நாத்திகர் சங்கத்தின் நிறுவனர், ஆந்திரா நாத்திகர் இயக்கத்தின் முன்னோடி டாக்டர் ஜெய கோபால் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு அவருக்கு உரிய போற்றுதலையும், பெருமையையும் பறைசாட்டிடும் வகையில் வெகு சிறப்பாக அமைந்தது.
No comments:
Post a Comment