♦ புதுப்பொலிவுடன் அறிஞர் அண்ணா,
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடங்கள்!
♦ அரசியல் கலைப் பயிலகமாக –
கற்றிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளன!!
செயற்கரிய சாதனை படைத்துள்ள நம் முதலமைச்சரின்
வினைத் திட்பத்தை வியந்து பாராட்டி வாழ்த்துகிறோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களின் நினைவிடத்தை அரசியல் கலைப் பயிலகமாக கற்றிட மாக வடிவமைத்து இன்று திறந்து வைக்கும் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் வினைத் திட்பத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இடுக்கண்களையும் – சோக நிகழ்வுகளையும் – தவிர்க்க இயலாதவைகளையும் ‘தாங்கி எதிர் கொள்வதுதான் பகுத்தறிவாளர்களின் பக்குவப்பட்ட நடைமுறை. அதையும் தாண்டி அவற்றிலிருந்து படித்துப் பாடம் கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை பல தலைமுறைகளுக்குப் போதிப்பது அதனினும் உயர்ந்த வழிமுறை.
அதற்கான எடுத்துக்காட்டுத்தான் இன்று (26.2.2024) சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவிடப் புத்தாக்கமும் – அவரது அருகில் தனக்கும் இறுதிப் பயணத்திற்குப் பின் இடம் வேண்டும் – என்ற அவர்தம் அருமைத் தம்பி கலைஞரின் நினைவிடமும் – புதிய பொலிவுடன், அரிய கற்றிடம் போல் – 8.57 ஏக்கர்களில் அவர்களுக்குப்பின் அதே ஆட்சியை, வலிவுடனும், பொலிவுடனும் நடத்தி – இந்தியாவின் எடுத்துக்காட்டு ஆட்சியாக “திராவிட மாடல்” ஆட்சி நடக்கிறது என்று எத்திக்கும் சென்றடையும் ஆட்சியின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் இந்த நினைவிடம் ஒரு அரசியல் கலைப் பயிலகமாக – பார்வையாளருக்கு வரலாற்றுச் சுவடுகளைக் காட்டுகிறது. அரிய கொள்கை கலங்கரை வெளிச்சமாக அமைந்திருப்பது – ஒன்றரை மணி நேரம் அங்கே வகுப்பறைகளைப்போல் அமைக்கப்பட்டுள்ள நினைவிடமும் – ஆக அருகருகே அண்ணாவும் கலைஞரும் என்றும் ஒன்றியவர்களே தவிர விலகியிருந்து பழக்கப்பட்டவர்கள் அல்ல – என்று பலருக்கும் அறிவிப்பது போல அமைந்து வரலாறு படைக்கும் கொள்கைப் பரப்புக்கூடமாக்கிடும்.
அறிஞர் அண்ணா, கலைஞர் தம் பேனாக்களும் பேச்சு முழக்கங்களும் தான் ஆட்சி அமைப்பதற்கான அற்புத பரப்புரைப் பாசறை அடிக்கட்டுமானமாகும்!
நெருக்கடி காலத்தில் எதிர்க்கட்சி ஏடுகளில் “விடுதலை”யும் – “முரசொலியும்”தான் அதிகமாக ‘சென்சார்’ என்ற கத்திரிக்கோல் அதிகாரிகளான பூணூல் கரு நாகங்களால் தினசரி கொத்தப்பட்டு – செய்திகளுக்குத் தடை போட்ட நேரத்தில் – கலைஞரின் சாதுர்யம் வியக்கத்தக்க வகையில் – “பிப்.3 ஆகிய இன்று அண்ணா நினைவிடத்திற்கு வர வாய்ப்பில்லாதவர்கள் என்ற தலைப்பில் – ‘மிசா’வில் கைது செய்யப்பட்ட – தி.மு.க. இளைஞரணி மு.க. ஸ்டாலின், நீலநாராயணன், ஆற்காடு வீராசாமி, திராவிடர் கழகம் கி. வீரமணி” என்று ஒரு பட்டியலே போட்டு – இவர்கள் மிசா கைதிகளாக காராக்கிரகத்தில் அடைபட்டுக் கிடக்கின்றனர் என்பதை ஒரு புதுவகை உத்தியோடு, தணிக்கை அதிகாரிகளை தாண்டிய அறிவிப்பாக்க இந்த நினைவிடமும் பயன்பட்டது அன்று! இன்றோ! அதைவிட நாளும் நிரந்தர பிரச்சாரம் அங்கே!
செயற்கரிய சாதனை செய்துவரும் நம் முதலமைச்சர் அவர்களது வினைத் திட்பத்தை வியந்து பாராட்டி வாழ்த்துகிறோம்.
அவரது திட்டத்தை செம்மையாக செய்து முடித்த பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கும் பாராட்டுகள்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
26.2.2024
No comments:
Post a Comment