ஊர் புற நூலகர்கள் 446 பேருக்கு பதவி உயர்வு பள்ளி கல்வித்துறை அரசாணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 27, 2024

ஊர் புற நூலகர்கள் 446 பேருக்கு பதவி உயர்வு பள்ளி கல்வித்துறை அரசாணை

சென்னை, பிப். 27- தமிழ்நாட்டில் உள்ள 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு, 3ஆம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு அக்.4ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்போது பொது நூலகத்துறையில் 3-ஆம் நிலை நூலகர்கள் பணியிடம் 2,058 உள்ளது. இதில் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஊர்ப்புற நூலகர்கள் 1,530 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 446 பேருக்கு 3-ஆம் நிலை நூலகர்களாக பதவி உயர் வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும். இதற்காக அரசுக்கு ரூ.8.32 கோடி கூடுதல் செலவு ஏற்படும்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசுக்கு பொது நூலக இயக்குநர் எழுதிய கடிதத்தில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 1,915 ஊர்ப்புற நூலகர்கள் எவ்வித பதவி உயர்வும் இன்றி சிறப்பு காலமுறைஊதிய நிலையில் பணியாற்றிவருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தற்போது காலியாக உள்ள 446 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களில் அரசு விதிகளில் தளர்வுகள் வழங்கி, ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதை கவனமாக பரிசீலித்த தமிழ்நாடு அரசு, 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு தற்காலிக பணி விதிகளில் தளர்வு செய்து, மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்க அனுமதித்துள்ளது. இதன்மூலம், 8ஆம் படிநிலையில் உள்ள காலமுறை ஊதியத்தை பெறுவார்கள். இதற்காக ரூ.6.81 லட்சம் அரசு நிதியில் இருந்து வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment