பல நூற்றாண்டுகளாக சமூகநீதிக்காக ஏன் போராடினார்கள்? உரிமைகளை மீட்டார்கள்? காரணம் ஈராயிரம் ஆண்டுகளாக மூளையில் கடுமையாக கவ்விக் கிடந்த மூடநம்பிக்கை – மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட மாயைகளை – உண்மை என்று ஏற்றுக்கொண்டது – என பல விதங்களில் மக்களை அடிமைகளாக வைத்திருந்ததால் – அந்த அடிமைச்சங்கிலியை வெட்டி எடுக்க பகுத்தறிவுக் கோடரி தேவைப்பட்டது,
சமரசமில்லாத கொள்கைப் பற்றுக்கொண்ட தந்தை பெரியார் அந்தக்கோடரியை கையிலெடுத்தார். சங்கிலியை உடைத்தெறிந்தார். ஆனால் அந்தச்சங்கிலியை சில சூத்திரர்களோ புனிதக்கயிறுபோல தங்களின் கைகளில் தூக்கிக்கொண்டு திரிந்தனர்,.
அப்படி அலைந்தவர்களை இழுத்துக்கொள்ள ஆட்சி அதிகாரம் தேவைப்பட்டது. அது கைகளில் கிடைத்தது மோடி என்னும் தலைமைக்கு, ஒருபுறம் கார்ப்பரேட்டுகளின் அமோக ஆதரவு. மறுபக்கம் அத்தனை அரசமைப்பு நிறுவனங்களையும் தன் வயமாக்கியது. அரசமைப்புச்சட்டத்தை மதிக்காதது, நீதிமன்றத்தின் நடவடிக்கையையே கேலி செய்வது எனத் தொடர்ந்த அவர் – மதவெறியை ஊட்ட கையிலெடுத்த ஒரு ஆயுதம் கல்லுக்குப் பூஜை, கடலில், குளத்தில், ஆற்றில் தலைமுழுக்கு – வேற்று மதத்தவன் நமக்கு பகையாளி என்று நேரடியாகவே பேசத்துவங்கிவிட்டார் மோடி.
உத்தரப்பிரதேச தேர்தல் பரப்புரையின் போது எங்கு பார்த்தாலும் இஸ்லாமியர்களின் இடுகாடுகள் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஹிந்துக்களுக்கு ஒரே ஒரு கூரை – அதன் கீழே ஒரு மேடை – அதுவும் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உள்ளது – என்றார்.
அதற்கு ஒரு படி மேலே போய் – நாட்டில் கலவரம் செய்பவர்கள் அனைவரையும் அவர்களின் ஆடைகளைக் கொண்டே அடையாளம் கண்டுபிடிக்கலாம் – என்று கூறினார்.
இப்படி வடக்கில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டது மதவெறி. பார்ப்பனர்களை தெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற மறைமுக பரப்புரையையும் மோடி வேகமாகச் செய்தார்.
அவர் செல்லும் கோவில்களில் எல்லாம் பிரதமரை விட பார்ப்பனர்கள் தான் மேல் என்பது போல் அவர்களிடம் மோடி பவ்யமாக நிற்பதும், பார்ப்பனர்கள் ஆசி வழங்குவதும், அவர்களுக்கு முன்னுரிமை தருவதும் போன்ற நாடகங்களை நடத்தி பார்ப்பனர்கள் நம்மைவிட மேலானவர்கள் என்று பரப்புரை செய்துவருகிறார்
முதலில் கேதார்நாத், பிறகு பூரி என்று சுற்ற ஆரம்பித்த மோடி கடந்த ஆண்டு முதல் எப்பொழுதுமே கோவில் கோவிலாக சுற்றிக்கொண்டு இருக்கிறார். அவர் செய்வது எல்லாம் கல்லுக்கு ஒரு பூசை, அதற்கு ஒரு அர்ச்சனை,
“பிரானுபிரதிஸ்டா” என்ற பெயரில் மந்திரம் சொல்லி சிலையாக இருந்ததை “கடவுள்”ஆக்கிவிட்ட கல்லுக்கு ஒரு யாகம்,
யாகம் நடத்திய பார்ப்பானுக்கு தங்கத்தாலான பூஜைப் பொருட்கள், ரொக்கம், கார், பங்களா, ஆடை அணிகலன்கள் என வாரி வழங்கினார்.
பார்ப்பான் சொல்லிக்கொடுத்தபடி நமக்குக் கடவுளே கதி என்று நாள்தோறும் கோவிலில் ஒரு கும்பிடு, பார்ப்பான் காலில் விழுந்து கும்பிடு, கல் மீது பற்றுவை, கோவில், சாமி, பூசை, பார்ப்பான் – எல்லோர் மீதும் அளவற்ற காதல், பக்தி வைத்துக் கொள் – இல்லை என்றால் நீ தேசத்துரோகி என்ற பட்டம் வரும்.
முழுமையாக மதவெறி ஏற்றிய பிறகு மசூதிக்கு முன்பு சென்று கூச்சலிடு – ஓ சல்மா, பஜ்ரங்கி ஆரஹாஹே (ஓ இஸ்லாமியப் பெண்ணே இதோ உன்னைத் தூக்கிச் செல்ல அனுமானின் சேனைகள் வருகிறது) என்று கூச்சலிடுதல்,
இஸ்லாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்து வெட்டுதல், கொலை செய்தல் – 2018ஆம் ஆண்டு ஆகஸ்டில் மாட்டிறைச்சி வதந்தியால் கொல்லப்பட்டார் முகமது அக்லாக் என்ற முதியவர் – அவரைக் கொலை செய்தவர்களுக்கு அனல் மின் நிலையத்தில் வேலை தந்து உபசரித்தது – ஒன்றிய பிஜேபி மோடி அரசு.
இஸ்லாமியர்களைக் கொலை செய்தால் எதிர்காலம் சிறக்கும் என்ற ஒரு தகவலைப் பரப்பினர். விளைவு சிறிது சிறிதாக ஆண்டுக் கணக்கில், பார்ப்பான் அவன் சுகபோக வாழ்க்கைக்குக் வழியேற்படுத்தி மதத்தை வளர்த்து, அந்த மதத்திற்கு அடிமையாகிப்போன சூத்திரர்களிடம் ‘இதோ ஹிந்துக்களுக்கு ஆபத்து – முஸ்லீம்களைக் கொல்லு’ என்று வெளிப்படையாகவே டில்லியில் கூட்டம் போட்டு சாமியார்கள் கூச்சலிடுகின்றனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்தவர்கள் சாலையில் வந்த இஸ்லாமியர்களை தாக்கினர். அவர்களின் வீடுகள் வாகனங்களை அடித்துச் சேதப்படுத்தினர்.
எதிர்த்துக்கேட்ட இஸ்லாமியர்களின் வீடுகளை அரசே புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியது, 10 ஆண்டுகளாக மதவெறி ஏற்றிய பெருங்கூட்டத்தை பாரதிய ஜனதாகட்சியின் சேனைகளாக இருப்பதாக காட்டுகின்றனர்.
“பார்ப்பனர்கள் நமக்கு வழிகாட்டிகள். முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டு. இராமனை ஏற்க மறுப்பவனை அடி” என்ற ஒரு ஆபத்தான பாதையை காட்டி 100ஆண்டுகளாகச் சிரமப்பட்டு உடைத்த 2000 ஆண்டு கால அடிமைச் சங்கிலியை – அடிமையாகி போன சூத்திரர்களின் பஞ்சமர்களின் கழுத்தில் கட்டி தெருவில் அலைய விட்டு விடுவார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அந்த சங்கிலியை அனைவருக்கும் மாட்டிவிட முயலுவார்கள் – மறுப்போரை தீர்த்துக் கட்டி விடுவார்கள்.
10 ஆண்டுகளாக வடக்கில் புகுத்தப்பட்ட மதவெறி தற்போது கோரமுகத்தோடு தெற்கு நோக்கி திரும்பிட திட்டமிடுகிறது.
தேர்தல் நெருங்க நெருங்க மோதல் போக்குகளை பெரிய அளவில் ஏவி விடுவார்கள். இவ்வளவுக்கும் மதச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்துக்குச் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் இவர்கள் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment