தந்தை பெரியாரின் அருமையை பிரதமர் மோடி புரிந்து கொள்வாரா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 8, 2024

தந்தை பெரியாரின் அருமையை பிரதமர் மோடி புரிந்து கொள்வாரா?

அயோத்தி ராமன் கோவில் குடமுழுக்கு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடியால் கோவில் கருவறையில் ராமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை பிரதமர் மோடி எடுத்து வருவதற்கு பூரி சங்கராச்சாரியாரான நிச்சலானந்தா சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அயோத்தி குட முழுக்கிற்குச் செல்ல மாட்டேன் எனவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் பணி தொடங்கியது. கோவில் கட்டும் பணிக்காக சிறீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமன் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பணிகள் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்றது. சுமார் 70 ஏக்கர் நிலத்தில் ராமன் கோவில் அமைய உள்ளது. 3 அடுக்குகளாக நாகரா கட்டட கலைக் நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 161 அடி உயரத்தில் கோவில் கட்டும் பணி நடந்தது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாகப் பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டிக் கொண்டு வரப்பட்ட கற்கள் உதவியுடன் கோவில் கட்டப்படுகிறது.
தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அயோத்தி ராமன் கோவில் வரும் 22ஆம் தேதி குட முழுக்குடன் திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும் குட முழுக்கு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோவில் கருவறையில் நிறுவப்பட உள்ள 5 வயது குழந்தை வடிவ ராமனின் சிலையை எடுத்து வந்து வழங்க உள்ளதாகவும், அதன்பிறகு கோவிலில் அந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தான் குட முழுக்கில் பிரதமர் மோடி ராமன் சிலையை தொட்டு எடுத்து வருவதற்கு பூரி மடத்தின் சங்கராச்சாரியான நிச்சலானந்தா சரஸ்வதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
“ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் நடக்கும் ராமன் கோவில் குட முழுக்கில் பங்கேற்க வேண்டி அழைப்பிதழ் கிடைத்துள்ளது. அதில் ஒருவருடன் விழாவுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பங்கேற்கப் போவது இல்லை.
பிரதமர் மோடி கடவுள் சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்யும்போது நான் அங்கு நின்று கைகளைத் தட்டி கொண்டாட வேண்டுமா? இது கலாச்சாரத்துக்கு எதிரானது. ராமன் சிலையை பிரதமர் மோடி தொடுவது என்பது கண்ணியத்துக்கு எதிரானது. இதனால் நான் அங்கு செல்லப்போவது இல்லை. ராமன் சிலை பிரதிஷ்டையில் கண்ணியம் மீறப்படுவதை என்னால் பார்க்க முடியாது. நான் அதனைப் பார்க்க விரும்பவில்லை. மேலும் ராமன் கோவில் சிலை பிரதிஷ்டை என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ராமன் கோவில் விடயத்தில் நடத்தப்படும் அரசியல் தொடரக் கூடாது. தற்போதைய சூழலில் மத வழிபாட்டுத் தலங்கள் என்பவை சுற்றுலாத்தலங்களாக மாற்றப்படுகின்றன; இது ஆடம்பர விடயங்களை அங்கு சேர்க்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் என்பது சரியானது இல்ல.” எனக் காட்டமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அயோத்தி ராமன் கோவில் குட முழுக்கின்போது கோவில் கர்ப்பக்கிரகத்தில் ராமன் சிலையை பிரதமர் மோடி வைக்க உள்ள நிலையில் – விதிமுறைகளின் படி மோடி தற்போது விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறாராம். மேலும் குட முழுக்கு நடைபெறும் 22 ஆம் தேதி முழுவதும் பிரதமர் மோடி சாஸ்திரங்களின் படி விரதம் மேற்கொள்ள உள்ளாராம். மேலும் சரயு நதிக்கரையில் புனித நீராடிய பிறகே, குட முழுக்கு நிகழ்வில் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள முக்கிய பிரச்சினையைக் கடந்து போக முடியாது; மோடி ராமன் கோயிலைத் திறப்பதும் சங்கராச்சாரியார் பார்வையில் சாஸ்திரப்படி குற்றமாம்!

மோடி பிரதமராக இருந்து பயன் என்ன? சாஸ்திரப்படி, வருணப்படி சூத்திரர்தானே! இதனை எதிர்த்துத் தானே தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், அவர் கண்ட சுய மரியாதை இயக்கமும் – திராவிட இயக்கமும் போர்க்கொடி தூக்குகிறது!
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தேவை என்று தந்தை பெரியார் குரல் கொடுத்து, பல்வேறு தடைகளைக் கடந்து ஓரளவு தமிழ்நாட்டில் வெற்றி பெற்று இருக்கிறோமே – அது எப்படி என்பதை பிரதமர் மோடிஜி இப்பொழுதாவது உணர்வாரா?
மோடி விரதம் இருந்து பயன் என்ன? சரயு நதியில் குளித்து எழுந்து பலன் என்ன? சாஸ்திரப்படி தவறு என்று பூரி சங்கராச் சாரியார் கூறுகிறாரே –

இதன் பொருள் புரிகிறதா? இதற்குப் பதில் என்ன?
இப்பொழுதாவது பிரதமர் மோடிஜி தந்தை பெரியாரின் அருமையைப் புரிந்து கொள்வாரா?
பி.ஜே.பி. மற்றும் சங்பரிவார் வட்டாரத்தில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் உணர்ந்து கொள்வார்களா?
ஸநாதனத்தை எதிர்த்தால் தாண்டிக் குதிப்போர் சங்கராச் சாரியாரின் கருத்துக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
பிரதமருக்கே இந்தக் கதி என்றால் மற்றவர்களின் கதி என்ன?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

No comments:

Post a Comment