
தமிழராய் வாழவும், திராவிடராய் ஒன்றுபடவும் ஜாதி, மதங்களே தடை!
பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பேச்சு!
திண்டிவனம் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், 27.01.2024 அன்று, இராஜாஜி தெரு, எல்.கே.டவரில் பெரியாரி யல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் எனும் தலைப்பில் பேசிய கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழராய் வாழவும், திராவிடராய் ஒன்றுபடவும் ஜாதி, மதங்களே தடையாய் இருக்கின்றன எனப் பேசினார். மேலும் அவர் பேசியதாவது:
ஆபத்து நிறைந்த கொள்கைகள்!
அன்பு நிறைந்த மாணவச் செல்வங்களே!
இந்து, இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் என்கிற தலைப்பில் பேச இருக்கிறேன். நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த மூன்றையும் தான் ஒன்றிய அரசு கடைப்பிடித்து வருகிறது. அவர்களின் கொள்கையே அதுவாகத்தான் இருக்கிறது.
மூன்றுமே தனித்தனி வகுப்புகளாக எடுக்கக் கூடிய அளவிற்குப் பெரிய தலைப்புகள். அதேநேரம் ஆபத்து நிறைந்த கருத்துகள்.
இங்கே அமர்ந்திருக்கிற மாணவர்களில் எதிர்கால விஞ்ஞானிகள் இருக்கிறீர்கள், மருத்துவர்கள் இருக்கிறீர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள், நீதிபதிகள் எனப் பல துறைகளில் வர இருக்கிறீர்கள். ஆனால் இதைவிட சிறந்த மனிதர்களாக உருவாவது மிக முக்கியம். அதாவது பிற மனிதர்களுக்குத் தொல்லை தராத மனிதராக வாழ்வது மிக அவசியம். நாட்டை யார் வேண்டுமானாலும் ஆளலாம். ஆனால் மனிதத்தன்மை இல்லாதவர்கள் ஆண்டால், அந்த நாடு எவ்வளவு சீர்கெடும் என்பதை அறிவோம்!
இருப்பது ஒரு முகம்; பெயரோ ஆறுமுகம்!
இங்கே ஒரு தம்பி தன் பெயரை ‘ஸ்ரீ’ என்று சொன்னார். இப்படி ஒரு பெயரை நாம் கேள்விப்பட்டது இல்லை. முன் பின்னால் ஏதாவது பெயர் இருக்கும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. வெறும் ‘ஸ்ரீ’ என்று இருக்கிறது. பெற் றோர்கள் கூட இந்தப் பெயர்களை வைப்பதில்லை. யாரோ ஒருவரிடம் கேட்க, அவர்கள் வைத்து விடுகிறார்கள்.
பல இடங்களுக்குச் செல்கிற போது பெயரைக் கேட்டால் சிரிக்கவும், சிந்திக்கவும் நிறைய இருக்கிறது. கேசவன் என்கிறார்கள். சொல்வதற்கே சங்கடமாக இருக்கிறது. கேசம் என்றால் மயிர். கேசவன் என்றால் மயிரான். இன்னும் சிலர் ஆதிகேசவன் என்கிறார்கள். பழைய மயிரான் என்று பொருள். அதேபோல ஒரு முகத்தை வைத்துக் கொண்டு, ஆறுமுகம் என்கிறார்கள். மற்றொரு மாணவர் ஏழுமலை என்றார். மனிதருக்கும், ஏழு மலைகளுக்கும் என்ன தொடர்பு? இதைவிட கொடுமை ‘பாவாடை’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். என்ன பாவாடை என்றால் எம்.பாவாடை என இனிசியல் சேர்த்து சொல்கிறார்கள்.
இந்தப் பெயர்களுக்குப் பின்னால் இருக்கிற அரசியலை, ஆரிய சூழ்ச்சியை முறியடித்தவர் தந்தை பெரியார் தான்! எனவே வருங்காலத் தலைமுறை நீங்கள்
உங்கள் பிள்ளை களுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்!
தமிழனுக்கு என்ன தொடர்பு?
இந்த ஹிந்து, ஹிந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் என்பதே தமிழல்ல; அது சமஸ்கிருதம். எனவே இவை மூன்றிற்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அதேபோல ஜாதி என்பதும் தமிழ் கிடையாது. அதை சாதி என எழுதக் கூடாது. நம்மைப் பிரிக்க நினைத்த வட மொழிக்காரர்கள் உருவாக்கி யதே ஜாதி. இதன் எதனோடும் தமிழ், தமிழர், தமிழ்நாட்டிற்குத் தொடர்பு கிடையாது!
மதங்கள் நல்லதா, கெட்டதா என்பதல்ல கேள்வி. ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மூன்றுமே நமக்குத் தேவை இல்லா தவை. நம்மைத் தமிழராய் வாழவும், திராவிடராய் ஒன்று படவும் இந்த மதங்களே தடை செய்கின்றன. யானைக்கு மதம் பிடித்தால் பல பாதிப்புகள் நேரிடுகின்றன. மனிதனுக்கு மதம் பிடித்தால் கொலையே விழுகின்றன.
பயனற்ற சொல் – ஹிந்து!
தொடக்கத்தில் வைதீக மதம், வேத மதம் என்றார்கள். பிறகு ஹிந்து என்கிற பெயர் வந்தது. சிந்து நதிக்கரையில் வாழ்ந்த மக்களை அல்லது இடம் பெயர்ந்த மக்களை சித்துக்கள் என்றும், அதுவே நாளடைவில் ஹிந்துக்கள் என்றும் மருவியதாக சொல்கிறார்கள். அதேபோல ஹிந்து என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் திருடன் என்ற பெயரும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் ஹிந்து என்கிற சொல் நமக்குப் பயன்தரும் சொல் அல்ல!
கிறிஸ்தவ மதத்தை, அந்த மண்ணில் வாழ்ந்த இயேசு கிறிஸ்து உருவாக்கினார் என்று சொல்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஏற்ற வகையில், அவர்களுக்குச் சாதகமாக, அவர்கள் மொழியில் உண்டாக்கிக் கொண்டார்கள். அதே போல இஸ்லாத்தைத் தோற்றுவித்ததாகக் கருதப்படும் நபிகள் நாயகமும் அவர்களுக்கு உரியதை உண்டாக்கிக் கொண்டார்.
எந்த நாட்டிலிருந்து வந்தார்கள்?
ஆனால் ஹிந்து மதத்தை உருவாக்கியது யார்? அதி லுள்ள வேதம், சாஸ்திரம், சம்பிரதாயம் யார் உருவாக்கியது? அவை அனைத்தும் வெகுஜன மக்களுக்கு எதிராக இருப் பது ஏன்? மூன்று விழுக்காடு மக்களுக்கு ஆதரவாகவும், 97 விழுக்காடு மக்களுக்கு எதிராகவும் இருக்கிற மதம் யாருக்கு வேண்டும்? அதுவும் அவையனைத்தும் சமஸ் கிருத மொழியில் உள்ளன. நமது தாய்மொழி தமிழ்! நமக்கும், சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்? அதை உருவாக்கிய பார்ப்பனர்கள் எங்கு பிறந்தவர்கள்? அவர்கள் பழக்க வழக்கம், நடவடிக்கை என்ன? நமக்கும், அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபோது, அவர்களின் ஹிந்து மதம், அவர்களின் ஹிந்துத்துவா, அவர்களின் ஆர்.எஸ்.எஸ் நமக்கு எதற்கு?
நம் வீட்டில் நடைபெறும் விழாக்களின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் தானே இருக்கின்றன? நாக்கில் வேல் குத்தி நகர்வலம் வருகிறார்கள் நம்மவர்கள். ஏன் கண் வழியாகக் குத்தி, தலை வழியாக எடுத்து வர வேண்டியது தானே? ஆக பக்தி என்பதைக் காட்டிலும், பாதுகாப்போடு செய் கிறார்கள் என்பது தானே?
மொட்டை அடிக்க ஆடம்பரமா?
இங்கிருந்து திருப்பதி செல்கிறார்கள் மயிர் கொடுக்க! வெங்கடாசலபதி என்ன ஆந்திராவில் சலூன் நடத்துகிறாரா? உயிர் கொடுத்த கடவுளுக்கு மயிர் கொடுப்பது, கடவுளை அவமதிப்பது ஆகாதா? ஒரு விரலைக் கொடுக்கலாம், இரண்டு கட்டை விரலைக் கொடுக்கலாம் இன்னும் சொன்னால் பொருளாதார சிக்கனமாகக் கூட முடியைக் கொடுக்கலாமே?
உள்ளூரிலேயே சலூன் கடை சென்று மொட்டை அடிக்க வேண்டும். அந்த முடியைச் சேகரித்து, உறையில் போட்டு அஞ்சல் வழி சேர்க்க வேண்டியது தானே?
வெங்கடேச பெருமாள், மேல் திருப்பதி, ஆந்திரா மாநிலம் என்று முகவரி எழுதினால், மூன்று நாளில் வெங் கடாசலபதி கையில் கிடைத்துவிடும். மொட்டை அடிக்க ரூ 100, அஞ்சல் செலவு 100 என்றாலும் 200 ரூபாயில் எல்லாமும் முடிந்துவிடும். அதைவிட்டு நேரில் சென்று மொட்டை போட்டால் 5 ஆயிரம் அல்லவா செலவாகிறது?
பாடுபட்ட தலைவர் யார்?
அதேபோல மூக்கு குத்து, காது குத்து என ஒவ்வொன் றுக்கும் ஒரு விழா, அதற்கு பார்ப்பனர் அழைப்பு, ஊர் விருந்து என எவ்வளவு செலவுகள், எவ்வளவு துயரங்கள்!
பெரியார் என்ன சொன்னார்? இவை எல்லாவற்றையும் ஒழித்து மாணவர்களுக்குக் கல்வி, வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கொடுத்து, பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனக் கூறி அதற்காக மட்டுமே பாடுபட்ட தலைவர் அல்லவா பெரியார்!
இந்த மதங்கள் நம்மை எவ்வளவு முட்டாளாக வைத் துள்ளன. மதங்கள் என்றாலே அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அப்பாற்பட்டவை. அறிவுக்கு உட்பட்ட ஒன்று அறிவியல் மட்டும் தான்! மதத்தில் நல்ல கருத்துகள் இருக்கிறது எனத் தேடக் கூடாது, அது மலத்தில் கிடக்கும் அரிசியைப் போல!
இராமர் மட்டுமே கடவுள்!
அப்படிப்பட்ட ஹிந்து மதத்தை, ஹிந்துத்துவா தத்தவத்தை வளர்க்க சுமார் 13 ஆயிரம் பேர் வரை வேலை செய்கிறார்கள். அதுவும் திருமணம் செய்து கொள்ளாமல், தன்னார்வலர்களாகப் பணி செய்கிறார்கள். “நாங்கள் சொல் வதைக் கேளுங்கள், எங்களோடு சேர்ந்து இயங்குங்கள், எங்களை எதிர்க்காதீர்கள், மீறினால் கொலையும் செய் வோம்”, என நேரடியாகவும், மறைமுகமாகவும் மிரட்டு கிறார்கள். அதற்கேற்றார் போல தடி, கம்பு, கத்தி, அரிவாள், வீச்சு என வன்முறை பயிற்சி கொடுக்கிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கையாக இருந்து வருகிறது!
பாரதமே ஒரே நாடு, ஹிந்தியே ஒரே மொழி, ஒரே ஹிந்துக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லி, இப்போது இராமர் மட்டுமே ஒரே கடவுள், உங்கள் முருகனை எல்லாம் தூக்கி ஓரத்தில் போடுங்கள் என்கிற அளவிற்கு வந்து விட்டார்கள். ஆக இந்தியா முழுவதும் ஒரே கடவுள் என்கிற நிலைக்கும் அவர்கள் வந்துவிட்டார்கள்.
ஆற்றல் கொண்ட எங்கள் ஈ.வெ.ராமசாமி!
ஹிந்து ராஜ்யம் என்பது, ஹிந்துத்துவா ராஜ்யம்! ராம ராஜ்யம் என்பது பார்ப்பன ராஜ்யம்! அது ஒருபோதும் பிற்படுத்தப்பட்டவர்களின் ராஜ்யமாக இருக்காது; ஒடுக்கப்பட்டோரின் ராஜ்யமாக இருக்காது.
எனவே வெளிச்சத்திற்கு வாருங்கள் என நாம் அழைக் கிறோம்! இருட்டிற்குள் தள்ள அவர்கள் அழைக்கிறார்கள். எனவே நாம் விழிப்பாய் இருக்க வேண்டும்.
அந்த ராமரை வெல்லும் ஒரே ஆற்றல், நமது ஈ.வெ.ராமசாமி பெரியாருக்கு மட்டுமே உண்டு”, என துரை. சந்திரசேகரன் பேசினார்.
தலைப்பும்; வகுப்பும்!
தந்தை பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில், பகுத் தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரி சாமி, சமூகநீதி வரலாறு எனும் தலைப்பில், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி வகுப்பெடுத்தனர்.
மேலும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள், பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எனும் தலைப்பு களில் கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனை வர் க. அன்பழகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தனித் தன்மைகள் எனும் தலைப்பில் தகவல் தொழில் நுட்பக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில் வம் வகுப்பெடுத்தனர்.
சான்றிதழ் வழங்கல்!
செக்கடிக்குப்பம் காத்தவராயன் இயக்கப் பாடல்களைப் பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளரும், பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளருமான இரா.ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டுரை வழங்கினார். இறுதியில் மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் நன்றி கூறினார்.
வகுப்பில் சிறப்பாகக் குறிப்பெடுத்த அனந்தமங்கலம் பா.நிவேதா, ரோசனை ப.சுஸ்மிதா, அனந்தமங்கலம் கே.பிரியங்கா ஆகியோருக்கு முறையே ரூ.1000, ரூ. 500,
ரூ. 250 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் குழுப்படம் எடுக்கப்பட்டது. இயக்க நூல்கள் 1850 ரூபாய்க்கு விற்பனை ஆகின.
No comments:
Post a Comment