கேள்வி: இறைவன்மீது நாம் செலுத்தும் பக்திக்கு என்ன பலன் கிடைக்கும்?
பதில்: இறைவன் எல்லா உயிரினங்களிலும் இருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், ஒவ்வொருவரும் தத்தம் சம்ஸ்காரம், செயல்களுக்கு ஏற்ப வினைப்பயனை அனுபவிக்கிறார்கள். சூரியன் ஒன்றுதான். ஆனால், ஒளியின் பிரதி பலன்கள் இடம், பொருளின் தன்மைக்கு ஏற்ப வேறுபடுகிறது.
– ‘விஜயபாரதம்’,
(ஆர்.எஸ்.எஸ்.
வார இதழ்), 5.1.2024, பக்கம் 35
இறைவன் தானே எல்லா உயிரினங்களையும் படைத்தான் என்றால், அவனால் படைக்கப்பட்ட உயிரினங்களில் குறிப்பாக மனிதர்களுள் ஏற்றத் தாழ்வு ஏன்? ஒருவன் ஏன் உயர்ஜாதி? இன்னொருவன் ஏன் கீழ்ஜாதி? ஒருவன் ஏன் பணக்காரன்? இன்னொருவன் ஏன் அன்றாடங்காய்ச்சி?
ஒவ்வொருவருக்கும் சம்ஸ்காரம் வேறுபடுவது ஏன்? செயல்களுக்கு ஏற்ப வினைப் பயனை அனுபவிக்கிறார்கள் என்றால், ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, வினைப் பயன் என்பது முரண்பாடு அல்லவா? அந்த வினையும் – ‘அவனின்றி ஓரணுவும் அசையாது’ என்பதற்குள் அடங்காதா? சூரியன் ஒன்றுதான். ஆனால்,அதன் ஒளியின் பிரதிபலன்கள் இடம், பொருளின் தன்மைக்கு ஏற்ப வேறுபடுகிறதுதாம்.
அப்படிப் பார்த்தாலும் அந்த சூரியனைப் படைத்தவனும் இறைவன்தானே! சூரிய ஒளியின் பிரதிபலன்களில் ஜாதியைப்போல பிறப்பின் அடிப்படையில் உயர்வு – தாழ்வு உண்டா?
இறைவன்தான் படைத்தான் என்றால், அவனிடம் பக்தி செலுத்தினால்தான், நேர்த்திக் கடன் செலுத்தினால்தான் பலனும், வரமும் கிடைக்குமா? அப்படி என்றால், இறைவன் இலஞ்சம் வாங்கியா அல்லது தற்பெருமைக்காரனா?
இறைவன் ஒருவன்தான் என்றால், ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி இறைவன் ஏன்? ஒரு மதத்துக்காரன் இன்னொரு மதக்காரனின் கடவுளை ஏற்றுக்கொள்ளாததோடு – பகை உணர்ச்சியைக் காட்டுவது ஏன்? இன்னொரு மதக்காரனின் குருதியை உறிஞ்சுவது ஏன்?
இன்னொரு மதக் கடவுளின் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தரைமட்டமாக்கு வானேன்? அப்படி இடிக்கப்பட்ட இடத்தில் இன்னொரு மதக்காரன், தங்கள் கடவுள் என்று சொல்லிக் கோவில் கட்டுவது ஏன்?
சர்வ வியாபி இறைவன் என்று சொல்லிவிட்டு, கோவில் கட்டி அங்குதான் இறைவன் இருக்கிறான் என்பானேன்?
முதல் கோணல் முற்றுங்கோணல் என்பதுபோல், இல்லாத ஒன்றைக் கடவுள் என்று சொல்லப் போய், அதை நிரூபிக்க முன்னுக்குப் பின் முரண்பாடுகளை அள்ளிவிட்டு முட்டிக்கால் போடுவானேன்?
பதில் சொன்னால், நல்லது!
– மயிலாடன்
No comments:
Post a Comment