சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றை நினைவூட்டிய ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் அவர்களது படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 30, 2024

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு வரலாற்றை நினைவூட்டிய ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் அவர்களது படத்திறப்பு - நினைவேந்தல்

featured image

சென்னை, ஜன.30 சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடித் தூண்களில் ஒருவராக தந்தை பெரியாருக்கு பெரும் துணையாக இருந்த சுயமரியாதைச் சுடரொளி மாயவரம் நடராசன் அவர்களின் மகனார் ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் (வயது 92) 19.1.2024 அன்று பெங்களூருவில் காலமாகி அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அடுத்த நாள் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த ஆடிட்டர் அவர்களின் இறுதி நிகழ்வு நாளிலேயே திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சி.என். ஜெயச்சந்திரன் அவர்களது படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சியினை திராவிடர் கழகம் ஏற்று நடத்திடும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் அவர்களின் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்வும் சென்னை – பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (29.1.2024) மாலை 5 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. சி.என். ஜெயச்சந்திரன் அவர்களின் படத்தோடு அவரது தந்தையார் மாயவரம் நடராசன் அவர்களது படத்தினையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரையினை ஆற்றினார்.

நியூசெஞ்சுரி புத்தக நிலையத்தின் பதிப்பாசிரியரும், ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் அவர்களின் தங்கை (மங்கையர்கரசி – பன்னீர்செல்வம்)யின் மகனுமான பொறியாளர் தோழர் ப.கு. இராஜன் அவர்கள் தங்களது குடும்ப நிகழ்வுகளை – மூன்று தலைமுறை சார்ந்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஆடிட்டர் ஜெயச்சந்திரன் அவர்களால் பட்டயக் கணக்காயர் தொழிலில் பழக்கமான, பழக்கிவிட்ட, பயிற்சியளிக்கப்பட்ட ஆடிட்டர் இரா. இராமச் சந்திரன், ஆடிட்டர் ஜான் மோரிஸ், வழக்குரைஞர் பாண் டியன் ஆகியோரும் உரையாற்றினர்.
படத்திறப்பிற்கு முன்னர் மாயவரம் நடராசன் – ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் ஆகியோர் பற்றிய சுயமரியாதை இயக்க ஈடுபாடு, ஆடிட்டர் அவர்கள் மறைவு வரை திராவிடர் கழகத்துடன் தொடர்பில் இருந்த செய்திகளை எடுத்துரைத்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அறிமுக உரையாற்றினார். நிகழ்ச்சிகளை கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொகுத்து வழங்கிட நிகழ்ச்சியின் நிறைவாக பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்றத்தின் செயலாளரும், ‘புதுமை இலக்கியத் தென்றல்’ அமைப்பின் தலைவருமான பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

படத்திறப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கழகப் பொருளாளர் வீ. குமரேசன் மற்றும் பகுத்தறிவாளர் கழக தென் சென்னை மாவட்ட தலைவர் மு.இரா. மாணிக்கம் கவனித்தனர்.
நிகழ்ச்சிக்கு தொழில் முறையில் ஆடிட்டர் ஜெயச் சந்திரன் அவர்களுடன் பழக்கமுள்ள பெரு மக்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பலரும் வருகை தந்து நினைவேந்தலில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment