நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

featured image
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவரும் – பன்முக ஆற்றலாளருமான
தோழர் சு.அறிவுக்கரசு மறைந்தாரே!
நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!
திராவிடர் கழகத்தின் முதுபெரும் தொண்டர்களில் ஒருவரும், கழக செயலவைத் தலைவருமான எம் அருமைத் தோழர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் (வயது 84) இன்று (22.1.2024)  நள்ளிரவு 12.05  மணியளவில் உடல்நலக் குறைவினால் காலமானார் என்ற செய்தியை விடியற்காலையில் அறிந்ததும் சொல்லொணா, தாங்கொணா வேதனையும், துன்பமும், துயரமும் அடைந்தோம்.
அவர் என்றும் – இறுதிவரையில் என்மீது பாசம் மாறாத பண்புள்ளம் கொண்டவர். பள்ளிக்கூடத்து சிறுபிள்ளையாக அவர் நான் படித்த பள்ளிக்கூடத்தில், எனக்குப் பிறகு படித்தவர். கல்விப் பள்ளியில் மட்டு மல்ல; இயக்கப் பள்ளிக் கூடத்திலும் என்னைத் தொடர்ந்து படித்துப் பக்குவப்பட்டு, அரசு ஊழியனாய் தொடங்கி, பெரிய அரசு அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பு வகித்து வளர்த்த ஆற்றலாளர்.
அவரது நினைவு வன்மை, எழுத்து, பேச்சாற்றல் எல்லாம் இணையற்றவை.
பழைய அரசியல், இயக்க நிகழ்வுகளைக் கணினி போன்று ‘பட்’டென்று கூறக் கூடியவர்.
எதற்கும் அஞ்சாத ஒரு லட்சியப் போர் வீரர். அவரது தந்தையார் மானமிகு சுப்பிரமணியன், கடலூரில் முது பெரும் சுயமரியாதை – நீதிக்கட்சி வீரர்.
தந்தை பெரியாரின் தலைமையேற்ற தடுமாற்ற மில்லாத உவமையற்ற தெவிட்டல் இல்லா நடையுடைய தெருப் பிரச்சார தீரர்!
அதே வார்ப்பாளர் அறிவுக்கரசு. அய்யாவின் இயக்கத்தின் செயல்வீரராக, அரசு ஊழியத்தில் இருந்தபோதிலும், பதவி ஓய்வு பெற்றும் – கொள்கை பரப்பும் வாய்ப்பைப் பெற்று கடமையாற்றி சரித்திரம் படைத்தார்.
எம்மால் உருவாக்கி வார்க்கப்பட்ட கொள்கைத் தங்கம் அவர். சிலிர்த்து எழுந்து கர்ஜிக்கத் தவறாத கழகச் சிங்கம்!
அவருக்கு வீர வணக்கம் கூறும் நிலை, நமக்கு ஏற்பட்டு விட்டதே என்ற துயரம் எம்மைத் துளை யிட்டுத் துயரத்தை வடியச் செய்கிறது – துணை போயிற்றே என்பதால்!
என்றாலும், அவரது இயக்கப் பணியின் தனிச் சிறப்பாகவும்கூட இதனை மாற்றி, கழகம் ஆறுதலைத் தேடிக் கொள்ளத்தான் வேண்டும்.
‘‘புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து” (குறள் 780).
‘‘நம்மைப் போற்றிக் காப்பாற்றும் அரசனின் கண்களில் நீர் பெருகும்படியாகப் போரிலே வீரர் சாக நேர்ந்தால், அத்தகைய சாவானது அவரால் இரந்தும் கொள்ளத்தக்க சிறப்புடையதாகும்.”
(இதில் போர் என்பது கொள்கைப் போர்; அரசர் என்பது இயக்க அமைப்பு என்று கொள்க!).
அவரைப் பிரிந்து வருந்தும் அவரது அன்புச் செல்வன் பொறியாளர் அ.மணி நிலவன் – எஸ்.கவிதா (நியூசிலாந்து), மகள்கள்: அ.பொன்னெழில்ராம்தாஸ் (சென்னை), அ.அருளரசி – ஏ.வில்வநாதன் (கடலூர்), அ.இளவேனில் – ஜெயக்குமார் (சென்னை), பேரப் பிள்ளைகள் பி.ஆர்.பவுதினி – கே.பிரபாகரன்,
பி.ஆர்.செங்கோ, ஏ.வி.அகில், பி.எம்.ஆதிரை, ஏ.வி.பாமகள், பி.எம்..அணிச்சம், இ.ஜே.அன்றில், கொள்ளுப் பேத்தி பி.பி.நறுமுகை ஆகிய குருதி உறவுகளுக்கும், கழக உறவுகளுக்கும் ஆறுதல் கூறி, வழியும் கண்ணீரோடு வீர வணக்கம் செலுத்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை 
22.1.2024 
குறிப்பு: மறைந்த அன்னாரது விழிகள் கொடையாக அளிக்கப்பட்டன. நாளை அவரது  உடல், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக்  கொடையாக அளிக்கப்படும்.

No comments:

Post a Comment