பொதுவாக நம் வாழ்வில் நடக்கும் பல கெட்ட விஷயங்களுக்கு “நேரம் சரியில்லை, நல்ல நேரம் வரும்போது சரியாகிவிடும்” என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்போம்.
அப்படியிருக்க, “இந்தக் கோயிலுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்தால் கெட்ட நேரத்தையும், நல்ல நேரமாக மாற்றிவிடும் சக்தி படைத்தது” என்று கூறி வருகின்றனர். இந்தக் கோயில் எங்கு அமைந்துள்ளது என்பதைக் குறித்துப் பார்க்கலாம்!
மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் சிலார்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்குதான் சிறீ காலதேவி கோயில் உள்ளது. இங்கு சாதாரண நாட்களை விட பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மட்டுமே பிரசித்தி பெற்றுள்ளதாகக்கூறி பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். கோயிலின் கோபுரத்திலேயே ‘நேரமே உலகம்’ என்று எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்ற பலவற்றையும் இயக்கும் சக்தியைப் படைத்த காலதேவி கோயிலுக்குச் சென்று தரிசித்து வந்தால் கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற முடியும்” என்பது இந்தக் கோயிலின் அழிக்க முடியாத நம்பிக்கையாம். “இந்தக் கோயிலுக்குச் சென்று தரிசித்து வந்த பலரது வாழ்விலும் நன்மைகள் நடந்துள்ளன” என்றும் கூறி வருகின்றனர்.
காலதேவி கோயிலின் முக்கிய சிறப்பாக கூறப்படுவது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மட்டுமே நடை திறக்கப் படுமாம், சூரிய உதயத்திற்கு முன்பாக நடை சாத்தப்படுமாம்; பவுர்ணமி மட்டுமல்லாது, அமாவாசை நாட்களிலும் விசேடமான நாளாகவே கருதப்பட்டு வருகிறது. கால தேவிக்கு உகந்த நாள் அமாவாசை தான் என்று அக்கோயிலின் பூசாரிகள் கூறி வருகின்றனர்.
“உருவமற்றது கடவுள் – கடவுள் ஒருவரே – அவன் சர்வ வியாபி – அதாவது தூணிலும் இருப்பான் – துரும்பிலும் இருப்பான் – கருணையே வடிவமானவன்” என்று கூறுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் நடப்பில் இருப்பதெல்லாம் இவற்றிற்கு முற்றிலும் மாறானவையே!
ஹிந்து மதத்தில் கூறப்படும் நல்ல நேரம், கெட்ட நேரம், முசுலிம், கிறித்துவ மதங்களில் உண்டா? ஹிந்துக்கள் கூறும் அந்தக் கெட்ட நேரத்தில் முசுலிம்களோ, கிறித்தவர்களோ ஏதாவது காரியங்களில் ஈடுபட்டால் அவை கெட்டுப் போய் விடுமா? அப்படிக் கெட்டு விட்டதாக ஏதாவது தகவல்கள் உண்டா?
ஹிந்து மதம் கூறும் அந்தக் கெட்ட நேரத்தில் இரயிலோ, விமானமோ புறப்பட்டால் விபத்து ஏற்பட்டு விடுமா? அவர்கள் கூறும் நல்ல நேரத்தில் இவை புறப்பட்டால் விபத்தே நடக்காது என்பதற்கு உத்தரவாதம் உண்டா?
இப்படி நல்ல நேரம், கெட்ட நேரம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, கெட்ட நேரத்தை மாற்றி அமைக்கும் அதிசய கோயில் சிலார்பட்டி’ என்ற ஊரில் இருக்கிறது என்று சொல்லுவதெல்லாம் எத்தகையதொரு பித்த லாட்டம்?
பக்தி என்பது ஒரு வியாபாரம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னாரே – அவர் வாய்க்கு ஒரு கிலோ சர்க்கரையைத்தான் அள்ளிப் போட வேண்டும்.
ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சக்தி, அற்புதம் என்பது எல்லாம் “எங்கள் கடைக்கு வாருங்கள் – ஒரு புடவை வாங்கினால், இரண்டு புடவைகள் இனாம்” என்று விளம்பரம் செய்வது போன்றதுதான் – இந்த அக்கப் போர்கள் எல்லாம்!
No comments:
Post a Comment