நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்கிறோம்.
அது ஒரு நல்ல ஒருங்கிணைந்த அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிச்சம்; நட்பின் புத்தாக்கம்.
ஆனால் அதுவே காலப் போக்கில் பலருக்கு சடங்கு சம்பிரதாயமாக மாறி விடுகிறது!
மகிழ்ச்சியை வரவேற்று மகிழும் நம் மனங்கள் சோகங்கள் வந்து நம்மை வருத்தும் போது அதை நாம் நல்ல மனப்பக்குவத்துடன் ஏற்கவும் பழகத்தான் வேண்டும்.
எதிர்பார்ப்பில்லாத எவருக்கும் ஏமாற்றம் என்றுமே ஏற்பட்டதில்லை. ஏமாற்றம் ஒருபோதும் அவர்களை சோகத்தில் தள்ளிட முடியாது.
பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய நாம் நமது பகுத்தறிவைப் பண்பட்ட பகுத்தறிவாக்கிக் கொண் டோமேயானால் சோகங்கள் நம்மை சோர்வில் தள்ளாது!
சிலரின் சோர்வு, அப்பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணாமலேயே தடுத்து விடுகிறது!
எவ்வளவு துன்பம், துயரம், சோகம் வரினும் கவலை கொள்ளாது Stop Worryin என்று முதல் படியாக யோசித்து, அதிலிருந்து விடுபட வேண்டும். நமது அடக்கமும், ஆழமும் மிகுந்த தன்னம்பிக்கை, நன்னம்பிக்கை (Optimism) மூலம் விடியலை – தீர்வை – கண்டறிந்து நம்மால் அப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். பிரச்சினை ஏற்படாத வாழ்வு எவருக்கும் இல்லை இந்த புவனத்தில்!
அதே போல தீர்வு காண முடியாத பிரச்சினைகளும் இந்த பூமியில் இல்லை என்பதே சரியான பகுத்தறிவுவாதிகளின் உறுதி பொங்கும் திடமான முடிவு.
இயற்கையை சற்று நிதானமாக எண்ணிப் பாருங்கள்; விடை தானே வந்து விழும்!
‘சாயங்காலம்’ என்ற நம் சொற்றொடர் உண்மை யில் சூரியன் சாயுங்கால மாலை என்பதைக் குறிக்கும் எளிய மக்களின் சொல்லாகும். இரவு – இருட்டு தொடருகிறது.
ஆனால் அதுவே 24 மணி நேரமும் தொடர்கிறதா? இல்லையே.
விடியல் – ‘விடியற்காலை’ என்பது யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தானே பிறக்கிறதே!
பெய்யும் கோர மழையும், இடியும், மின்னலும் – பாயும் வெள்ளமும், அதன் காரணமாக பயமுறுத் தும் துன்பமும், துயரமும் தொடர்ந்து கொண்டா யிருக்கிறது?
மழை நிற்கிறது.
வெள்ளம் வடிகிறது.
புயல் ஓய்கிறது.
புனரமைப்பு தொடர்கிறது – இயற்கையே நமக்கு இப்படி வகுப்பெடுக்கிறது!
பிறகு ஏன் நீங்காத மன இறுக்கம்?
‘மீள மாட்டோம்’ என்று ஒரு அவநம்பிக்கை அலை நம்மை அடித்துச் செல்லும் அவலம்!
சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே, இரவுக்குப் பின் விடியல் எப்படியோ… துன்பத்தை அடுத்து இன்பம், துயரத்திற்குப் பிறகும் மகிழ்ச்சி, இது ஒரு வாழ்க்கையின் உருளும் வட்டம்!
அதை எண்ணி, பதற்றமடையாமல் ஆற அமர எதனையும் எதிர் கொண்டு, ஏன் – சில நேரங்களில் தோல்வியாக அவை நம் மீது விழுந்தால் – விபத்தில் சிக்கியவன் மீண்டு வாழுவதைப் போல், நோயினால் தாக்கப்பட்டவன் சிறந்த சிகிச்சைக்குப் பிறகு தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளுவதுபோல ஏற்படும் சோகங்களுக்காக தன்னம்பிக்கையைத் தளர விடாதீர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் எத்தகைய பற்றற்ற, பழுத்த, பூரண பகுத்தறிவாளர் என்பதற்கு அவரது ஒரு பேச்சில்….
“‘வாழ்க’ என்று கேட்கும்போது நான் மகிழ்ச்சி யடைந்தால் தானே, என்னை ‘ஒழிக’ என்று கூச்சல் கேட்கும் போது துன்பப்படுபவனாக ஆக வேண் டும்! எனக்கு எல்லாம் ஒன்று. இன்னுங் கேட்டால் ‘ஒழிக’ என்ற கூச்சலே எனக்கு அதிகம் கேட்ட கூச்சல். அதற்காக நான் துயரப்பட்டு, துவண்டு மூலையில் முடங்கி விட்டால் என்னாகும்” என்றார்! இது ஒரு தத்துவ ஞானத்தின் ஒளிச் சிதறல்!!
திருக்குறளில்கூட இதே கருத்து பளிச்சிடுகிறது!
“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.” (குறள் – 379)
இதன் பொருள் என்ன தெரியுமா?
“இயற்கைப் பண்பறிவின் காரணமாக, ஒருவர் நல்லவை என்று கருதி இன்பம் பெறும்போது, தீயவை உண்டாகும்போது, அவற்றின் காரணமாக அவதியுற்றுக் கலங்குவது கூடாது என்பதாகும்”
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”
என்ற பூங்குன்றனாரின் செறிந்த, விரிந்த விளக்கம் எல்லாம் படிப்பதற்கு மட்டுமா?
வாழ்வதற்கும், உய்வதற்கும் தானே!
புத்தாண்டில் சிந்தித்துசெயல் ஆற்றிடப் பழகுவோம்!
Wednesday, January 3, 2024
Home
வாழ்வியல் சிந்தனைகள்
புத்தாண்டில் ஒரு புத்தாக்கச் சிந்தனை இதோ! வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
புத்தாண்டில் ஒரு புத்தாக்கச் சிந்தனை இதோ! வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment