கடந்த 05-01-2024, அன்று எனது “வியப்புரை: ஓர் இரசிகனின் பார்வை” நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி அவரது வாழ்த்தினைப் பெற்றேன். என்னுடன் பாசமிகு அண்ணன் ஒளிவண்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் தமிழ்செல்வன் உடன் வந்தனர். நூலினை ஆர்வமாக புரட்டிப் பார்த்தார், முதலமைச்சர் வாழ்த்துரை, பாலகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை என நோட்டமிட்டபடியே “இது ஒரு நல்ல செயல்” என்று பாராட்டினார். மீண்டும் அட்டைப்படத்தை நோட்டமிட்டு “வியப்புரை: ஓர் இரசிகனின் பார்வை” தலைப்பே நன்றாக இருக்கிறது என மீண்டும் பாராட்டினார்.
ஆசிரியர் இலகுவான மனநிலையில், ஓய்வாக இருந்ததால் எங்களுடன் சுமார் 45 நிமிடங்கள் உரையாடினார். அவர் பேச்சைக் கேட்கக் கேட்க தகவல்கள் அருவி போல ஆர்ப்பரித்தன. 91 வயதில் ஞாபக சக்தி, பெயர், ஆண்டு, காரணம் எனத் தெளிவாக ஆசிரியர் பேசப்பேச, உடனிருந்த நாங்கள் பள்ளி மாணவர்கள் மனநிலைக்குச் சென்றோம் என்றே சொல்ல வேண்டும்.
1860ஆம் ஆண்டில் ராமநாதபுரம் ஜமீன்தார்கள் மனுநீதியை ஏற்க மறுத்து வழக்காடினர். அது இங்கிலாந்து நீதிமன்றம் வரை சென்றது. அந்த வழக்கில், “திராவிட நாட்டினர் வேறு பண்பாடு உடையவர்கள், அவர்கள் மனுநீதியை ஏற்க வேண்டியதில்லை” என்று தீர்ப்பு வந்தது. இது மிக மிக முக்கியமான தீர்ப்பு மட்டுமல்ல, திராவிடர்கள் தனி தேசம் என்பதையும் திராவிடம் என்ற வார்த்தைக்கு ஒரு வரலாற்று சான்று உள்ளது எனவும் உறுதிசெய்தது. இந்தத் தகவலை ஆசிரியர் அவர்கள் கூறியதுடன் கூடுதலாக, தனது உதவியாளரை அழைத்து அந்த வழக்கின் தீர்ப்பின் நகலை எடுத்து எங்களுக்கு வாசித்துக் காட்டினார்.
அப்படியே உரையாடல் சுயமரியாதைத் திருமணம் பற்றியதாக மாறியது. மூடநம்பிக்கை, சமத்துவமின்மை, பெண் அடிமைத்தனம், ஆடம்பரம், ஜாதகம் போன்றவைகளுக்கு மாற்றாக அமைவதே சுயமரியாதைத் திருமணம். இதற்கு எதிர்ப்பு மற்றும் சட்டச் சிக்கல் ஏற்பட, பின்னாளில் 1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இயற்றப்பட்டதை வரலாற்று நிகழ்வுகளுடன் விளக்கினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஏன் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார் என்பதற்கான அர்த்தம் புலப்பட்டது.
அடுத்ததாக, மிகவும் நகைச்சுவையான “வட கலை – தென்கலை” பற்றிய வழக்கைப் பற்றி விவர மாகவும், நகைச்சுவையுடனும் எடுத்துரைத்தார். நெற்றியில் “வடகலை – தென்கலை” குறியீட்டை எப்படிப் போட வேண்டும், கோயில் யானைக்கு எந்தக் குறியீட்டைப் போடவேண்டும் என்ற வழக்கைப் பற்றி சுவாரசியமாகப் பேசினார். ஆங்கிலேய நீதிபதிகளின், “நெற்றியில் ஏன் இந்த அடையாளம், அதனால் யாருக்கு என்ன நன்மை, தீங்கு?” என்ற கேள்விக்கு பதில் இல்லை. . “My lord they want to know U or Y is superior” என ஆசிரியர் சொல்லும்போது அனைவரும் ரசித்து சிரித்து மகிழ்ந்தோம்.
இறுதியாக, தந்தை பெரியார் பற்றிய தகவலைப் பகிர்ந்தார். பெரியார் பேசுவதற்கு அழைக்கப்பட, ஒரு சாதாரண கிராமத்திற்கு அவர் சென்றுள்ளார். மாட்டுவண்டியில்தான் போகமுடியும், அருகில் உள்ள பல கிராமங்களிலிருந்து மக்கள் வந்திருந்தனர். அன்றைய கூட்டத்தில் பெரியார் அய்ந்தரை மணி நேரம் உரையாற்றினார் என்று ஆசிரியர் சொன்னதும் அசந்து விட்டோம். மேலும், மக்கள் அய்ந்தரை மணி நேரம் பெரியாரின் பேச்சைக் கேட்டனர் என்பது கூடுதல் சிறப்பு.
உரையாடிய 45 நிமிடங்களில் 10-15 பெயர்கள், 5-7 தேதிகளுடன் கூடிய ஆண்டுகளை அவர் குறிப்பிடும்போது, எப்படி இந்த அளவிற்கு ஞாபகம் வைத்திருக்க முடிகிறது என வியந்தோம். ஆசிரியர் அவர்களின் உற்சாகம் அனைவருக்கும் உத்வேகம் அளித்தது.
நாங்கள் விடைபெறும் தறுவாயில் தந்தை பெரியாரின் புகழ்மிக்க சொல்லாடலை நினைவு கூர்ந்தார்.
“பக்தி வந்தால் புத்தி போய்விடும்;
புத்தி வந்தால் பக்தி போய்விடும்.”
பகுத்தறிவுடன்
ஆலடி எழில்வாணன்
No comments:
Post a Comment