சிறுபான்மை அந்தஸ்து கூடாதா?
நாடாளுமன்ற சட்டத்திருத்தத்தை அரசு ஏற்க மறுப்பது ஏன்?
உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி,ஜன.25- உத்தரப்பிரதேச மாநிலத் தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கி 1981-இல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு ஏற்க மறுப்பது ஏன்? என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.
அலிகார் பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டதால் அதற்கு வழங்கப்பட்ட சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக 1967-இல் உச்சநீதிமன்ற அய்ந்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
எனினும், 1981-இல் ஒன்றிய அரசு நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2006-இல் அலாகாபாத் உயர்நீதிமன்றம் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தர விட்டது.
மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் புதன்கிழமை ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் அமர்வு, ‘ஒன்றிய அரசாக எது அமைந்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றம்தான் நிலையான அமைப் பாக உள்ளது. அப்படி இருக்கும்போது, நாடாளுமன்றத்தால் 1981-இல் நிறை வேற்றப்பட்ட சட்டத் திருத்தத்தை எப்படி ஏற்க முடியாது என ஒன்றிய அரசால் கூற முடியும்? நாடாளுமன்ற சட்டத்தை ஒன்றிய அரசு பின்பற்றியே ஆக வேண்டும்.
கல்வி என்பது கலாசார சக்தியாகும். அரசமைப்புச் சட்டத்துக்கு முந்தைய கல்வி நிறுவனம் என்பதால், அதற்கு சிறுபான்மை அந்தஸ்து கோரும் உரிமை இல்லை என்று கூற முடியாது. சிறுபான்மையினரால் தொடங்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனமாக இருந்தால் போதும், அதற்கான அந்தஸ்தை கோரும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 30-அய் கோர முடியும்’ என்று தெரிவித்தது.
அதற்கு துஷார் மேத்தா, ‘இந்தச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து அலாகாபாத் உயர்நீதிமன்றம் 2006-இல் அளித்த உத்தரவை பின்பற்றி அந்தச் சட்டத் திருத்தம் நீக்கப்பட்டுள்ளது என ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் உள்ளதைத்தான் நான் கூறுகிறேன்’ என்றார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘சட்டத்தை இயற்றுவதில் நாடா ளுமன்றம்தான் எப்போதும் தலைமையாகும். அதை ஒன்றிய அரசு பின்பற்றி உறுதியாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற சட்டத் திருத்தத்தை ஏற்க முடியாது என ஒன்றிய அரசின் துறைகள் கூற முடியுமா’ என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment