நாளை தான் (15.1.2024) உண்மையான தமிழ்ப் புத்தாண்டு, தைப் பொங்கல் முதல் நாள் உதயம்.
புரட்சிக் கவிஞர் மிக அருமையாக – மற்றெவரும் சிந்திக்காத தனித் தன்மையான கருத்தைக் கவிதை யாக்கி நமக்கெல்லாம் பகுத்தறிவுப் பொங்கல் சமைத்துத் தந்தார்!
“மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல்!
அடடா! என்னே கருத்தழகு!! கவிதையழகு!!!
பழையன கழிதலும்,
புதியன புகுத்தலும்கூட
இந்த மூன்று நாள் தொடர் மகிழ்ச்சி விழாவில். உழைப்பின் பெருமை இதோ!
புதுவிளைச்சல், புத்துருக்கு நெய் – “பொங்கலோ பொங்கல்” என்று உலகத்தேருக்கு அச்சாணியாக உழவர்தம் சமூகத் தொண்டறத்தின் சரித்திரம் புத்துணர்ச்சியை, புத்தாக்கத்தைத் தரும் இப்பொங்கல் முதல் நாளில் ‘போக்கி’களை தீயிட்டு எரிப்பதை நாம் மாற்றி வேறு புது வழி காணுதல் – சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மிகவும் இன்றியமையாதது!
மறுபயன் (Recycle) நுட்பப்படி பொருள்களை அதிலிருந்து உருவாக்க நமது இளம் தலைமுறையினர் புதுப்புது வழிமுறைகளை – அறிவியல் அணுகு முறையை உருவாக்கிட உலகிற்கு அறிவுக் கொடை தர முன் வரவேண்டும்!
நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளோர் பல நிகழ்வுகளைப் பதிவு செய்து வைப்பார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அது அவர்களுக்கு மட்டுமல்ல – அக்குடும்பத்திற்கோ, நட்புறவு வட்டத்திற்கோ சமூகத் திற்கோ கலங்கரை வெளிச்சம் போல் ஒளியூட்டும் வழித் துணையாக அமையக் கூடும்!
நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தோ தெரியாமலோ, சூழ்நிலையினாலோ, சுய நலத்திற்காகவோ சில தவறுகளை செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதுகுறித்து – பிறகு நிதானம் திரும்புகிற போது – கவனச் சிதறல் கண்டுபிடிக்கப்படும்போது – உணர்ந்து “அய்யோ நாம் இந்த தவறைச் செய்து விட்டோமே” – என்று வருந்துகிறோம்.
தவறு செய்யாத மனிதர்களே உலகில் இல்லை; சிலர் மட்டுமே உணருகிறார்கள் – அதன் மூலம் ஒப்புக் கொள்ளும் பண்புள்ளவர்கள் தங்கள் பாரச் சுமையை ‘இலகு’வாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் பலருக்கு அவர்களது போலிப் பெருமை, பொய்யான அகங்காரம் தகுதி மீறிய தன்னைப் பற்றிய மதிப்பீடு – இவை காரணமாக செய்த தவறை ஏற்க மறுத்து – எகத்தாளமாக எப்போதும் பேசி – திருந்தாத ஜென்மங்களாக வாழும் நிலைதான் வையகத்தில் நாம் காணும் நிலை!
நமது வளர்ச்சிக்கு – மன அமைதி, நிம்மதி, தவறை மனதளவிலாவது ஒப்புக் கொண்டு, ஒப்புரவுடன், வாழ முயற்சிப்பது மிகவும் அவசியம்!
நம்மை நாமே மன்னித்துக் கொள்ளும் புது அத்தியாயத்தை, புதிய மாற்றத்தை உருவாக்கினால் நமது மகிழ்ச்சியை எவரும் பறித்துவிட முடியாது!
‘டைரி’யில் எழுதாவிட்டாலும் மனதில் உள்ள, செய்த தவறை, ஒரு முறை தனித்தாளில் எழுதி, வருந்தி, திருந்திடும் நிலையில் அதனைக் கிழித்து எறிந்து விடலாம். அறிவு நாணயத்தோடு ஒப்புக் கொள்ள நாம் முன்வர வேண்டும்.
நம்மைத் தூய்மையாக்கி அழுக்குகளைப் அவ்வப் போது மனச் சலவை செய்ய இது ஒரு அரிய முறையாகும்.
கடைப்பிடிக்கத் துவங்குவதற்கு கால நேரம் கிடையாது. உடனே துவங்கிப் பொங்கட்டும் இனிப் புதுமை – தங்கட்டும் நம் மகிழ்ச்சி!
இது போன்ற பலவற்றை மாற்றி யோசித்து வாழ்க்கையை புடம் போட்ட பொன்னாக ஆக்கிக் கொள்ள புது திடச்சித்தம் கொள்ளுங்கள் தோழர்களே!
No comments:
Post a Comment