திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவிற்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 23, 2024

திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவிற்கு நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம்!!

featured image

நேற்று (22.1.2024) மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்புப் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் வருமாறு:
தீர்மானத்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வாசித்தார்.

திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் இன்று (22-1-2024) உடல்நலக் குறைவால் கடலூரில் மறைவுற்றார் என்ற செய்தி பெரும் துயரத்திற்கும், அதிர்ச்சிக்கும் உரியதாகும்.

அவர் தந்தையார் மானமிகு சுப்பிரமணி அவர்கள் கடலூரில் ஏறுநடை போட்ட நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கப் பெருவீரராவர்.
அவருடைய அருமை மகனான நமது அறிவுக்கரசு அவர்கள் குழந்தைப் பருவம் முதற்கொண்டு இந்தக் கொள்கையின் பாலுண்டு, அதே பாட்டையில் சற்றும் தடம் புரளாமல், கடைசி மூச்சு அடங்கும்வரை வாழ்ந்து காட்டியவர் ஆவார். அஞ்சாநெஞ்சமும், எடுப்பான தோற்றமும் கொண்டவர்!

நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுடனும், குடும்பத்தாருடனும் சிறுவயது முதலே கொள்கை உறவோடு பின்னிப் பிணைந்தவர்.
அரசுப் பணியில் இருந்தபோதும், பகுத்தறிவாளர் கழகத்தில் இணைந்து மாநாடுகளில் எல்லாம் பங்கேற் றுக் கருத்துரையாற்றியவர். அரசுப் பணியாளர் சங்கத் தின் மாநிலப் பொதுச்செயலாளராகவும், தலைவ ராகவும் பொறுப்பேற்று வழிநடத்தியவர்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவராகவும் சிறப் பாகப் பணியாற்றியவர்.

அரசுத் துறையில் மாவட்ட வருவாய்த் துறை அலுவலராக உயர்ந்து, ஓய்வுக்குப் பிறகு, திராவிடர் கழகத்தில் நேரிடையாகப் பங்குகொண்டு பணியாற்றியவர்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகவும், செய லவைத் தலைவராகவும் பொறுப்பேற்று அருந் தொண்டாற்றியவர்.
படிப்புத் தேனீயாக விளங்கியவர், எழுத்தாள ராகவும், சிறந்த பேச்சாளராகவும் ஒளிவீசியவர்! பல அரிய நூல்களைக் கொடையாக எழுதித் தந்தவர்!
அவர் மறைவு அவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல – கழகத்திற்கும் பேரிழப்பாகும்.
அவர் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் பெருங்குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களின் அளப்பரிய இயக்கத் தொண்டுக்கும், பொதுப் பணிக்கும் கழகத்தின் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க ‘‘சுயமரியாதைச் சுடரொளி” மானமிகு
சு.அறிவுக்கரசு!

No comments:

Post a Comment