சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய சமூகநீதி உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 28, 2024

சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய சமூகநீதி உரை

featured image

தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படும் 245 நீதிபதி பதவிகளுக்கான
தேர்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்ற 4 நீதிபதிகளில் இருவர் பார்ப்பனர் என்பது சமூகநீதியா?
எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை மற்றும் பெண் நீதிபதிகளுக்கு இடம் அளிக்கப்படாதது ஏன்?
சென்னைத் தலைமை நீதிபதி தலையிட்டு சுழற்சி முறையில் சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய சமூகநீதி உரை

சென்னை, ஜன.28 தமிழ்நாடு தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.ஸி) சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 245 நீதிபதிகளுக்கான தேர்வர் குழுவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வரில் இருவர் பார்ப்பனர் என்பது சமூகநீதிக்கு எதிரானது. எஸ்.சி., எஸ்.டி., சிறு பான்மை, பெண் நீதிபதிகளும் இடம் பெறும் வகையில், சுழற்சி முறையில் இடம் பெற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழி செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

நேற்று (27.1.2024) மாலை சென்னை பெரியார் திடலில் “தமிழ்நாடு நீதித்துறை நியமனங்களும் – சமூகநீதியும்! சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்!” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:
ஒரு நாள் இடைவெளியில், பிரச்சினையினுடைய அவசரத்தையும், அவசியத்தையும் கருதி, சமூகநீதி கோரிக்கையை முன்னிறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோளாகவும், அதே நேரத்தில் எப்படிப்பட்ட சமூக அநீதிகள் தெரிந்தோ தெரியாமலோ ஊர்ந்து படமெடுத்தாடுகிறது என்பதை விளக்கவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

சமூகநீதிக்குத் துணிந்து குரல் கொடுத்து ஊக்கப்படுத்துகின்றவர் ஜஸ்டிஸ் அரிபரந்தாமன்
இந்தக் கூட்டத்திற்கு நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று இங்கே வந்து ஓர் அற்புதமான, ஆதாரப்பூர்வமான உரையை நிகழ்த்தியுள்ள உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதியும், என்றைக்கும் சமூகநீதி கொள்கையில் மாறுபடாத சிந்தனையும், அதற்காக வெளிப்படையாகவே குரல் கொடுக்க நான் தயார் என்று துணிந்து சொல்லக்கூடிய இப்படிப்பட்டவர்கள் ஓரிரு வராவது நமக்குக் கிடைக்கிறார்களே என்கிற எல்லையற்ற மகிழ்ச்சியை எங்களுக்குக் கொடுத்து ஊக்கப்படுத்துகின்ற

ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றுள்ள மாண்பமை ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் அய்யா அவர்களே,
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் திரு.வீ.குமரேசன் அவர்களே,
இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய வழக்குரைஞர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அருமைப் பெரியோர்களே, ஊடகவியலாளர்களே, காணொலிமூலமாக இக்கூட்டத்தினைக் கேட்டும், பார்த்துக் கொண்டும் இருக்கக் கூடிய அருமை அவையினரே, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், அய்யா நீதிபதி அவர்கள் மிக அருமையாக எடுத்துச் சொன்னார்.
வருகின்ற 29 ஆம் தேதி முதல் தேர்வு தொடங்க விருக்கிறது தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற தேர்வாணையத்தின் மூலமாக, சபாடினேட் ஜூடிசியரி என்ற கீழமை நீதித்துறைக்கான நியமனங் களுக்காக தேர்வுகள் நடைபெறவிருக்கின்றன. காலியாக இருக் கின்ற 245 பதவிகள் நிரப்பப்படவிருக்கின்றன.
அந்தப் பதவிகளை நிரப்புவதற்காக, வழக்கம்போல, சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் இருப்பார்கள். நீண்ட காலமாக இருக்கக்கூடிய நடைமுறை, அந்தத் துறையில் அனுபவம் உள்ளவர்கள் என்பதற்காக – அந்தத் தேர்வுக் குழுவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒவ்வொருமுறையும் சுழற்சி (ரொட்டேஷன்) முறையில், அமர்வார்கள். அதனை வரவேற்புரையாற்றிய குமரேசன் அவர்கள் விளக்கமாக இங்கே சொன்னார்கள்.

நான்கு நீதிபதிகளில் இரண்டு பேர் பார்ப்பனர்கள்!

இந்த முறை நான்கு நீதிபதிகள் அமர்வதாக அறிகி றோம். அதில் இருவர் பார்ப்பனர்களாக – உயர் ஜாதிக்காரர்களாக இருக்கிறார்கள்.
அந்தக் குழுவினரும் மற்றும் உறுப்பினர்களும் 245 பேரை தேர்வு செய்யவிருக்கின்றார்கள் என்றாலும், நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
இதில் இரண்டு அம்சங்கள்:
முதலில் இப்பதவிக்கான – நேர்காணலுக்கு அழைக் கப்படுகின்றவர்கள் யார் என்று சொன்னால், எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தான் நேர்காணல் தேர் வுக்கு வருவார்கள். எழுத்துத் தேர்வுக்கு மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள். நேர்முகத் தேர்வுக்கும் மதிப் பெண்கள் வைத்திருக்கிறார்கள்.

நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் கொடுத்தால்…

இதில் அவர்களுக்கு எப்படி உதவுவது என்று நினைக்கின்ற நேரத்தில், தங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவோ அல்லது பல காரணங்களை வைத்தோ – எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவர் களுக்கு, நேர்முகத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் கொடுத்தாலே போதும்.
இதனை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணையும், நேர்காணல் தேர்வில் வாங்கும் மதிப்பெண்களையும் சேர்த்துத்தான் தேர்வு செய்யப்படுவார்கள்.

அப்படி நடக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா? இல்லையா? அப்படி இருக்கக்கூடாது என்று மனப் பூர்வமாக நாங்கள் விரும்புகிறோம். இருக்கும் என்ப தையும் நாங்கள் வலியுறுத்திச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், அதற்கு நடைமுறையில் வாய்ப்புகள் உண்டு.

சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு…

நீதிபதிகள் தீர்ப்பு எழுதும்பொழுது, இரண்டு விஷயங்களைச் சொல்வார்கள். நீதி பரிபாலத்தினுடைய மிக முக்கியமான அந்த அம்சங்கள் என்னவென்று கேட்டால், நீதியைச் செலுத்தினோம் என்பதைவிட, நீதி உறுதி செய்யப்பட்டது என்று வெளிப்படையாக மற்றவர் களுக்குத் தோன்றவேண்டும். அதை அவர்கள் உணர வேண்டும். அதன்படி தீர்ப்பு என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும்.

‘‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்’’ என்ற ஒரு பழமொழி உண்டு.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்புகளை எழுதும்பொழு தெல்லாம், ‘‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற் பட்டவராக இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை இங்கே சொல்லுகிறோம்“ என்று சொல்வார்கள். அதையே தான் நாம் இப்பொழுது திருப்பிச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் இருவர் உயர்ஜாதிக்காரர்களாக இருக்கிறார்கள். அதில் ஒருவர் மிகப்பெரிய பிரச் சினைக்கு உரியவர். நேற்றும் – இன்றும் – நாளையும் கூட பிரச்சினைக்கு உரியவர்.
உண்மையைச் சொன்னால், தண்டனை உண்டு என்றால், அதைவிட பெரிய வாய்ப்பு – மகிழ்ச்சி நமக்கு வேறு ஏது?
இதற்காக எந்த விலை கொடுக்கவேண்டுமானாலும், நாங்கள் தயார் என்று சொல்கிறோம்.

அந்த அடிப்படையில், 245 பேர் பணி நியமனத் திற்காக நேர்காணல் 12 நாள்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
சிறுபான்மையோர், ஒடுக்கப்பட்டோர் இல்லை

நேற்று (26.1.2024) ‘விடுதலை’யில் எழுதியுள்ள அறிக்கையில் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.
சிறுபான்மையினர் – மைனாரிட்டி சமுதாயத்தினர் என்று சொல்லக்கூடியவர்கள் யாரும் இல்லை என்று அந்த அறிக்கையில்கூட எழுதியிருக்கின்றோம்.
அதைவிட மிக முக்கியம் என்னவென்றால், காலங் காலமாக வாய்ப்பில்லாத ஒடுக்கப்பட்ட மக்கள், எஸ்.சி., என்று சொல்லக்கூடிய, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் என்று மற்றவர்களால் அறிமுகப்படுத்தப்படும் பட்டி யலினம் இருக்கிறதே, அந்தப் பட்டியலினத்தில் நீதிபதிகள் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலே எங் களிடம் இருக்கிறது. அதுதான் எங்களுடைய வேலை. சமூகத்திற்காக, சமூகநீதிக்காக பாடுபடக்கூடிய பெரியார் தொண்டர்களின் வேலை அதுதான். எங்களுடைய உற்றார், உறவினர், சொந்தக்காரர், ஜாதிக்காரர்களுக்காக அல்ல!

அதற்காக பெரியார் அவர்கள் பலநேரங்களில் விலை கொடுத்திருக்கிறார். அவருடைய வழியைப் பின்பற்றித்தான் நாங்கள் எங்களுடைய கடமையை ஆற்றுகின்றோமே தவிர, யார் மேலேயும் எங்களுக்கு விருப்போ, வெறுப்போ கிடையாது.

உயர் ஜாதி என்றாலும் பார்ப்பனர் அல்லா தாருக்கு வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்ட சூழ் நிலையில், தேர்வுக் குழுவில் உறுப்பினராக வேறு நீதிபதிகளுக்குத் தகுதி இல்லையா?

அதுமட்டுமல்ல, அந்தக் குழுவில் இரண்டு பார்ப்பனர்கள் என்று சொன்னேன். உயர்ஜாதிக் காரர்கள் என்று சொல்லும் பொழுதுகூட, பார்ப் பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களும் இருப்பார்கள். அப்படி, யாராக இருந்தாலும் தெரியவேண்டும் என்பதற்காக – அடையாளப்படுத்துவதற்காகத் தானே தவிர, நமக்குத் தனிப்பட்ட முறையில் விருப்பு வெறுப்பு காட்டுவது இல்லை.

இப்படிப்பட்டவர்கள் அந்தக் குழுவில் இருந்தால் என்னாகும்?

அதில், மிக முக்கியமாக இருக்கக்கூடிய ஒருவர், எப்படிப்பட்டவர்?
“ஆறு தீர்ப்புகள் – தேவையில்லாத விஷயங் களையெல்லாம் தானே வலிய இழுத்து வழக்குப் போட்டு – இவ்வளவும் செய்திருக்கிறார்” என்று, இதற்குமுன் பல மேடைகளில் விமர்சிக்கப்பட்டு இருக்கிறவர்.

அதுமட்டுமல்ல, சம்பந்தமில்லாமல் பெரியாரை இழுத்துப் பேசுவார். அப்படிப்பட்ட ஓர் உணர்வாளர் அவர்.
ஒருவர் தனிப்பட்ட முறையில் என்ன உணர்வுடனும் இருக்கலாம். தீர்ப்பு எழுதுகின்ற நேரத்தில், உயர்நீதி மன்றத்தினுடைய நீதிபதியான பிறகு, அவர் பொதுவான வராக இருக்க வேண்டும்.

ஆனால், அந்த உணர்வு இல்லாமல், முழுக்க முழுக்க இங்கே குறிப்பிட்ட ஒருவர், தன்னுடைய பூர்வீகம் என்ன? தன்னுடைய எண்ணம் என்ன? என்று பார்க்கக் கூடியவர்தான் அவர். ஆறு தீர்ப்புகள் பிரச்சினைக் குரியதாக இருக்கும் என்ற அளவில், வெளிப் படையாகவே தன்னுடைய உணர்வுகளைக் காட்டிக் கொண்டு, அதன்படி நடந்துகொண்டிருக்கக் கூடியவர் – அதன்படி திட்டமிட்டு நடக்கக்கூடியவர் என்ற காரணத்தினால்தான் நாம் இதைக் குறிப்பிடுகின்றோம்.
மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதேநேரத்தில், இப்படிப்பட்டவர்கள் அந்தக் குழுவில் இருந்தால் என்னாகும்?
இடஒதுக்கீடு இருந்தாலும்….

நீங்கள் கேட்கலாம், இட ஒதுக்கீடு இருக்கிறதே, அந்த இட ஒதுக்கீட்டின்படிதானே அவர்கள் கொடுக்க வேண்டும். அதனால், யார் அமர்ந்தால் உங்களுக்கு என்ன? என்று.

நான் முதலில் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள் – நேர்காணலுக்குத் தனி மதிப்பெண் – எழுத்துத் தேர்வில் தனி மதிப்பெண். இரண்டையும் சேர்த்துதான் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதைவிட, இன்னொரு சூட்சமம் இருக்கிறது அதில்! இத்தனை இடங்கள் இருக்கின்றன – 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி நியமனம் செய்யப் போகிறார்கள் என்று நம்மாட்களே புரிந்துகொள்ளாமல், மேலெழுந்த வாரியாகக் கேட்பார்கள்.
பரிமாறுகிறவர் யார்?

அதில் ஓர் ஆபத்து இருக்கிறது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவியா? அல்லது வெவ்வேறு பதவிகளா? அதற்கு இப்போது என்ன தேவை என்றால், நீங்கள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரா என்பதுதான் மிக முக்கியம். ஏ.பி.வி.பி.யில் உறுப்பினராக இருந்திருக் கிறீர்களா? என்பதுதான் முக்கியம்.
திறந்த பொதுப் போட்டியில், அதாவது 31 சதவிகிதத் தில் உயர் ஜாதியினரையோ பெரும் அளவில் திணிக்க வாய்ப்பும் உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.
இப்போது நடைபெறும் இத்தகைய தேர்வுகள் ஓர்ந்து கண்ணோடாதவை அல்ல – அந்த அளவுகோலை வைத்துத்தான் பல துணைவேந்தர்கள் தேர்வு. காரணம், தேர்வு செய்பவர்கள் அங்கே இருக்கிறார்கள்.

‘‘பரிமாறுகிறவர் நம்மாளாக இருந்தால், பந்தியில் எந்த இடத்தில் உட்கார்ந்தாலும் என்ன?’’ என்கிற பழமொழி ஒன்று உண்டு கிராமப்புறங்களில்.
ஏனென்றால், பந்தியில் ஒருவர் எங்கே உட்கார்ந்தார் என்பது முக்கியமல்ல; பந்தி பரிமாறுகிறவர் நம்மாள் என்றால், எங்கே அமர்ந்தாலும் அங்கே வந்து தேவை யானதைப் பரிமாறுவார். எளிமையாக, மக்களுக்குப் புரிகின்ற வகையில் இதை நான் சொல்கிறேன்.
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குழுவில் இருக்கக்கூடிய அந்தக் குறிப்பிட்ட நீதிபதி – முழுக்க முழுக்க தன்னை ஆர்.எஸ்.எஸ்.சோடு இணைத்துக் கொண்டிருப்பவர் என்பது வெளிப்படையாகப் பல செய்திகளில் தெரியும்.

ஒரு விளம்பரம் ஊடகங்களில் வந்திருக்கிறது.

‘‘கோவில் விடுதலை அவசியமா? அரசியலா?’’ விவாத நிகழ்ச்சி!
அறநிலையத்துறைக்கு எதிரான விவாத நிகழ்ச்சியில் நீதிபதி

கோவில் பெருச்சாளிகளை ஒழிப்பதற்காக, வெள் ளைக்காரர்கள் காலத்திலிருந்து மூன்று, நான்கு ஆண்டுகள் போராடி, நீதிக்கட்சிக் காலத்தில் சட்டம் கொண்டு வந்தார்கள். 1925 ஆம் ஆண்டில், பனகல் அரசர் கொண்டுவந்த அறநிலையப் பாதுகாப்புத் துறையை (இந்து ரிலிஜியஸ் எண்டோண்மெண்ட் போர்டு) ரத்து செய்துவிட்டு, “கோவில்களை எங்களைப் போன்ற தனியார் வசமே கொடுக்கவேண்டும். இப்படி பல கோவில்களை எங்கள் வசம் வைத்திருக்கின்றோம். வட மாநிலங்களில் தனியார்கள் கோவில்களை வைத்திருக் கின்றார்கள்.

அதேபோன்று, தமிழ்நாட்டிலும், தென் மாநிலங் களிலும் கொண்டு வரவேண்டும். அதற்காக அற நிலையப் பாதுகாப்புத் துறையை எடுத்துவிடவேண்டும்“ என்று நினைக்கிறார்கள்.

அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளவர், நான் இத்தனைக் கோவில்களில் குடமுழுக்கு செய்திருக்கிறேன் என்று சொன்னாலும், எந்தக் கும்பாபி ஷகத்தையும், அவரையும் நம்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

அறநிலையத்துறை கூடாதாம்

“நாங்கள் நடத்தினால்தான் கும்பாபிஷேகம் எல்லாம். நீங்கள் நடத்தினால், அது கும்பாபிஷேகம் கிடையாது. நாங்கள்தான் நடத்தவேண்டும், எங்கள் ஆட்களுக்குத் தான் பயன்பட வேண்டும்.” என்று வெளிப்படையாகச் சொல்லுகிறார்கள்.
இன்னொருவர் இருக்கிறார், ஒன்றிய நிதியமைச்சராக இருப்பவர் சொல்கிறார், ‘‘உண்டியலில் பணத்தைப் போடாதீர்கள்; அதற்குப் பதிலாக அர்ச்சகரின் தட்டில் போடுங்கள்’’ என்கிறார்.

இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ச்சியாகப் பார்க்கிறோம். விளம்பரம் செய்யப்பட்டுள்ள விவாத நிகழ்ச்சி பிப்ரவரி 4 ஆம் தேதி, காலையில் 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் – எழும்பூரில் உள்ள பிரசிடென்சி கிளப், எத்திராஜ் சாலையில் நடக்கிறது. அந்த விவாத நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் யார் என்றால், நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன்.
நீதியரசர்கள் பதவியில் இருக்கும்பொழுது, இது போன்ற விவாதத்திற்கு தலைமை தாங்கியிருக்கிறார்களா?

தொலைக்காட்சி விவாதத்திற்கு ஆள் கிடைக்க வில்லையே என்று கவலைப்படவேண்டியதில்லை. “நீங்கள் மாலையில் வந்துவிடுங்கள்; இந்தப் பிரச்சினை இருக்கிறது, நீங்கள் வாருங்கள்” என்று கேட்கலாம் போலிருக்கிறது.

அந்த விவாதத்திற்கு என்ன தலைப்பு என்றால், ‘‘கோவில் விடுதலை அவசி யமா? அரசியலா?’’
இந்த விவாத நிகழ்ச்சிக்குக்குத்தான் உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விருந்தினராக செல்கிறார்.

ஆர்.எஸ்.எஸ்.சினுடைய ஓர் அமைப்பே!

அய்யா அரிபரந்தாமன் அவர்கள், நீதிபதியாக இருந்த காலத்தில், எந்த விவாத நிகழ்ச்சிகளுக்கும் சென்றது கிடையாது. இப்பொழுது அவர் ஓய்வு பெற்ற பிறகு, அவருடைய கருத்துகளைச் சுதந்திரமாகச் சொல்கிறார்.
விவாத நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செல்லக்கூடிய ஒரு நீதிபதி, அதன்படி அவருடைய உணர்வு என்ன என்பதை வெளிப்படையாகவே அடை யாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

பெயரளவிற்கு கம்யூனிச தோழரான ஒரு கனகராஜை அழைத்திருக்கிறார்கள். டி.ஆர்.ரமேஷ், அமெரிக்க நாராயணன், ரெங்கராஜன் நரசிம்மன், சுமந்த் சி.ராமன் ஆகியோர் அந்த விவாதத்தில் பங்கேற் கிறார்கள். அந்த விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அமைப்பு எதுவென்றால், ஷிவிகிஸிஜி என்பது! அது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.சினுடைய ஓர் அமைப் பாகும்.

இதில் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்ன வென்றால், அந்த அமைப்பு எது சார்பானது? எல்லோரும் நினைக்கலாம், பொதுவான அமைப்பு நடத்துகிறது என்று. ஆனால், அது உண்மையல்ல. முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ்.சினுடைய அமைப் பாகும்.
SMART என்பதற்கு விரிவு என்னவென்றால், S-Samachar, M-Manyata, A – Association for, R-Research and T-Training – A Platform For Nationalistic Media & Mass Communications மீடியாவிலேயே ‘நேஷனலிஸ்ட் மீடியா’ என்ற ஒன்று இருக்கிறது; புது ஜாதி அது. அதில் இருப்பவர்கள் எல்லாம் தலையில் பிறந்தவர்கள்.

பொய்யைப் பரப்பும் ஊடகங்கள்
அதில் உள்ள உறுப்பினர்கள் எல்லாம் யார் தெரியுமா?

படிக்கிறேன் கேளுங்கள், எல்லாம் ஆர்.எஸ்.எஸினுடைய சமூக வலைதளங்களில் தம்மை உயர்த்தும் வகையில் பொய்யை அதிகமாகப் பரப்பிக் கொண்டு, பதில் சொல்லிக் கொண்டு, விவாதம் செய்துகொண்டு இருப்பவர்கள்.

தமிழ்நாட்டில் பீகார்காரர்கள் எல்லாம் கொல்லப் படுகிறார்கள் என்று அங்கிருந்து சொல்வார் ஒருவர்.
உடனே அதனை சமூக வலைதளங்களில் பரப்பு வார்கள். பொய்யாகப் பரப்பியவரின்மேல் வழக்குப் போட்டாலும், அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்.

சுராஜ்யா பத்திரிகை, ஜீ டிவி, உதய் இந்தியா, மீடியான், சங்கம், கதிர், தேசிய சிறகுகள், மாரிதாஸ், ஜாம்பவான், சனாதன் சக்தி, சத்தியப் பிரகாஷ் பாரத், யங் தமிழ்நாடு, தமிழ் ஸ்டேஜ், சுராஜ் தமிழ் டி.வி., தாமரை தமிழ் டி.வி., சாணக்கியா, சாமானியர், தினசரி, ஓ.பி.இந்தியா, சுதேசி, மிஷன் காளி, இ-சான்ஸ்கிரிட்டி இன்னும் பல பேரையும் உறுப்பினர்களாகக் கொண்டது தான் அந்த அமைப்பு.
அவர்களுக்கு உரிமை இருக்கிறது; அந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக இருப்பதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், அந்த அமைப்பு நடத்துகின்ற ஒரு நிகழ்ச்சியில் அதில் யார் தலைமை விருந்தினர் அன்றைக்கு என்றால், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குழுவில் உள்ள நான்கு நீதிபதிகளில் ஒருவராக இருக்கிறார் பாருங்கள், அவர்தான்.

இந்தத் தகவல் மாண்புமிகு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் போய்ச் சேரவேண்டும். தனிப்பட்ட முறையில் யார்மீதும் நமக்கு வெறுப்பு கிடையாது.

நியமனம் செய்வதற்கு மற்றவர்கள் இல்லையா?

அரசாங்கத்தினுடைய அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு துறை – இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை.
அந்தத் துறை தேவை என்பதற்காக, பழைய அரசாங்கத்திலேயே சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து, சாராயத்திற்காக சிலையை விற்ற அர்ச்சகர் எத்தனை பேர் என்ற விவரங்களை எல்லாம் அந்த ஆணையத்தின் அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
245 கீழமை நீதிமன்றங்களுக்கான பதவிகளை நிரப்புவதற்கு- நியமனம் செய்வதற்கு மற்றவர்கள் இல்லையா?
மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர். தன்னுடைய பணியை அவர் நேர்மையாகச் செய்கிறார். சட்டப்படி அவர் செயல்படுகிறார்.
அவருக்குத் தேர்வு எப்படி நடந்தது என்று தெரியாது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற உணர்வுகள் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. அதை அழகாக அய்யா அரிபரந்தாமன் அவர்கள் உரையைத் தொடங்கும்பொழுது சொன்னார்.
முன்பு, எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் படவிருத்த ஆறு பேரும் ஒரே ஜாதியைச் சார்ந்த வர்களாக இருந்த நேரத்தில், முதலமைச்சரை நேரிடை யாகத் தொடர்புகொண்டு, ‘‘நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம்‘’ என்று சொன்னோம்.
உடனே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், ‘‘நீங்கள் போராட்டம் நடத்துங்கள்; உயர்நீதிமன்ற நுழைவு வாயில் வரை உங்களை அனுப்பச் சொல்லுகிறேன்’’ என்றார்.
தமிழ்நாட்டின் Soil Psychology என்றும் குறிப்பிட்டார் சட்ட அமைச்சர்.
சமூகநீதி மண் என்று சொல்லுகிறோமே – நீதிக்கட்சி காலத்திலிருந்து, நூறு ஆண்டுகளுக்கு முன்பு – இந்திய அரசமைப்புச் சட்டம் வருவதற்கு முன்பே, இங்கே 1928ஆம் ஆண்டிலேயே சமூகநீதி – அதற்கு முன்பே ஆட்சி – இப்படி இருக்கக்கூடிய ஒரு சமூக வரலாறு – நீண்ட பின்னணி தமிழ்நாட்டிற்கு உண்டு.
பெரியார் மண்ணான, சமூகநீதி மண்ணான தமிழ்நாடு. இந்தியாவிற்கே வழிகாட்டியதுதான் அன்றும் – இன்றும் – என்றும்!
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைக்கு 245 கீழமை நீதிமன்றப் பதவிகள் என்று வரும்பொழுது, எல்லோருக்கும் வாய்ப்பு வந்தால்தானே, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில், அந்த நியமனங்கள் நேர்மையாக நடந்தது என்கிற நிலைமை வரும்.
சமூகநீதி என்றால் என்ன?
We want Social Justice – அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கின்ற மாற்றப்பட முடியாத அடிக்கட்டுமான உரிமை!
(தொடரும்)

No comments:

Post a Comment