ஓர் அற்புதமான செயல்வீரரை இழந்திருக்கின்றோம் -இயக்கம் இழந்திருக்கிறது – தமிழ்நாடு இழந்திருக்கிறது – பொதுவாழ்க்கை இழந்திருக்கிறது!
அவர் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நான் அவரை செதுக்கியவன் – அவரை உருவாக்கியவன்!
விழிக்கொடை – உடற்கொடை அளிக்கப்பட்டு மறைந்தும் வாழ்பவராக அவர் இருக்கிறார்
– நம்முடைய நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்தவராக இருக்கிறார்!
கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கலுரை!
சென்னை, ஜன.23 ஓர் அற்புதமான செயல்வீரரை இழந்திருக்கின்றோம். இயக்கம் இழந்திருக்கிறது. தமிழ் நாடு இழந்திருக்கிறது; பொதுவாழ்க்கை இழந்திருக்கிறது. எல்லாவற்றையும்விட அவர் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நான் அவரை செதுக்கியவன். அவரை உருவாக்கியவன்; அவருடைய விழிகள், உடல் கொடை யாக அளிக்கப்பட்டு இருக்கின்றன; அதன்மூலம் மறைந்தும் வாழ்பவராக அவர் இருக்கிறார் – நம்முடைய நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்தவராக இருக்கிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செயலவைத் தலைவருக்கு
தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கலுரை!
நேற்று (22.1.2024) மாலை சென்னை பெரியார் திடலில் ‘‘இந்தியா கூட்டணியின் வெற்றி காலத்தின் கட்டாயம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலுரை யாற்றினார்.
அவரது இரங்கலுரை வருமாறு:
சிறந்த நாவன்மை, நினைவாற்றல், பழகுகின்ற தன்மை, எதையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல்!
மிகுந்த துயரத்திற்கும், தாங்கொணாத துன்பத்திற்கும் ஆளாகி, ஆறுதல் எப்படி பெறுவது என்று தெரியாத நிலையில், ஓர் அற்புதமான, பல்வகை திறனுள்ள ஆற்ற லாளரை நாம், அவருடைய மறைவின் மூலமாக இழந்திருக்கின்றோம். குறிப்பாக, இயக்கத் தோழர்களும், இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களும், உலகம் முழு வதும் இருக்கக்கூடியவர்களும் – அவருடைய சிறந்த நாவன்மை, நினைவாற்றல், பழகுகின்ற தன்மை, எதை யும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல், இவையெல்லாம் நம்முடைய தோழர், கழக செயலவைத் தலைவர் சகோதரர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களுடைய தனிச் சிறப்புடையனவாகும். அவருடைய ஆற்றலை நினைத்துப் பார்க்கும்பொழுது அவரது இழப்பு என்பது மிகுந்த துயரத்தைத் தருகிறது. அதிலும், நேற்று (21-1-2024) சேலத்தில் நடை பெற்ற திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் மாநில மாநாட்டினை தொலைக் காட்சியின் மூலமாகப் பார்த்து, பெருமையடைந்திருக் கிறார், மகிழ்ச்சியடைந்திருக்கின்றார்.
அவருடைய புத்தகம் ஒன்றை, முதலமைச்சருக்கு, திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அளித் ததை, தொலைக்காட்சியில் மகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு, தன்னுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முகநூல் மூலம் செய்தி அனுப்பியிருக்கிறார் என்று அவருடைய மருமகனும், மற்றவர்களும் சொன்னார்கள்.
காலையில் விடியல் செய்தியே
இந்த சங்கடமான செய்தி!
நேற்றிரவு 9.30 மணிவரையில் மாநாட்டு நிகழ்ச்சி களைப் பார்த்துவிட்டு, வழக்கம்போல் இரவு உணவு சாப்பிட்டு இருக்கிறார். அதற்குப் பிறகுதான் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அவருடைய வாழ்க்கை திடீரென்று முடிந்துவிட்டது என்ற செய்தி, காலையில் எழுந்தவுடன் எனக்குக் கிடைத்தது. காலையில் விடியல் செய்தியே இந்த சங்கடமான செய்தியாக இருந்தது.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கே கஷ்டமாக இருந்தது. அவருக்குக் காலில் தொந்தரவு தொடர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நான் அவரிடத்தில் சொல்வது, ‘‘சென்னைக்கு வந்து தங்கி, அதற்குரிய சிகிச்சை பெறுங்கள்; தனியே இருக்காதீர்கள்” என்று அடிக்கடி சொல்வதுண்டு.
‘‘சரி, வருகிறேன்!” என்று சொல்வார்.
நிறைய படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் உள் ளவர். நமக்கெல்லாம் உறுதுணையாக இருக்கக்கூடியவர். இறுதியாகக் கூட பட்டுக்கோட்டை பகுதிக்குச் சென்று கழகப் பணியாற்றியிருக்கிறார்.
ஓர் அற்புதமான செயல்வீரரை இழந்திருக்கின்றோம்!
ஓர் அற்புதமான செயல்வீரரை இழந் திருக்கின்றோம். இயக்கம் இழந்திருக்கிறது. தமிழ்நாடு இழந்திருக்கிறது; பொதுவாழ்க்கை இழந்திருக்கிறது.
எல்லாவற்றையும்விட அவர் சிறுவனாக இருந்த காலத்திலிருந்து நான் அவரை செதுக்கியவன். அவரை உருவாக்கியவன்.
அவருடைய தந்தையாரும், நானும் நண்பர்கள் – இயக்கத்தில். அவருக்கும், எனக்கும் வயது இடைவெளி அதிகம். நான் சிறுவயதில் இருந்த நிலையில், நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு போகும்போது, பின்னாலி ருந்து பேசுபவர்களின் குரல், ‘‘பாருங்கள், எப்படிப்பட்ட வயதுள்ள நண்பர்கள் பேசிக்கொண்டு போகிறார்கள்” என்று கேட்கும்.
நான் பல்கலைக் கழகத்தில் படிக்கும்பொழுது, அவர் கடலூரில் மூங்கில் கடை வைத்திருந்தார். நான் நாள் தோறும் ரயில்வே நிலையத்திற்குச் சென்று ‘‘டேஸ் காலர்” என்று சொல்லக்கூடிய முறையில் படித்துவிட்டு வரும்பொழுது, அவருடைய கடையைத் தாண்டித்தான் நான் போகவேண்டும்.
ஒவ்வொரு நாள் மாலையும் கடலூருக்கு வந்துவிட்டு, அடுத்த நாள் காலைதான் போவேன். ஏனென்றால், விடுதியில் எனக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். பிறகு, கஷ்டப்பட்டு, விடுதியில் இடம் வாங்கினேன்.
அவரை சந்திக்கும்பொழுது, ‘விடுதலை’யில் தலை யங்கம் வந்திருக்கிறது, குத்தூசி எழுதியிருக்கிறார்; பெரியார் அய்யா பேச்சில் இன்னின்ன கருத்துகள் இருக் கின்றன போன்றவற்றை என்னிடம் பேசிக் கொண்டிருப்பார்.
கொள்கையிலேயே வளர்ந்த குடும்பம்!
அந்த முறையிலேயே, இந்தக் கொள்கையிலேயே வளர்ந்த குடும்பம் அய்யா சுப்பிரமணி அவர்களுடைய குடும்பம். நீதிக்கட்சி காலத்தில் இருந்தே அய்யா தந்தை பெரியாரிடத்தில் அவருக்குப் பற்று. கடைசிவரையில் அவர் அந்த உணர்வோடு இருந்தார்.
அறிவுக்கரசு அவர்கள், நான் படித்த பள்ளிக்கூடத் திலேயே, எனக்குப் பிறகு வந்து சேர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. வரையில் அங்கே படித்தவர். அப்படி படித்து அவர் தன்னை ஆளாக்கிக் கொண்டு, சர்வீஸ் கமிஷனில் நான்காவது பிரிவில் தேர்வு எழுதி, அதில் அவர் வெற்றி பெற்று, எழுத்தராக அரசு வேலையில் உள்ளே நுழைந்து, பிறகு டி.ஆர்.ஓ. (ரெவின்யூ ஆபீசர்) உள்பட வளர்ந்தார் என்றால், அவருடைய உழைப்பு, ஆற்றல், அறிவு எவ் வளவு செம்மாந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
திராவிடர் கழகத்திற்கு வாருங்கள்
என்று அழைத்தோம்!
அவர் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபொழுது, அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு கொடுத்தோம். ‘‘நேற்று வரையில் பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்தீர்கள், நாளையிலிருந்து நீங்கள் திராவிடர் கழகத்திற்கு வாருங்கள்” என்றேன்.
எந்தப் பொறுப்பு கொடுத்தாலும், அதை ஏற்று சிறப்பாக செயல்படுவார். அவருடைய எழுத்து, பேச்சு மிகவும் சிறப்பானது. அப்படிப்பட்ட ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம் என்று சொல்லும்பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது.
எதைத் தவிர்க்க முடியாதோ அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பது பகுத்தறிவு
எப்படி அதிலிருந்து மீள்வது என்று நினைக்கும் பொழுது எனக்கு சங்கடமாக இருந்தது. என்றாலும், அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டர்கள் நாம், சீடர்கள் நாம் – எதைத் தவிர்க்க முடியாதோ அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பது பகுத்தறிவு. ஆகவே, அந்த சூழ்நிலையில், இதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். வேறு வழியில்லை.
அவருடைய மகன், வெளிநாட்டிலிருந்து நாளை காலையில்தான் கடலூருக்கு வருகிறார்.
மறைந்த அறிவுக்கரசு அவர்களுடைய விழிகள், கொடையாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உடலையும் கொடையாகக் கொடுக்கவிருக்கிறார்கள்.
மறைந்தும் வாழ்பவராக இருக்கிறார்!
இதன்மூலமாக மறைந்தும் வாழ்பவராக அவர் இருக் கிறார் – நம்முடைய நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்த வராக இருக்கிறார்.
அவருக்கு நம்முடைய வீர வணக்கம்! வீரவணக்கம்!! வீர வணக்கம்!!!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலுரை யாற்றினார்.
No comments:
Post a Comment