கடந்த 21ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநில மாநாட்டுத் தீர்மானங்கள் இருபத்தைந்தும் முக்கியமானவை – தேவையானவையே!
அதிலும் குறிப்பாக 18ஆம் தீர்மானம் – “தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு!” என்ற தீர்மானம் மிகவும் கவனத்துக்கு உரியதாகும்.
“இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்-ஒன்றிய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையை, முற்றிலுமாக மாற்றிய 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள தென்னக ரயில்வே, என்.எல்.சி, பி.எச்.இ.எல்., ஆவடி கன ரக வாகனத் தொழிற்சாலை, ராணுவ ஆடைத் தயாரிப்பு நிறுவனம், ரயில் பெட்டித் தொழிற்சாலை மற்றும் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தேசிய வங்கிகளான இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் திட்டமிட்டுத் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்களை வஞ்சிப்பதுடன், பிற மாநிலத்தவருடன் பகையுணர்வை வளர்க்கும் போக்கையும் மேற்கொண்டு வருவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு சார்ந்த நிறுவனங்கள், அலுவலகங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஆண்-பெண் விண்ணப்பதாரர்களுக்கே முன்னுரிமை அளித்துப் பணியிடங்களில் நியமித்திட வேண்டும் என்றும், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது.”
இந்தத் தீர்மானம் எத்தகையது என்பதற்கு மிகப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங் களில் அனுமதிச் சீட்டு பெறும் இடங்களில்கூட தமிழ் தெரிந்தவர்கள் அருகி விட்டனர். பயணச்சீட்டு சோதிப்பவர்களும் பெரும்பாலும் ஹிந்தி வாலாக்களே என்பதை நடைமுறையில் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
சோலையார்ப்பேட்டை இரயில்வே சந்திப்பில் சில நிமிடங்கள் நாம் நின்றாலே போதும் – நாம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா அல்லது பாட்னாவில் இருக்கிறோமா என்ற அய்யப்பாட்டைத்தான் ஏற்படுத்தும்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் ஓய்வு பெற்ற டாக்டர் கடனுக்கான விண்ணப் பத்தைக் கொடுத்தபோது உங்களுக்கு ஹிந்தி தெரியுமா என்று அதிகாரி கேட்க, தெரியாது என்று அந்த டாக்டர் சொல்ல, கடன் கிடையாது என்று ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட ஹிந்தி அதிகாரி கூறியது நினைவிருக்கலாம்.
2018ஆம் ஆண்டில் இரயில்வே வேலை வாய்ப்பு அமைப்பு வழியாக குரூப் – டி பணிக்காக 2362 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 74 பேர்களே.
திருச்சி பொன்மலையில் ஒன்றிய அரசின் தென்னக ரயில் நிலையத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பணிமனையில் 581 தொழில் நுட்ப பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நியமனங்கள் தொடர்பான நேர்காணல் நடைபெற்றது
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் 12 பேர் மட்டுமே பணி நியமனம் பெற்று உள்ளனர். அதே நேரத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 163 பேர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 115 பேர் என மொத்தம் வட மாநிலத்தவர்கள் 569 பேருக்கு இங்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த பணி நியமனத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு வட மாநிலத்தவர்களே அதிகளவில் பணிக்குத் தேர்வாகி உள்ளனர்.
இதனிடையே “கடந்த 2019 ஏப்ரல் மாதம், தமிழ் நாட்டிலுள்ள ரயில்வே பணியிடங்களில் பணியாற்றப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள 1,765 பழகுநர்களில் (Act Apprentice) சற்றொப்ப 1,600 பேர் வட மாநிலத்தவர் என்பதும், அவர்களில் 300 பேர் இதே பொன்மலை ரயில்வேயில் பணியமர்த்தப்பட்டனர் என்பதும், அதில் ஒரு தமிழர்கூட இல்லை” என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டிற்கான அஞ்சல் தேர்வில் அரியானாவை சேர்ந்த பலரும் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சி.பி.அய். விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கபட்டுள்ளது. தமிழ் நாடு வட்டாரத்திலுள்ள அஞ்சல் ஊழியர் மற்றும் அஞ்சல் காவலாளர்களுக்கான 128 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 11, 2016 அன்று தமிழ் நாட்டிலுள்ள 5 மய்யங்களில் நடைபெற்றது. எழுத்து தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு ஆகிய நான்கு பாடங்களில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவு மார்ச் 2017-இல் அறிவிக்கப்பட்டது. அதில் அரியானாவைச் சேர்ந்த பலரும், மகாராட்டிரா மற்றும் பஞ்சாபை சேர்ந்தவர்களும் தமிழில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதில் ஏதோ தவறுள்ளதாகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இதுகுறித்த விசாரணை துவங்கப்பட்டது.
தமிழில் அதிக மதிப்பெண் வாங்கிய அரியானாவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அரியானா மாநில கல்வி முறையின் கீழ் பயின்றவர்கள், அதன்படி தமிழ் மொழி அவர்களின் பாடத்திட்டத்திலேயே கிடையாது. விசாரணையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்த போதிலும் அரியானாவைச் சேர்ந்த 47 விண்ணப்பதாரர்கள் ஒரே அய்பி முகவரியில் உள்ள கணினியை உபயோகித்ததும், மேலும் 36 விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரி ஒன்றாக இருந்ததும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
விசாரணையில் ஏதோ சில பொதுத்துறை அதிகாரிகளின் உதவியோடு விண்ணப்பதாரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த நிகழ்வு அரசு ஆன்லைன் தேர்வு முறைகளின் மேலுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பட்டதாரி பொறியாளர் பணியிடங் களுக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை திட்டமிட்டே தவிர்த்தது கண்டனத்திற்குரிய செயல் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பட்டதாரிப் பொறியாளர்கள் இடங்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திட்டமிட்டே தவிர்த்து விட்டு, வட இந்திய பொறியாளர்களை மட்டுமே தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்காக, அப்பகுதியின் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கிய நிலங்களை வழங்கினர். அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டுவரை 80 விழுக்காடு பணி வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. அதுவும் பெருமளவு ஒப்பந்தப் பணியாளர்களாக மட்டுமே தமிழர்களுக்கான வேலை வாய்ப்பை என்.எல்.சி. நிறுவனம் வழங்கி வந்தது. படிப்படியாக அதுவும் குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், என்.எல்.சியின் பெருமளவு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை, மேனாள் முதலமைச்சரும், எங்கள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கடுமையாக எதிர்த்தார். இதன் மூலம், நாட்டின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக்கும் முயற்சி அப்போது தடுத்து நிறுத்தப்பட்டது. என்.எல்.சி நிறுவனம் தனியார் மயமாகி விடக்கூடாது என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் அப்போதும், இப்போதும், எப்போதும் உறுதியாக இருக்கிறது.
இந்நிலையில், பட்டதாரிப் பொறியாளர்களுக்கான இடங்களை நிரப்ப, வடமாநிலங்களைச் சேர்ந்த 299 பேரை தேர்வு செய்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு நடைபெறும் என என்.எல்.சி நிறுவனம் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாக உள்ளது.
ஏற்கெனவே, தங்கள் சொந்த நிலங்களை என்.எல்.சி நிறுவனத்திற்காக தாரை வார்த்துவிட்டு, அதில் தங்கள் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு எத்தனை பெரிய பேரிடி இது?
என்.எல்.சி நிறுவனத்தின் நிரந்தரப் பணியிடங்களில் 90 விழுக்காடு அளவு வட இந்தியர்களுக்கே வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 விழுக்காடு பணிவாய்ப்பும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டிருப்பது பெரும் வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் திட்டமிட்டு துரோகம் இழைக்கும் கொடிய செயலாகும்.
தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில், தமிழர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில், தலைவர் கலைஞரைப் போலவே, எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் உறுதியுடன் உள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 05.05.2022 அன்று, என்.எல்.சி நிறுவனத்திற்கான பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்கள் தேர்வில், என்.எல்.சி நிறுவன சுரங்கப்பணிகளுக்கு நிலத்தை வழங்கிய உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கேட் நுழைவுத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுப்பது, அத்தேர்வை எழுதாத தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் செயலாகும் என்பதையும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.
அதற்குப் பின்னரும், தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை அடியோடு பிடுங்கி எறியும் செயல்பாட்டில் என்.எல்.சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டில், தமிழர்கள் தாரை வார்த்த நிலத்தில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் நிறுவனத்தில், தமிழர்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
குறிப்பிட்ட மாநிலத்திற்கு தன்னியல்பாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை, ஒன்றிய அரசின் நிறுவனம் திட்டமிட்டே தட்டிப் பறிப்பது கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
எனவே, தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 299 பட்டதாரிப் பொறியாளர்களுக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தின் நூறு விழுக்காடு பணிவாய்ப்பு களும் தமிழர்களுக்கே வழங்கப்படும் வகையில், பணிநியமனத்திற்கான தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ஆர். பாலு எம்.பி. அவர்கள் குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
சேலம் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டில் “தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடுக” என்ற இந்தத் தீர்மானம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
வரும் தேர்தலில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment