முதியோர் நலன்பற்றிய கவனக் குறிப்புகள் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 23, 2024

முதியோர் நலன்பற்றிய கவனக் குறிப்புகள் (2)

featured image

முதியோர்களின் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் அவலங்களை டாக்டர் வரிசைப்படுத்தினார்.
(1) விழுதல்
அடிக்கடி கீழே விழுந்து விடுதல் (Fall)
(1) படுக்கையிலிருந்தோ,
(2) நடக்கும் போதோ,
(3) குளியல் அறையில்….
இப்படி விழுதல் (Fall) மூலம் எலும்பு முறிவுகள் ஏற்படும் என்ற வாய்ப்புகள்.
Osteoporosis என்ற எலும்புத் தேய்வுகள் முதுமையில் (போதிய சத்து கிட்டாமையாலோ) உடல் எலும்புகள் வலுவிழந்து பலஹீனமாகி இருப்பதால் லேசாகத் தடுக்கினாலும், விழுந்தாலும் எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது.
(இதில் ஆண்களைவிட, பெண்களுக்கு மிக அதிக ஆபத்து. காரணம் அவர்களது கருப்பை சாத்தப்பட்டபின் (Menopause) எலும்புகள் மிகவும் பலஹீனமாகி விடுவதால் அவர்கள் மிகவும் கவனமாக கால்சியம் போன்றவற்றை கூடுதலாக எடுத்து பலப்படுத்திக் கொள்ளுவது முக்கியம்)
(2) திடீர் மயக்கம் (Dizziness)
தலை சுற்றல், மயக்கம் அதனால் விழுதல் இவை பல காரணங்களால் ஏற்படும். உடலில் சர்க்கரை அளவு குறைதல் (Hypo) அல்லது காது பிரச்சினையாலும் ஏற்படலாம். (மருத்துவர் அறிவுரை நாடுக)
(3) அடிக்கடி அடக்க முடியாது சிறுநீர் கழித்தல்
தங்களை அறியாமல் சிறுநீரை அடக்க முடியாமல் தொடர் தொல்லைக்கு ஆளாவதால் அதை வெளியே சொல்ல கூச்சப்பட்டுக் கொண்டு எங்குமே செல்லாமல், வீட்டுக்குள்ளே – அங்கும் படுக்கை அறைக்குள்ளேயே முடங்கிப் போகுதல் (Urinary incontinence).
(4) திடீரென்று தன்னிலை மறதி ஏற்படுதல்.
(5) Frailty என்ற பலஹீன உடல் நிலை
(6) நினைவாற்றல் மங்கி மறதி ஏற்படுதல்
வயது முதிர்ந்தவர் அடிக்கடி தமக்கு மறதி வருகிறது என்று மிகவும் அச்சமும், கவலையும் கொள்ளுவார்கள், சொல்லுவார்கள்.
அது வயது மூப்படையும் போது ஏற்படும் இயல்புதானே – அதற்காக அளவுக்கு அதிகமாக பயப்பட வேண்டியதில்லை. (எழுதும் எனக்கே கூட ஓர் அனுபவம், அருகில் உள்ளவர்கள் பெயர்கூட சில நேரங்களில் நினைவுக்கு உடனே வர மறுக்கும் நிலை)
படித்தவர்களில் சில மூத்தவர் உடனே தனக்கு அல்ஷைமர்ஸ் (Alzheimers), டிமென்ஷயா (Dementia), அம்னீஷியா (Amnesia) என்றெல் லாம் மனக் குழப்பம் அடைந்து, பிரச்சினை இல்லை என்றாலும் தானே பிரச்சினைகளை உண்டாக்கி மாறாத மனக் கவலையைப் பின்னிக் கொள்ளும் நிலை!
நல்ல நட்புறவுகளைவிட முதுமையில் சிறந்த மருத்துவர்கள் முதியவர்களுக்கு வேறு எவரு மிருக்க முடியாது.
நம்பத்தக்க நண்பர்கள்தான் நம் வாழ்க்கைக் காவலர்கள் என்பதை மறக்க வேண்டாம்!
நல்ல நட்புறவு மனமுள்ள, நிறமுள்ள மலராக வாழ்க்கையை முதுமையிலும் அது உங்களுக்கு ஆக்கித் தரும்!
முதுமையை இளமையாக இருப்போதுபோல அனுபவிக்க ஒரே வழி, ஓய்வு பெற்றவர், ரிட்டயர் (Retire) ஆனவர் (பழுதுபட்டவர்) என்று தம்மை நினைக்காது நாளும் தொடர்ந்து நல்ல சுறுசுறுப் புடன் கூடிய அன்றாட வாழ்க்கையை வாழுங்கள்.
நாளும் நடப்பது நடைப்பயிற்சி – வயதுக்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம். முதுமையைக் கண்டு அஞ்ச வேண்டாம்!
அது ஒரு நல்வாய்ப்பு – இயற்கையின் அருட் கொடை! அதைக் கண்டு ஏன் மருள வேண்டும்?
திறந்தமனம் – உதவும் குணம், ஒப்புரவு – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்கள் – மனமும், உடலும் தூய்மை – உங்களை என்றும் இளமையாக வைத்திருக்கும். தொடருங்கள் – மகிழுங்கள்.

No comments:

Post a Comment