ஜெட் வேகத்தில் வளரும் பணக்காரர்கள்... வறுமையை ஒழிக்க 229 ஆண்டுகள் ஆகும். - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

ஜெட் வேகத்தில் வளரும் பணக்காரர்கள்... வறுமையை ஒழிக்க 229 ஆண்டுகள் ஆகும்.

ஆக்ஸ்பாம் அதிர்ச்சி அறிக்கை

சென்னை,ஜன.25- உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வறுமை தீவிரமடைந்து வருவதாக ஆக்ஸ்பாம் அறிக்கை எச்சரித்துள்ளது. தற்போதைய சூழலில் வறுமையிலிருந்து அனைவரையும் விடுவிக்க இன்னும் 229 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் கூறியுள்ளது.
உலகத்தில் மனிதன் உருவாகும்போது அனைத்தும், அனைவருக்கும் சமம் என்றே இருந்தது. ஆனால் இந்நிலை காலப்போக்கில் மாறி சொத்து சேர்ப்ப தில் மனிதர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் சொத்து சேர்ப்பது மட்டுமே இலக்கு என்று பயணிக்க தொடங்கிய மனிதன், அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டி அதில் சொத்தை சேர்க்க தொடங்கினான். இப்படியாகத் தான் இன்றைய பெரும் பணக்காரர்கள் உருவாகியுள்ளார்கள்.
சரி எப்படியாவது போகட்டும், மக்கள் நன்றாக இருந்தால் போதும் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் அங்குதான் சிக்கல் எழுகிறது. அதாவது இந்த உலகில் உள்ள செல்வங்கள் பெரும் அளவில் ஒரு சிலர் கைகளில் மட்டும் குவியும் போது, கோடிக்கணக்கான சாதாரண மக்களுக்கு உண்ண உணவு கூட இல்லாத நிலை உருவாகிறது. எனவே வறுமையை ஒழிக்க வேண்டும் என்று முயன்றால், குவித்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்புவது அவசியமாகும்.
அந்த வகையில், இன்றைய சூழலில் வறுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் வணிக உயரடுக்கு கூட்டத்தில் தனது அறிக்கையை ஆக்ஸ் பாம் முன்வைத்தது. அதில், “கரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல் மக்கள் செத்துக் கொண்டிருக்கையில், உலக பெரும் பணக்காரர்களின் சொத்து 2020ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதாவது, ஒரு பணக்காரரின் சொத்து ரூ.100 கோடியாக இருக்கிறது எனில், இந்த மூன்று ஆண்டுகளில் அது ரூ.200 கோடியாக உயர்ந்திருக்கிறது.
அதிலும், இந்த பெரும் பணக்காரர் களின் பட்டியலில் முதல் 5 இடத்தில் இருக்கும் எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட், ஜெஃப் பெசோஸ், லாரி எலிசன் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோரின் சொத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதே முதல் 7 இடத்தில் இருக்கும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு, ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொத்த நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஜிடிபி-யை விட அதிகம். ஆனால் மறுபுறம் உலகில் 480 கோடி மக்கள் போதுமான வருமானம் இல் லாமல், சொந்த வீடு, உணவு, உடை உள் ளிட்டவற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றனர். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதமாகும்.
இப்படியே சொத்துக்களும், செல்வங் களும் குறிப்பிட்ட சிலர் கைகளில் மட்டும் குவிக்கப்பட்டால் உலகத்தில் உள்ள ஏழைகள் அனை வரையும் வறுமையிலிருந்து மீட்க 229 ஆண்டுகள் ஆகும்.
சுருக்கமாக சொல்வதெனில் இந்த உலகிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மொத்த தங்கம், வைரம் போன்ற செல் வங்கள், அதேபோல உலகம் முழுவதும் உள்ள பணம், சொத்துக்களில் 43 சதவிகிதம், உலக மக்கள் தொகையில் வெறும் 1 சதவிகிதமே இருக்கும் நபர்கள் வசம் இருக்கிறது. இப்படியான செல்வ குவிப்பு தொடர்ந்து நடப்பதால், சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட எதுவும் கிடைக்கவில்லை” என்று அறிக்கை கூறியுள்ளது.

No comments:

Post a Comment