முதியோர் நலன்பற்றிய கவனக் குறிப்புகள் (1) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 22, 2024

முதியோர் நலன்பற்றிய கவனக் குறிப்புகள் (1)

featured image

பெரியார் திடலில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் கூட்டங்களில், 11.1.2024 அன்று முதியோர் நலவாழ்வுப் பற்றிய சிறப்புப் பொழிவு தலைசிறந்த மருத்துவர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் டாக்டர் சசிகுமார் குருநாதன் அவர்கள், அடிப்படையில் ஒரு மன நல மருத்துவர் (Psychiatrist). ஆனால் தற்போது அங்கு பல ஆண்டுகளாக அவர் சிகிச்சை தரும் நோயாளிகள் பெரிதும் வயது முதிர்ந்தவர்களாகவே இருப்பதால், முதியோர் நலவாழ்வுத்துறை மருத்துவராக (Geriatrician) அவர் இப்போது மருத்துவம் பார்த்து வருகிறார்.

முன்பு அயர்லாந்திலும் சென்று மருத்துவராகப் பணியாற்றி, பிறகே ஆஸ்திரேலியாவிற்குச் சென்று பல ஆண்டுகளாக மருத்துவராக உள்ளார்!
சென்னையில் படித்துச் சென்றவர்தான்! மருத்துவப் படிப்பின் அடிக்கட்டுமானமான தமிழ்நாடு இப்படி பலரையும் வெளிநாடுகளில் பெரும் புகழ் பெறும் மருத்துவர்களாக உயர்த்தி யுள்ளது நமது பெருமைக்குரிய ஒன்றாகும்.

அந்த கூட்டத்தில் ‘முதியோர் நலன்’ என்ற தலைப்பில் சுமார் 2 மணி நேரம் (கடைசியில் கேள்வி – பதில் பகுதி உட்பட) உரை நிகழ்த்தி, கேட்போரை மகிழச் செய்தார் – பெரிதும் முதுகுடி மக்களான பெரியவர்களும் மகளிர் உட்பட வந்து கேட்டு பயனடைந்தனர்!

அவரது அந்த மருத்துவ அறிவுரைகள் Power Point Presentation மூலம் மிக அழகான விளக்கத்துடன் அளிக்கப்பட்டது.
அதன் சாரத்தை, பிழிவாக்கி இங்கே தருகிறேன்.

1. முதலில் ‘முதியவர்கள்’ (Old Age Patients) என்பவர்களை ஹார்வேர்டு மருத்துவ ஆய்வுக் குழு 65 வயது நிறைவடைந்த வயதுள்ளவர் களையே பெரிதும் குறிப்பிடுகிறார்கள்.
அந்த அமெரிக்கப் பல்கலைக் கழக முதியோர் நலத்துறைப் பள்ளி சுமார் 750 பேரை தொடர்ந்து பல அம்சங்களிலும் – அவர்களது வாழ்வில் ஏற் படும் அனுபவங்கள் – மாற்றங்கள் – முதலியவற்றை யெல்லாம் தொடர்ந்து கண்காணித்து, வந்து சிலவகை முடிவுகளைத் தெரிவித்துள்ளனர்.

85 ஆண்டுகளாக இந்த ஆய்வு (Study) தொடர்ந்த நிலையில் செய்யப்படுகிறது என்பதை டாக்டர் கூறும்போது நமக்கு வியப்பு மேலிட்டது! (1938 முதல் இது நடக்கிறது எனத் தெரிகிறது).
Socio-economic  மற்றும் குடும்ப நிலை இவற்றை மூலாதாரமாகவும் வைத்து இவர்களது முதுமை பற்றிய பல நடப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பணம், புகழ், செல்வாக்கு உள்ளவர் ஆனாலும் கூட அத்தகைய முதியவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களைப் பெற்றுள்ளனர் என்பதையே முக்கியமாக மய்யப்படுத்தி பலவற்றை கண்டறிந்து வருகிறார்கள்.

முதுமையை ஒரு சுமையான வெறுப்பாகக் கருதுகிறார்களா? அல்லது அது ஒரு வாழ்க் கையின் தவிர்க்க இயலாத ஒரு முக்கிய கட்டம் – அதனை மகிழ்வாக ஆக்கி அனுபவிப்பது எப்படி என்பதற்கான நடைமுறை பற்றியெல்லாம் ஆய்ந்து தேர்ந்து கூறுகின்ற நிலை அதன் மூலம் கிடைக்கிறது.

நம் நாட்டில் உள்ள பெரும்பாலான முதிய வர்கள் – பணி ஓய்வுக்குப் பின்னர் பல குடும்பங்களில் பெறும் அலட்சிய நடத்தை- சூழ்நிலை காரணமாக மனம் வெதும்பி, வெந்து, நொந்து, நூலாகி “ஏன்தான் நமது வாழ்க்கை நீடிக்கிறது?” என்ற சலிப்பின் உச்சக் கட்டத்திற்குச் சென்று மன இறுக்கத்தினால் (Mental Stress) மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு ஆக்கப்பூர்வமான தெம்பூட்டும் பல செய்திகளும், ஒத்துழைப்பும் பெரிதும் தேவை – அதுவும் நம் மனநிலைதானே காரணம்? இவையின்மையால், Geriatric Syndrome என்ற ஒரு நோய் பற்றிக் கொள்கிறது!
அதற்கு
(1) அவரின் நிதி நிலை
(2) வாழ்க்கைத் தரம் (Quality of Life)
(3) திருப்தி அற்ற வாழ்வு நிலை – போன்ற
இவற்றை வைத்துதான் மேற்படி ‘நோய்’ குறிக்கப்படுகிறது எனத் தெரிகிறது.

(அடுத்து வரும்)

No comments:

Post a Comment