பக்தீ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

பக்தீ!

‘விஜயபாரதம்’ என்னும் ஆர்.எஸ்.எஸ். வார ஏடு கேள்வி- பதில் பகுதியில் (15.12.2023, பக்கம் 35) இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
கேள்வி: மனதில் ஏற்படும் அச்சத்தைக் களைவது எப்படி?
பதில்: ‘‘பக்திதான் சாரம். உண்மையான பக்தனுக்கு எவ்வித அச்சமோ, கவலையோ இல்லை. தேவி பராசக்தி எல்லாம் அறிவாள். பூனை எலியைப் பிடிப்பது ஒரு விதம். ஆனால், தன்னுடைய குட்டியைப் பிடிப்பது மற்றொரு விதம்” – என்று பதில் கூறியிருக்கிறது.
அந்தப் பக்தியினால் ஏற்பட்ட அச்சமற்ற தன்மையால்தான் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி – ஒரு பட்டப் பகலில் – காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கிக் கம்பியை எண்ணினாரோ?
எலி, பூனைக் கதையை அளந்து கொட்டுக்கிறார்கள். இதில் ஏதாவது அறிவுப்பூர்வமான விடயம் இருக்கிறதா? எதையாவது உளறிக் கொட்டுவதற்குச் செல்லப் பெயர்தான் பக்தி!
அது இருக்கட்டும். பக்தி என்பது மனிதனை எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது?
பஞ்சமா பாதகங்களைச் செய்தாலும் பக்தி என்ற போர்வையில் பிராயச் சித்தம் என்ற ஒன்றை வைத்திருக்கிறார்களே!
மூட்டை மூட்டையாகப் பாவம் செய்தாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பகோணம் மகாமகத் தினத்தன்று, அந்த மகாமகக் குட்டையில் ஒரே ஒரு முழுக்குப் போட்டால், செய்த பாவங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறக்கும் என்றால், மோட்சம் கிடைக்கும் என்றால், நாட்டில் ஒழுக்கம் வளருமா?
மகாமகம் முடிந்த நிலையில், அந்தக் குளத்தின் தண்ணீரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கிண்டி பரிசோதனை மய்யத்திற்கு அனுப்பி வைத்தபோது, அது கொடுத்த சோதனை முடிவு என்ன?
28 விழுக்காடு மலக்கழிவு; 40 விழுக்காடு சிறுநீர்க் கழிவு என்று ஆதாரப்பூர்வமாகக் கூறப்பட்டதே! (ஞிஜி ழிணிஙீஜி 23.2.2018)
இதுதான் பக்தியா? பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய உண்மை என்பது இப்பொழுதாவது புரிகிறதா?
இன்னொரு ஆதாரம்: திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம் என்ன கூறுகிறது?
அன்னையைப் புணர்ந்து என்று தொடங்கி, இதற்கு மேன்மை என்று முடியும் அந்தப் பாடலின் மகத்துவம் என்ன?
தாயைப் புணர்ந்து, பார்ப்பனத் தந்தையைக் கொன்றவனுக்கு மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் குளித்ததால் பாவம் நீங்கி மோட்சம் கிடைத்ததாம்!
என்ன ‘விஜயபாரதங்களே!’ இதுதானோ பக்தியின் யோக்கியதை?
– மயிலாடன்

No comments:

Post a Comment