👉 நான்கு மாநில தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? ‘
👉 இந்தியா' கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டும்தானா?
👉 கூட்டணியை ஒருங்கிணைத்துப் போட்டியிடாதது ஏன்?
👉இலவசங்களை குறைகூறிய பிரதமர் நான்கு மாநிலத் தேர்தல்களில் இலவசங்களை வாரிவழங்கியதேன்?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் கற்று ‘இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதுதான் மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிமுறை யாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நடந்து முடிந்த நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் பி.ஜே.பி.க்குச் சாதகமாகவும், காங்கிரசுக்குப் பாடமாகவும் அமைந்துவிட்டன.
தெலங்கானாவில் காங்கிரசின் வெற்றி என்பது புதிய வரவாகும். அங்கு பி.ஜே.பி. ஒற்றை இலக்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சுருக்கமாகச் சொல்லப் போனால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் பி.ஜே.பி.,க்குச் சாதகமான சூழல் தொடர் வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தென்மாநிலங்களில் சமூகநீதி தத்துவம்!
ஆனால், தென் மாநிலங்கள் பி.ஜே.பி. காலூன்ற முடி யாத பகுதிகளாக அமைந்திருப்பது எதைக் காட்டுகிறது?
தென் மாநிலங்கள் என்பவை சமூகநீதி என்ற தத்துவம் ஆழப் பதிந்திருக்கும் பகுதியாகும்.
சமூகநீதியா? மதவாதமா? என்ற வினாவை எழுப்பி னால், இந்தப் பகுதியில் சமூகநீதிதான் மேலோங்கி நிற்கிறது.
ஹிந்தி மாநிலங்களைப் பொறுத்தவரையில் மத வாதம் பல ஆண்டுகாலமாக வேரூன்றி நிற்கக் கூடியதாகும்.
மண்டல் குழுவின் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை செயல்படுத்திய வி.பி. சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அடுத்த தேர்த லில் தோற்றதும், 450 ஆண்டுகால வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் இடித்துத் தூள் தூளாக்கிய பி.ஜே.பி. வெற்றி பெற்று ஒன்றிய ஆட்சியைப் பிடித்தது அதைத்தானே காட்டுகிறது?
சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது யார்?
குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களைக் கொன்று குவித்தது யார் தலைமையிலான ஆட்சியில்? நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த பி.ஜே.பி. ஆட்சியில்தானே அந்தக் கொடூரம் - வன்மம் நடந்தது. அப்போது பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பேய் அவர்களே கூட ராஜதர்மம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டி சொல்லவில்லையா?
அந்த மோடி தான் இன்றைய இந்தியப் பிரதமர் என்பதை எண்ணிப் பார்த்தால் மத அடிப்படை வாதம் வட மாநிலங்களில் தலைதூக்கி நிற்பதை எளிதில் புரிந்துகொள்ளலாமே!
தெற்கில் சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் தந்தை பெரியார் தலைமையில் ஒரு நூற்றாண்டுக்காலம் செய்த பிரச்சாரத்தாலும், களப் பணிகளாலும், போராட் டங்களினாலும் சமூகநீதிக்கு முன், மதவாதம் மண்டி யிட்டது என்பது வரலாற்று விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் எடை போட்டுப் பார்க்கத் தகுந்ததாகும்.
ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள முதன்மையான பிரச்சினை சமூகநீதி!
அண்மைக்காலத்தில்தான் காங்கிரசின் இளந்தலை வர் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள முதன்மையான பிரச்சினை சமூகநீதியாகும்.
ஓ.பி.சி. மக்கள் மத்தியில், சமூகநீதியைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர். 90 ஒன்றிய அரசு செயலாளர்களுள் ஓ.பி.சி.யினர் வெறும் மூன்று பேர்தான் என்ற உண்மை நிலையைப் பேச ஆரம்பித்துள்ளார்.
குமரிமுதல் காஷ்மீர் வரை அவர் மேற்கொண்ட நடைபயணத்தில், அவர் எழுப்பிய சமூகநீதிக் குரல் இப் பொழுதுதான் வட மாநிலங்களை எட்டத் தொடங்கி யுள்ளது.
பி.ஜே.பி.யின் தத்துவம் வெறும் மதவாதம்தான் - அவர்களின் ஒரே சித்தாந்தம் ஹிந்துத்துவா என்ற மதவாதம்தான்.
சிறுபான்மையினர்தான் நமது எதிரி என்று காட்டி, பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களைத் தன் பக்கம் ஈர்க்கும் (Polarisation) பிரித்தாளும் யுக்திதான் பி.ஜே.பி. - சங் பரிவார்களின் சிந்தனையும், போக்குமாகும்.
மதக்கலவரங்களைத் தூண்டுவது - நடத்துவது அவர்களின் யுக்தி!
‘அந்த நெருப்பு' அணையாமல் பார்த்துக் கொள்ள ஆங்காங்கே மதக்கலவரங்களைத் தூண்டுவது - நடத்துவது அவர்களின் அணுகுமுறையாகும்.
பெரும்பான்மை ஹிந்துவாதம் என்பது தேவைக்கும், பேச்சுக்கும், ஏமாற்றுதலுக்கும்தானே ஒழிய, காரியத்தில் அந்தப் பெரும்பான்மை மக்களின் முக்கியமாக அங்கம் வகிக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் பட்டை நாமம்தானே, பி.ஜே.பி. ஆட்சியில்!
இதனையும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் புரிய வைக்கவேண்டியது மிகமிக முக்கியமும், அவசியமு மாகும்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஹிந்து முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன்தான் இதுகாறும் வாழ்ந்து வந்தனர்.
அதனை உடைக்க மதவாதப் பிரச்சினையை ஏற்படுத்தி, ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர்.
காங்கிரஸ் தோற்று இருக்கலாம்; இப்பொழுது அது தன் கையில் எடுத்துள்ள சமூகநீதியும், மதச்சார் பின்மையும்தான் மக்களின் சகோதரத்துவத்துக்கும், சமத்துவத்துக்கும், இயல்பு வாழ்வுக்கும் உரியதாகும். அரசமைப்புச் சட்டப்படியானதாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோதமானது!
இதற்கு மாறான சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பி.ஜே.பி.யின் நடவடிக்கை என்பது மக் களைப் பிரித்தாளும் பிற்போக்குத்தன்மை கொண்டது; சமூகநீதிக்கு ஆழக் குழிபறிப்பதும் ஆகும் - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோத மானதமாகும்.
தேர்தல் பிரச்சாரத்தில் மதப் பிரச்சினையை முன்வைத்து வெற்றி பெற்றவர்களின் தேர்தல் செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பி.ஜே.பி.யின் வெற்றி கேள்விக்குரியதே!
வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்களின் எண்ணிக் கையை வைத்து மட்டும் தேர்தல் வெற்றித் தோல்வியை மதிப்பிட முடியாது.
மதவாதத்தைக் கையில் எடுத்துக்கொண்ட காரணத் தால் பி.ஜே.பி. வெற்றி பெற்றுவிட்டது; எனவே, நாமும் அதனைக் கையில் எடுத்தால் என்ன என்று குறுக்கு வழியில் சிந்திக்கக் கூடாது.
சமூகநீதி, மதச்சார்பின்மை என்ற கொள்கையை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்லவேண்டும்!
தொடக்கத் தோல்வியாக இருந்தாலும், காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி எடுத்துள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை என்ற கொள்கைகளை நாடு தழுவிய அளவில் அடிமட்டத்துக்கும் கொண்டு சென்று மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.
சகோதரத்துவம் வேண்டுமா? சக மனிதனோடு நாளும் சண்டை போடும் மதவாதம் வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பிட வேண்டும். குறிப்பாக இளைஞர் கள் மத்தியில் இதனைக் கொண்டு செல்லவேண்டும்.
காங்கிரசுக்குள்ளும் பி.ஜே.பி.யின் மதவாத சிந்த னைக் கர்த்தாக்கள் இருப்பதைப் புறந்தள்ளிவிட முடி யாது. அத்தகையவர்களைக் களையெடுத்து மாநில அளவிலும், இந்திய ஒன்றிய அளவிலும் இள ரத்தம் பாய்ச்சப்படவேண்டும்.
ராஜஸ்தானும், மத்திய பிரதேசமும் தரும் இந்தப் பாடத்தைக் காங்கிரஸ் அய்யந்திரிபறக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கட்சியில் உண்மை உழைப்பாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்!
கட்சியில் உண்மை உழைப்பாளிகளுக்கு முன் னுரிமை கொடுக்கப்படவேண்டும்; வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தித்து உண்மைகளைத் தக்க வகையில் புரிய வைக்கும் வகையில், தொண்டர்களுக்குப் பயிற்சி கொடுத்து அனுப்பி வைக்கப்படவேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமல்ல - இந்தக் களப்பணி எப்பொழுதுமே அவசியமாகும்.
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களில் ‘இந்தியா' கூட்டணி என்ற அடிப்படையில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கவில்லை. அது ஏதோ நாடாளுமன்றத்திற்கு மட்டும்தான் என்பதுபோல நடந்துகொண்டனர். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்கூட இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சி, ஆம் ஆத்மி, அய்க்கிய ஜனதா தளம், இடதுசாரிகளும் தனித்தனியே போட்டியிட்டதன்மூலம் - வாக்குகள் பிரிந்ததன்மூலம் காங்கிரஸ் தோல்விக்கு முக்கியமான காரணம் என்பதில் அய்யமில்லை.
உளவியல் ரீதியாகவும் அது ‘இந்தியா' கூட்டணிபற்றி முழுமையாக புரிந்துகொள்ளக்கூடிய பாடம் அனைத்துக் கட்சிகளும் புரிந்து செயல்படவேண்டும்!
‘இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடே!
எடுத்துக்காட்டாக ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி. பெற்ற வாக்கு விழுக்காடு 41.69; காங்கிரஸ் பெற்றது 39.53. ‘இந்தியா' கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டு இருந்தால், 44.95 விழுக்காடு வாக்குகள் ‘இந்தியா' கூட்டணிக்குக் கிடைத்திருக்கும். இது எதைக் காட்டுகிறது?
‘இந்தியா' கூட்டணியின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடாகும்.
இலவசங்களைக் குறை கூறிய பிரதமர் மோடி - பி.ஜே.பி. நடந்து முடிந்த தேர்தலில் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இலவசங்களை வாரி இறைத்தது ஏன்? அவையும் ‘ஜூம்லா'தானா?
தெலங்கானா வெற்றி காங்கிரசுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு!
தெலங்கானா வெற்றி இந்த வகையில் காங்கிரசுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.
சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றுவிட்டதாலேயே மக்களவையிலும் தோல்வி ஏற்படும் என்ற விரக்தி - தப்புக் கணக்குப் போடத் தேவையில்லை; கடந்த காலங் களில் தலைகீழான தேர்தல் முடிவுகள் வந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.
ஒன்றியத்திலும் சரி, மாநில அளவிலும் சரி ஆளும் பி.ஜே.பி. செய்த சாதனைகள் என்ன என்ற வினாவை மக்கள் மத்தியில் எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும்.
‘‘ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தரப்படும் என்று சொன்ன ‘‘மோடிஜி, உங்கள் வாக்குறுதி என் னாச்சு? ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும்'' என்று நீட்டி முழங்கிய மோடி ஜி - ஒரே ஒரு பைசா வங்கியில் போட்டதுண்டா?'' என்று எங்கு பார்த்தாலும் சுவரொட்டிகளும், சுவர் எழுத்து களும் பளிச்சிட வேண்டும். எடுத்துக்காட்டுக்குத் தமிழ் நாட்டிலிருந்து இத்தகைய பிரச்சாரங்களின் பயிற்சி பெற வேண்டும். ரிசர்வ் வங்கிக்குக் கூடத் தெரியாமல் திடீரென்று ஒரு நாள் மாலை பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் மதிப்பிழப்பால் சிறு குறு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டனவே - இலட்சக்கணக்கான தொழி லாளர்கள் நடுரோட்டுக்கு வரும் நிலைமையை ஏற்படுத்திய மோடி ஆட்சித் தொடரலாமா?
உலகில் கச்சாப் பொருள்களின் விலை சரிந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதும், அதன் காரணமாக விலைவாசி உயர்ந்ததால் அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் மக்களிடம் பி.ஜே.பி. ஆட்சியின் அவலத்தை எடுத்துக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
‘‘தோல்வியும் சில நேரங்களில் நன்மைக்கே!''
இறுதியாக ஒன்று. தந்தை பெரியார் ஒன்றைச் சொல் வார், ‘‘தோல்வியும் சில நேரங்களில் நன்மைக்கே!'' என்பதுதான் அது.
நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தைத் துல்லியமாக அறிந்து, அந்தத் தவறுகள் இனி நேரா வண்ணம் திட்டங்களை முன்கூட்டியே வரையறுத்துக் களப் பணிகளைத் தொடரவேண்டும்.
அப்படி ஒன்றும் பிரதமர் மோடியின்மீது மக்களிடத் தில் நன்மதிப்புக் கிடையாது. அன்றாடம் வயிற்றைத் தடவிப் பார்க்கும் மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்த உண்மை இது.
எல்லா வகையிலும் தோல்வி கண்ட ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி!
திட்டமிடுதல்தான் முக்கியம். எல்லா வகையிலும் தோல்வி கண்ட ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியை - உரிய வகையில், திட்டமிட்ட முறையில் செயல்பட்டால், மக்கள் தூக்கி எறியத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் பொதுத் துறைகள் எல்லாம் தனியார்த் துறைக்குப் போய்க் கொண்டுள்ளன. அதானி, அம்பானி வகையறாக்களுக்கு வாராக் கடன் என்று 25 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்தது மோடி ஆட்சி.
மோடி ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது.
இவற்றையெல்லாம் திசை திருப்பவே மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அயோத்தியில் ராமன் கோவில் கும்பாபிசேகம்! மக்களை அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவசமாக அழைத்துச் செல்லும் வாக்குறுதி!!
இவற்றையெல்லாம் எடுத்துக் கூறினால், பி.ஜே.பி. ஆட்சியின் தந்திரமும், ஏமாற்று வேலையும், திசை திருப்பும் யுக்தியும், புத்தியும் மக்களுக்குப் புரியத்தான் செய்யும்!
மற்றொரு நடைபயணத்தை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி இளந்தலைவர் ராகுல் மேற்கொள்கிறார் - அது நல்லதோர் திருப்பத்தைக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லை.
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்...
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் இருக்காது - பாசிசம் தான் சிம்மாசனத்தில் ஏறும் என் பதை மக்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கவேண்டும்.
கடைசியாக ஒன்று!
‘இந்தியா' கூட்டணியின் ஒற்றுமைதான் இது - எத்தனை இடங்கள் எங்கள் கட்சிக்கு என்பதை விட்டுவிட்டு, வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். மோடி ஆட்சி வராமல் தடுக்கப்பட வேண்டியது என்ற ஒற்றைக் குறிக்கோளோடு ஒன்று பட்டு, விட்டுக் கொடுக்கும் தன்மையோடு, நெளிவு சுழிவோடு ‘இந்தியா' கூட்டணி செயல்படவேண்டும்!
வெற்றி நமதே என்ற உறுதியோடு இன்று முதலே பயணத்தைத் தொடரவேண்டும்! தொடரவேண்டும்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.12.2023
No comments:
Post a Comment