வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலைகளையும் நிறுவிக் கொண்டிருக்கிறது ‘திராவிட மாடல்' ஆட்சி!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
சென்னை, டிச.1 வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு மணிமண்டபங்களையும், நூலகங்களையும், சிலை களையும் நிறுவிக் கொண்டிருக்கிறது ‘திராவிட மாடல்' ஆட்சி! ‘‘திராவிடம் வெல்லும் - என்றைக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துச் சொல்லும்'' என்பதற்கான அடையாளம் இது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.தமிழ்நாடு அரசின் சார்பாக இன்று (1.12.2023) காலை சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டபம் வளாகத்தில் திராவிடப் பேரொளி திராவிட முன்னோடி அறிஞர் அயோத்திதாசப் பண்டிதரின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். அந்நிகழ்வில் பங்கேற்ற கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவரது பேட்டி வருமாறு:
அயோத்திதாசப் பண்டிதர்
மணிமண்டபம் - சிலை திறப்பு விழா
அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் திராவிட இயக்கத் தினுடைய வேர்களில் ஒருவர். அப்படிப்பட்ட ஒருவரை திராவிடர் இயக்கம் என்றைக்கும் மறக்காது. மாறாக, வரலாற்றில் யார் யாரெல்லாம் உழைத்திருக்கிறார்களோ, அவர்களையெல்லாம் அடையாளம் கண்டு - விழுதுகள் - பழுதில்லாத விழுதுகளாக இன்றைக்கு 'திராவிட மாடல்' ஆட்சி இருக்கின்ற காரணத்தினால்தான், அப்படிப்பட்ட அத்துணைத் தலைவர்களையும் வரலாறு என்றைக்கும் வாழ வைக்கும் என்பதற்கு அடையாளமாகத்தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆங்காங்கே மணி மண்டபங்களையும், நூலகங்களையும், சிலைகளையும் நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். இவை எல்லாம் வரலாற்றுச் சாசனங்கள் - கல்வெட்டுகள்!
அதில் இன்று நடைபெற்ற நிகழ்வு மிகச் சிறப்பான அம்சம்! இந்த முயற்சி திராவிடம் வெல்லும் என்பதற்கும் - என்றைக்கும் மறைக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துச் சொல்லும் என்பதற்கான அடையாளமும் இது.
செய்தியாளர்: அயோத்திதாசப் பண்டிதர் குறித்து இளை ஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்ற இந்தக் கால கட்டத்தில், அவருக்கு மணிமண்டபமும், சிலையும் திறக்கப்பட்டு இருப்பது குறித்து உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யட்டும். இது ஓர் அடையாளச் சின்னமல்ல - எழுச்சியினுடைய மறுமலர்ச்சி வரலாறாகும்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
No comments:
Post a Comment