பதவிகள் தேடி வரும் போது அந்தப் பதவியைப் பெற்று தக்க காலத்தில் தனது திறமைகளைவெளிக்கொண்டு வந்து அந்தப் பதவிக்கான பெருமையைத் தேடித்தந்தவர்கள் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மகளிர் பெருமழை வெள்ளத்தின் போது களத்தில் நின்று களமாடி மக்களை மீட்டெடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
சென்னை மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது இல்லத்தில் உணவு சமைத்துக் கொண்டு சென்ற காட்சிகள் நாளிதழ்களில் வந்து கொண்டு இருந்த ஒரு வாரத்திற்கு அவர்களின் சொந்த தொகுதியான தூத்துக்குடியில் 100 ஆண்டுகள் வரலாறு காணாத மழை – நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அத்துமீறல் தொடர்பாக அரசை எதிர்த்து கேள்விகேட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்துகொண்டு இருந்தனர். அதில் கனிமொழியும் ஒருவர்.
இந்த நிலையில் அவரது சொந்தத் தொகுதி மழைவெள்ளத்தில் கடுமையான பாதிப்பில் இருந்தது, ஒருபுறம் நாடாளுமன்றத்தில் மக்களின் குரலை எடுத்துரைக்க வேண்டிய நெருக்கடி மறுபுறம் தனது தொகுதியில் மழைவெள்ளம் – தேர்தல் பரப்புரையின் போது தூத்துக்குடியின் ஒவ்வோரு சாலையும் அவருக்கு அத்துப்படி ஆனது, உதவிகளை எதிர்பார்த்து விண்ணப்பம் கொடுத்துக்கொண்டு இருக்காமல் தொகுதித் தோழர்களோடு உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினார். துயரத்தில் இருக்கும் மக்களுக்கு – அதிகாரத்தில் இருந்துகொண்டு அரசியல் பேசும் நபர்களுக்கும்முன்பு மக்களை மீட்க களத்தில் இரவு பகல் பாராது இடுப்பளவு தண்ணீரில் சென்று மக்களைக் காப்பாற்றினார். பாதமளவு தண்ணீர் இருக்கும் சாலையில் ஜேசிபியில் சென்று படம் எடுத்துக்கொண்டு இருந்தவர்கள் முன்பு மீட்புப்பணி என்றால் என்ன என்று பாடம் எடுத்தவர், தூத்துக்குடி மக்கள் எக்காலத்திலும் கனிமொழி அவர்களின் பணியை மறக்கமுடியாத அளவிற்கு மீட்புப்பணியில் இறங்கினார்.
சென்னை மேயர் பிரியா
நிர்வாகம் இயங்கும் – ஆனால் அந்த நிர்வாகம் தானாகவே இயங்க முடியாது, அதற்கென்று கட்டளைப்பீடம் உள்ளது. அந்தக் கட்டளைப் பீடத்தின் அக்கறையில் தான் அதன் கீழ் உள்ள நிர்வாகம் சீராக செயல்படும்.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டிலிருந்து சென்னையில் பெரு மழை வெள்ளம் வந்த போது இரவு பகல் பாராது சென்னை நகரத்தின் மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற களத்தில் நின்று அதிகாரிகளுக்கும் கட்டளையிட்டு பணியாளர்களோடு பணியாளராக இருந்தவர் சென்னை மேயர் பிரியா 2008 ஆம் ஆண்டு மும்பை மேயராக இருந்த சிரத்தா ஜாதவிற்கு விருது கொடுத்தார்கள். மும்பை நகரில் வரிகொடுக்காமல் பெரிய அளவிற்கு பொருட்கள் மும்பை நகரைவிட்டு வெளியே செல்கிறது என்ற தகவல் கிடைத்த போது நள்ளிரவில் தனது ஓட்டுநரின் துணையோடு மும்பை மான்கூர்ட் பகுதியில் சென்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரியை மடக்கிப்பிடித்தார் இதற்காகத்தான் அந்த விருது.. இன்றுவரை துணிச்சலாக பார்க்கப்படுகிறது அந்த நிகழ்வு.
அதற்கு சிறிதும் குறைச்சலில்லை சென்னை மேயர் பிரியா ராஜன் அவர்களின் மழைவெள்ள மீட்பு பணி, மிகவும் குறைந்த வயது – தென் இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் சென்னை நகரின் மேயர் பொறுப்பு, அந்தப்பதவியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடம் அது, ஆகையால் அந்தப் பதவியின் முக்கியத்துவம் அவர் அறிந்த ஒன்றே.
அதே நேரத்தில் அவர் பிறந்து வளர்ந்து நகரமும் கூட – ஆகவே தனக்குள்ளேயே நகரின் முன்னேற்றம் குறித்த ஒரு அக்கறையோடு பதவியில் அமர்ந்தவர். அதே போல் முதலமைச்சரும் நகர மேம்பாட்டுத்துறை அமைச்சர்களும் மேயரின் பணிகளுக்கு ஊக்கம் தந்தனர்.
2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை மேயராக பதவியேற்றார். கடந்த 10 ஆண்டுகளாக அக்டோபர் – நவம்பர் மாதங்களில் மக்களை அச்சுறுத்தும் புயல் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை நகரின் வடிகால் கட்டமைப்பை சீர் செய்ய உத்தரவிட்டு அந்தப்பணிகள் நடந்துகொண்டு இருக்கும் போது மேயர் பதவி பொறுப்பேற்றார் பொறுப்பேற்ற போதே சவால்களோடு பதவி ஏற்ற முதல் மேயர் இவராகத்தான் இருக்கும்.
ஒரு எடுத்துக்காட்டு – சென்னை அசோக் நகர் 18 நிழற்சாலை – மழைக்காலங்களில் அந்த நிழற்சாலை கிட்டத்தட்ட குளங்களைப் போலவே மாறிவிடும். பெருமழைக்காலங்களில் இரண்டு வாரம் இந்தச்சாலையில் மக்கள் நடமாட்டம் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விடும்.
ஆனால், 2022ஆம் ஆண்டு பல ஆண்டுகால நிலை மாறியது 2022 மழையின் போது இந்த சாலையில் மழைநீர் ஒரே நாளில் வடிந்துவிட்டது. சோதனையாக 2023 நவம்பர் புயல்மழை வரலாறு காணாத ஒன்றரை நாள் தொடர் அடைமழையில் தண்ணீர் தேங்கி நின்றது, மழை நின்றதும் உடனடியாக மழைநீர் வடிந்து 6ஆம் தேதி மாலை மழைவெள்ளம். அந்த நிழற்சாலையில் – இருந்த தடமே இல்லாமல் போனது. இது ஒன்றே போதுமே அவர்களின் மழைவெள்ள நிவாரணப் பணிகளுக்கு சான்று, நகரம் முழுவதும் பல இடங்களில் நீர் தேங்கி இருந்தது ஒவ்வொரு பகுதியாக மீட்டு ஒரு வாரத்தில் சென்னையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது சென்னை மேயரின் இரவு – பகல் பாராத களப்பணியால் கிடைத்தது என்றால் மிகையகாது.
அமுதா அய்.ஏ.எஸ்.
தமிழ்நாட்டு மக்களால் மறக்க முடியாக முகமாக அமுதா அய்.ஏ.எஸ். இருக்கிறார். கலைஞரின் மறைவின் போதும் அவரது நல்லுடல் மரினாவில் இறுதித் துயில் கொள்ளும் கடைசி நிமிடம் வரை அவர் ஆற்றிய பணிகளை தமிழ்நாடு மக்கள் மறந்துவிடமாட்டார்கள். சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்பின் போது மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டும் – நிவாரணப் பொருட்களை உடனுக்கு உடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு செல்ல கட்டளைப் பீடமாக செயல்பட்டவர் அமுதா அய்.ஏ.எஸ்.
நீண்ட காலமாக தமிழ்நாட்டு மக்களோடு இருந்து பணியாற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை அறிந்துகொண்டு தேவையான உதவிகள் கிடைக்க எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலான்மை மய்யத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டு தொடர்ந்து வந்த அத்தனை அழைப்புகளையும் முக்கியமான ஒன்றாக எடுத்துக்கொண்டு பம்பரமாக சுழன்றார். சென்னை வெள்ளத்தின் போது அதிரடியாக களம் இறங்கி பல ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றியவர் அமுதா அய்.ஏ.எஸ். காஞ்சிபுரம் மணிமங்கலத்தில் வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்களையும், குழந்தைகளையும் நேரடியாக களத்தில் இறங்கி மீட்டார். இந்தியா முழுவதும் பதவிக்கு வரும் அதிகாரிகளுக்கு இவரது நிவாரணப் பணிகள் ஒரு பாடமாகவே அமையும் அந்த அளவிற்கு இவரது மீட்புப் பணிகள் பாரட்டத்தக்கவையாக இருந்தது.
மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு பதவிக்கு வந்தவர்களுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் நெகிழ்வுத்தன்மை அவர்களின் பணியை மேலும் மெச்சத்தக்கதாக மாற்றும் – அந்த வகையில் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பறிந்து களமாடி மக்களை மீட்டதில் அமுதா அய்.ஏ.எஸ். அவர்களின் பங்கினை தமிழ்நாடு அவ்வளவு எளிதில் மறந்துவிடாது.
இது மட்டுமல்லாமல் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கீதா ஜீவன், உள்ளிட்ட பல மகளிர் இந்த ஆண்டின் மழை வெள்ளத்தின் போது களமாடி மக்களை மீட்டதில் இவர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை ஆகும்.
No comments:
Post a Comment