தமிழர்களின் உரிமைப் பே(£)ராயுதமான 'விடுதலை' அங்கிங்கெனாதபடி எங்கும் சென்று தன் தோளை நிமிர்த்தி சமர் செய்திருக்கிறது.
எழுத்தாளர் சின்னக்குத்தூசி அவர்கள் அன்றைய சின்ன சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியிடம் பேட்டி கண்டபோது, 'விடுதலை'யை அன்றாடம் படிப்பதாக சங்கராச்சாரியார் ஒப்புக்கொண்டார்!
''பெரியாரும், 'விடுதலை'யும் என் அன்பார்ந்த எதிரிகள்'' என்றார் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி)!
'விடுதலை' வேதிய ஆதிக்கத்தின் விலாவை வேலாகத் தாக்கிய போதும், ஆச்சாரியார் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் என்பதுதான் கோடிட்டுக் காட்டத்தகுந்ததாகும்.
ஆச்சாரியாரின் அந்தக் கருத்தை 'விடுதலை'யே பதிவிட்டுள்ளது என்றால், ஆச்சரியமாகத்தான் இருக்கும் - நம்புவதற்கும் முடியாது!
ஆனாலும், உண்மை என்பது உண்மைதானே! தீயைப் பஞ்சு மூட்டைகளால் அணைக்க முடியுமா?
இதோ ஆச்சாரியார் கணிப்பைக் கவனியுங்கள்!
'விடுதலை'யின் பிரச்சாரத் தொண்டால் வெகுவிரைவில் மாற்றுக் கொள்கை உடைய வர்களையும் விழிப்புறச் செய்வதற்கு நல்ல சான்றுகள் கிடைத்து வருகின்றன. அதில் வெளி வரும் புராண, சாஸ்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆஸ்திகப் பிரச்சாரகர்களே அவ்வாராய்ச்சியில் கண்ட உண்மைகளை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. உண்மை யான பிரச்சாரத் தொண்டுக்கே உயர்வு கிடைக் கும் என்பதும் தெளிவாகிறது.
மதுரையில் பேசிய முதலமைச்சர் ஆச்சாரி யார் திராவிடத் தலைவர் பெரியாரைக் குறிப் பிட்டு, அவர்கள் இருவரிடையேயும் பழங் காலத்திலிருந்தே நிலவிவரும் சிறப்பான நட்பை யும், பெரியார் அவர்கள் நாட்டுப் பணியில் தீவிர சிரத்தையுடன் முந்தைய நாளிலிருந்தே பாடுபடு வதையும் புகழ்ந்து கூறியிருப்பதுடன், பெரியாரின் பிரச்சாரத்தில் காணும் உண்மைகளை ஒப்புக் கொண்ட வகையில், கோவில்களின் புனிதத் தன்மை குறைந்திருப்பதையும், ராமாயணம் ஓர் கட்டுக்கதையென்றே சொல்லவேண்டுமென்றும், 'தர்மம்' என்பதே மனச்சான்றுக்குச் சரியெனப் படுவதுதானென்றும், அக்காலத்தில் மக்களிடம் குடிகொண்டிருந்த ஒழுக்கக் குறைபாடுகளைப் பற்றி கவி வாணரால் சித்தரிக்கப்பட்டதுதான் ராமாயணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.('விடுதலை', 3.3.1953)
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம்பற்றியும், இராமாயணம் குறித்தும் ஆச்சாரியார் தெரிவித்துள்ள கருத்துகள் எல்லாம் 'விடுதலை'யின் வீச்சும், தாக்கமு மேயாகும்.
'விடுதலை' என்பது வெறும் செய்தித்தாள் அல்ல (News Paper) - அது ஒரு கருத்தியல் ஏடு (Views Paper).
'விடுதலை'யில் வெளிவரும் பெட்டிச் செய்திகூட அரசாங்கத்தின் கதவைத் தட்டும்! முடிவை மாற்ற வைக்கும்!!
''இது உண்மையா?'' என்று கேள்வியுடன் வெளி வரும் நான்கு வரி தகவல்கூட தலையைக் கிறுகிறுக்கச் செய்யும்.
'விடுதலை' என்றால், அது ஒரு 'கெசட்' என்பது பிரசித்திப் பெற்ற ஒன்று.
வியாபாரத்துக்காக நடத்தப்படும் ஏடும் அல்ல! விழிப்புணர்வையும், உரிமைக் கிளர்ச்சியையும் தூண்டும் அறிவுக் கேடயம்.
கருஞ்சட்டைத் தோழர்களே, இந்தக் கருத்துக் கருவூலத்தை வீடு வீடாகக் கொண்டு செல்வீர்!
தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (27.11.2003) சால்வை அணிவிக்க வேண்டாம் - சந்தா அளியுங்கள் என்று 'அன்புக் கட்டளை' இட்டார் நமது ஆசிரியர் அவர்கள்.
அதனை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தலைவரின் பிறந்த நாளில் சந்தாக்களுடன் சந்திப்போம், வாருங்கள் - அதைவிட பெரிய வாழ்த்து வேறு எதுவும் இருக்க முடியாது! வாரீர்! சந்தாக்களை வாரி வழங்குவீர்! வழங்குவீர்!!
- கலி.பூங்குன்றன்,
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
பொறுப்பாசிரியர், 'விடுதலை'
No comments:
Post a Comment