பெரியாரியம் குறித்த பயிலரங்கம் - மும்பையில் ஒரு முக்கிய நிகழ்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 18, 2023

பெரியாரியம் குறித்த பயிலரங்கம் - மும்பையில் ஒரு முக்கிய நிகழ்வு

மும்பையில் இதுவரை இல்லாத வகையில் திராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் 15 முதல் 30 வயதினருக்காக நடத்திய பயிலரங்கம் ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஒரு பார்வையாளராக, இந்த அறிவார்ந்த கூட்டத்தில் பங்கேற்றது எனக்குக் கிடைத்த நல் வாய்ப்பு. அங்கு டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் மற்றும் மும்பையின் அய்.அய்.டி ஆய்வு மாணவர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தேன்.

பெரும்பான்மையாகத் தமிழ் பேசும் பார்வையாளர்களும், அவர்களில் பலர் பெரியார் சித்தாந்தத்தின் தாக்கம் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்களில், மராத்தியைத் தாய் மொழியாகக் கொண்ட ஹர்திக், நிகழ்வின் பன்முகத்தன்மையைக் கூட்டினார்.  இந்தக் கலவையான பங்கேற்பாளர் கூட்டம் பேச்சாளர்களுக்கு ஒரு தனித்துவமான சவாலாக இருந்தது.  இருப்பினும், அவர்கள் தங்கள் அணுகுமுறையால் அதனைத் திறமையாக நிறைவேற்றினர். இளம் தலைமுறையினருக்கு பெரியார் சிந்தனைகளை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், அனுபவமுள்ள பெரியாரிஸ்டுகளுக்கு ஈர்ப்பாக இருக்கும் வகையிலும் வகுப்புகளை நடத்தினர்.

என் அருமை நண்பர், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வி.சி.வில்வம் உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த அர்ப்பணிப்பு நிறைந்த தனது குழுவுடன் இணைந்து, இது பற்றிய அறிவூட்டும் பவர் பாயின்ட் விளக்கக் காட்சிகளை வழங்கினார்.

அ) பெரியார் பற்றிய அறிமுகம்

ஆ) சமூக ஊடகங்களில் பெரியாரிஸ்டு களின் பங்கு

இ) மூடநம்பிக்கைகள்

கருத்தை ஈர்க்கும் இந்த விளக்கக் காட்சிகள் நிகழ்ச்சியின் தாக்கத்தைக் கணிசமாக மேம்படுத்தியதைத் ஹேமலதா கயனாதத்திடமிருந்து பெறப்பட்ட உற்சாகமான கருத்துகள் தெளிவாக்குகின்றன.

கவிஞர் புதிய மாதவி, ஆய்வுமாணவர் கயல்விழி மற்றும் எழுத்தாளர் குமணராஜன் (லெமூரியா அறக்கட்டளை) போன்ற மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற வல்லுநர்கள் பெரியாரின் கண்ணாடி மூலம் தங்கள் அறிவார்ந்த பார்வையை  இது போன்ற முக்கியமான கருப்பொருள்களில் எடுத்துவைத்தனர்.

1) பெண்கள் உரிமைகள்

2) மதம்

3) ஜாதி ஒழிப்பு

மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொறியாளர் அ.ரவிச்சந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். மும்பை திராவிடர் கழகச் செயலாளர் இ.அந்தோணி அவர்களின் அன்பான வரவேற்புடன் தொடங்கியது.  மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் அவர்கள் தொடக்க உரை ஆற்றி, திராவிடர் கழகத்தின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களின் ஒருங் கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிந்தனையைத் தூண்டும் அவரது பாராட்டு உரையுடன் நிறைவுற்றது. 

சில அறிவூட்டும் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள 'ஒரு நிமிட நேரம்' கிடைத்தது எனக்கு!

1) மகாராட்டிரா, குறிப்பாக கொங்கண் பகுதி, ஒரு காலத்தில் பொன்பாட்டு கொங்கண்யத்தின் மன்னன் நன்னனால் ஆளப்பட்டது, இது தமிழ் சங்க இலக்கியத்தில் அழியாத பெயர்.

2) தமிழ்க் காவியமான சிலப்பதிகாரத்தில் நூற்றுவர் கண்ணர் என்று குறிப்பிடப்படும் சாதவாகனர்கள், கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை பிரதிஸ்தானத்தை (மகாராட்டிரா) ஆண்டதாகக் கூறப்படுகிறது.  தமிழ் மற்றும் பிராகிருதம் ஆகிய இரு மொழிகளிலும் கல்வெட்டுகளுடன் கூடிய சாதவாகன நாணயங்கள் அய்தராபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை தமிழின் தாக்கத்திற்கு சாட்சியாக உள்ளது.  சாதவாகனர்கள் பிராகிருத மொழி பேசும் பெண்களை மணந்ததால், அதன் சந்ததியினர் தாய் மொழியைப் பயன்படுத்தியதுடன் இறுதியில் மராத்தி மொழியின் தோற்றத்திற்கு பங்களித்தனர். அதில் சுவையான ஒரு செய்தி, மராத்தி மொழி பேசுபவர்கள் தாய்க்கான பாரம்பரிய தமிழ் வெளிப்பாட்டை இன்னும் தக்கவைத்துக் கொள்கிறார்கள்,"ஆயி (आई)."  ஒருவரை அழைக்க, அவர்கள், "Ikaḍē yē (इकडे ये)," என்ற தெலுங்கு வெளிப்பாட்டைப் போலவே, "Ikkaḍiki raṇḍi (இக்கடி ரண்டி), Thamizh equivalent: Iṅkē vā (இங்கே வா)."

3) மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான "அந்தேரி" (அந்த+எரி - அந்த ஏரி) என்ற பெயர், உண்மையில் ஒரு தூய தமிழ்ச் சொல்லாகும், இது கடந்த காலத்தில் ஏரி இருந்ததைக் குறிக்கிறது.

4) இந்த வரலாற்றுச் சான்றுகள் மராட்டியத்தில் தொடரும் திராவிட பாரம்பரியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மேலும் மராட்டியர்களுடன் கைகோப்பதும், பெரியாரின் சமூக நீதி பற்றிய செய்தியைப் பிரச்சாரம் செய்வதும் நமது கடமையாகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற திராவிட விழுமியத்தையும் அது எதிரொலிக்கும்.

5) மும்பையில் உள்ள அனைத்து திராவிடச் சமூகங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தச் செயல்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும் என்பது எனது பரிந்துரை.  பஞ்ச திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு உள்ளிட்ட மொழிகளிலும் இது நடத்தப்பட வேண்டும். கூடுதலாக, தொல்காப்பியத்தில் தொல்காப்பியர் பரிந்துரைத்ததைப் போன்ற இலக்கண வடிவங்களைக் கடைப்பிடிக்கும் மொழியியல் சமூகங்களான மராத்தி மற்றும் குஜராத்தி போன்ற மொழி பேசுவோரையும் மும்பையில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

மும்பை திராவிடர் கழகத்தின் பொருளாளர் கண்ணன் மற்றும் பெரியார் பாலாஜி போன்றவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஏற்பாட்டுப் பணிகள் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாகும்.

பெரியாரின் கருத்துகள் இந்தியாவின் பல மொழிகளிலும் பரவ வேண்டும் இந்த வகையிலான பயிற்சி பெற்றவர்களால் நடத்தப்பட வேண்டும் என்று பெரும்பாலான பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தையும் விருப்பத்தையும் நிறைவேற்றும் சவாலை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் மனதார ஏற்றுக்கொண்டனர்

 - டாக்டர். ஜி. ரவிக்குமார் ஸ்டீபன்,  நிறுவனர், திராவிட மறுமலர்ச்சி மய்யம்.


No comments:

Post a Comment