ஜாதி ஒழிப்பும் - சட்ட எரிப்பும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

ஜாதி ஒழிப்பும் - சட்ட எரிப்பும்

வெற்றிச்செல்வன்

தந்தை பெரியாரின் போராட்டங்கள் அனைத்தும் ஜாதி ஒழிப்பினை முதன்மை யானதாகக் கொண்டவை. ஜாதியை ஒழிப்பதற்காகப் பெரியார் முன்வைத்த தீர்வுகள் பின்வருமாறு:

1. சட்டப்படியான ஜாதி ஒழிப்பு

2. கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனிய  ஒழிப்பு

3. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

4. ஜாதி மறுப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணங்கள்

5. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை

 சட்டப்படியான ஜாதி ஒழிப்பு

“ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்லாத பெரியார் யார்? ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக்கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே. இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆக வேண்டும். இதற்குச் சரியான வழி, அறிவினாலோ, ஞானத்தினாலோ, போதனையினாலோ ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது பெரிதும் அரசாங்கச் சட்டத்திலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தினாலும்தான் இதை (அதாவது இந்த உயர்வு தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும் (குடிஅரசு, 02.12.1928) என்று பேசியவர் பெரியார். 

இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்

இந்திய நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையான அரசியல் சட்டத்தில் தீண்டாமையை விலக்கிவிட்டு ஜாதி வேற்றுமைக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 17ஆவது பிரிவு  “Untouchability is abolished'' என்று கூறுகிறது. ஆனால் தீண்டாமைக்குக் காரணமான - “Caste is abolished” என்று கூறவில்லை.

இந்திய அரசியல் சட்டத்தின்  அடிப்படை உரிமைகள் பகுதியில் - உட்பிரிவுகள் 13(2); 25(1); 26; 29(1),(2); மற்றும் பிரிவு 368 ஆகியவை மதத்தை, ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் உள்ளன. ஆகவே, இந்த அரசியல் சட்டத்தை மாற்றி எழுதியாக வேண்டும் என்றும், ஜாதி, மதங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்பைப் பொதுவான அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

“தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அரசியல் சட்டத்தின் பிரிவு 17-இல் உள்ள ’தீண்டாமை’ என்னும் வார்த்தைக்குப் பதிலாக, ஜாதி ஒழிக்கப்பட்டு விட்டது என்று சட்டத் திருத்தம் செய்யுங்கள்” என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, தாம் மறைவதற்கு 15 நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாட்டில்கூட (09.12.1973) தீர்மானம் நிறைவேற்றியவர் தந்தை பெரியார்.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத் தையும் உடனடியாக அறிவித்துப் போராடவில்லை பெரியார். அரசியல் சட்டம் இயற்றப்பட்ட நாள் முதலாகவே அச்சட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தவர் பெரியார். அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26ஆம் நாளைத் திராவிடரின் துக்க நாள் என்று அறிவித்தார்.

தஞ்சை மாநாடு (03.11.1957)

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் குறித்து தஞ்சையில் நடந்த மாநாட்டில் தீர்மானங்களை நிறைவேற்றி, விரிவான விளக்கங்கள் தந்து, அரசுக்குக் கெடுவும் விதித்து அதன்பின்னர்தான் பெரியார் போராட்டத்தைத் தொடங்கினார். தஞ்சை மாநாட்டுத் தீர்மானங்களைப் பார்க்கும்போது பெரியாரின் விளக்கம் எத்துணை அறிவார்ந்த விளக்கமாக இருக்கிறது என்பதை ஊன்றிப் படித்தால் உணர முடியும். அத்தீர்மானங்கள் பின்வருமாறு:

1. அரசியல் சட்டத்தில் கண்டுள்ள மதப் பாதுகாப்பு, மத உரிமை என்பதில் இந்து மதம் என்பதை எடுத்துக் கொண்டால் அது வருணாசிரம தர்மம் என்கிற, பிறவியில் மக்களை ஜாதிகளாகப் பிரித்து அவரவர்களுக்குத் தொழிலையும் கற்பித்து, ஒரு பிறவி உயர்ந்தது, முதன்மையானது, மற்றொரு பிறவி தாழ்ந்தது, இழிவானது என்பதான கருத்துகளை அமைத்து அந்த அமைப்பைக் காப்பதுதான்.

மத சுதந்திரம் என்பதாகச் சாஸ்திரங் களிலும் மற்றும் மத ஆதாரங்களிலும் கூறுவதைக் கொள்கையாகவும், நம்பிக்கையாகவும் கொள்வதை உரிமை யாக்குவதாகிறது. இந்த உரிமையானது இந்நாட்டு ஹிந்து பொதுமக்களில் நூற்றுக்கு மூன்று பேர்களை மேல்ஜாதி, உயர்ந்த பிறவி என்று உடல் உழைப்பில்லாமல் இருந்து கொண்டு மற்றவர் உழைப்பில் சுகவாசிகளாக வாழ்வதென்றும், நூற்றுக்குத் தொண்ணூற்று ஏழு பேர்களான மக்களைக் கீழ்ஜாதி இழிமக்களென்றும், உடல் உழைப்பு வேலை செய்து கொண்டு அடிமையாய், பாட்டாளியாய் வாழ வேண்டியவர்கள் என்றும், பின் சொல்லப் பட்ட மக்கள் கல்வியறிவுக்கும், நீதி நிர்வாக உத்தியோகங்கள், பதவிகளுக்கும் தகுதியற்றவர்கள் என்றும், ஆக்குவதாக இருப்பதால், இந்த மதக் காப்பாற்று உரிமை கண்டிப்பாக எடுக்கப்பட வேண்டும் என்பது அவசியம் என்றும் இம்மாநாடு கருதுகிறது.

2. இந்தக் காரியங்கள் சாதாரணமானத் தன்மையில் மாற்றப்படாவிட்டால் எந்த விதமான முறையைக் கண்டாவது மாற்றித் தரும்படிச் செய்ய வேண்டியது பொதுமக்களின் இன்றியமையாத கடமை என்று இம்மாநாடு கருதுகிறது.

3. ஓட்டுரிமை இல்லாமலும் மற்றும் இந்த அரசியல் சட்டமானது பொதுஜன சரியான தேர்தல் முறை இல்லாமலும் பொறுக்கி எடுத்துக் கொள்ளப்பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபையினால் வகுக்கப்பட்ட சட்டமாதலாலும், இந்தச் சட்டத்தைத் தயாரித்த ஆறு பேர்களில் பெரும்பான்மை யானவர்கள் பார்ப்பனர்கள் ஆதலாலும், பார்ப்பனர், முஸ்லிம், பஞ்சமர் ஆகியவர்களைத் தவிர்த்த பொதுஜனத் தொகையில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்களாயுள்ள சூத்திர ரென்று ஆக்கப்பட்டிருந்த பெருங்குடி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு சட்டம் செய்யும் குழுவைக் கொண்டு இச்சட்டம் வகுக்கப் பட்டிருந்தாலும் இந்தச் சட்டமானது நான்காம் ஜாதி என்று கூறப்படுகின்ற மக்களைக் கட்டுப் படுத்தத்தக்கதாக ஆகாது என்று இம்மாநாடு கருதுகிறது.

4. இப்படிப்பட்ட காரணங்களால் இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம் ஆகியவை காரணமாக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் ஆகியவை அளிக்கப்படாததாயிருப்பதால் இவைகளை முன்னிட்டு, இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்குக் கேடானது என்று கருது வதால், இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ இன்று முதல் 15 நாள் வாய்தா வுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26ஆம் தேதி என்ற அரசியல் சட்டப் பிறப்பு நாள் என்று வைத்த, இந்த மாதம் நவம்பர் 26ஆம் தேதி அன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பில் இட்டுக் கொளுத்தத் தக்கது என்று இம்மாநாடு பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது”.

மேற்கண்ட தீர்மானங்களைப் பொதுச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் முன்மொழிய, தோழர் ஏ.பி.ஜனார்த்தனம் அவர்களும், ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் வழிமொழிந்தனர்.  

பெரியார் அரசுக்குக் கொடுத்த 15 நாள் தவணை முடிந்த நிலையில், போராட்டம் தொடங்கும் முன்னரே கைது செய்யப்பட்டார். ஆயினும் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் அரசியல் சட்ட எரிப்பில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர். திராவிடர் கழகப் போராட்ட வரலாற்றில் சட்ட எரிப்புப் போராட்டம், ஒரு மணிமகுடமாகும்.

இன்று ஜாதி ஒழிப்பு குறித்துப் பேசும் சில தோழர்கள், தந்தை பெரியார் ஜாதி ஒழிப்பிற்குத் தீர்வாக மதமாற்றத்தை முன்வைத்தார் என்ற தவறான கருத்துப் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பெரியாரின் சட்ட எரிப்புப் போராட்ட வரலாறை ஊன்றிப் படித்து உண்மையை உணர வேண்டும்.

No comments:

Post a Comment