'விடுதலை'க்கு நன்றி! : அம்பேத்கர் தழுவியது புத்த மார்க்கமே! - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 12, 2023

'விடுதலை'க்கு நன்றி! : அம்பேத்கர் தழுவியது புத்த மார்க்கமே!

"பெரியார் வாயிலாக மட்டுமின்றி அம்பேத்கரைப் பெரிதும் ஈர்த்த பேராசிரியர் லட்சுமி நரசுவின் எழுத்துகளின் வாயிலாகப் புரிந்து கொண்டாலும் பவுத்தம் ஒரு மதமல்ல என்றுணர முடியும்" என்று "தலித் முரசு" ஆசிரியர் புனித பாண்டியன் எழுதியிருந்த கட்டுரை (27.10.2023) 'விடுதலை'யில் வெளியிட்டிருந்ததை படித்தேன்.

50 ஆண்டு காலமாக - என் எண்ணத்தில் தடுமாறிக் கொண்டிருந்த அசைக்க முடியாத கருத்தை, அதாவது டாக்டர் அம்பேத்கர் பவுத்தம் தழுவினாரா? மதம் தழுவினாரா? என்ற கேள்வியை பல அறிஞர்களிடமும், கற்றோரிடமும் கேட்டு - அய்ம்பது ஆண்டுகள் ஆன நிலையில் "தலித் முரசு" ஆசிரியர் புனித பாண்டியனின் கட்டுரையை படித்ததும் எனக்குள்ளே ஏற்பட்டிருந்த குழப்பத்தை தெளிவுப்படுத்தியது; காரணம் நான் டாக்டர் அம்பேத்கரை முன்னெடுக்கும் தோழர்களிடத்தில் மதமா? மார்க்கமா? என்ற கேள்வியை முன் வைக்கும்போது -  மார்க்கமாக இருந்தாலும் அம்பேத்கர் மதம்தான் தழுவினார் என்ற அறியாமைப் பதிலையே கேட்டிருக்கிறேன்.

"மதம் ஓர் அபின்" என்ற காரல் மார்க்ஸின் கருத்தை அம்பேத்கர்  அறிந்திருக்க மாட்டாரா? என்ற மறு கேள்வி கேட்டதற்கு  ஒவ்வொரு தலைவர்களுக்கும் கோட்பாடுகள், கொள்கைகள் மாறலாம் என்பார்கள், இது பகுத்தறிவுக்குண்டான பதிலேயில்லை என்பேன். இது போன்ற சந்திப்புகள் பல...

அம்பேத்கரை குறை சொல்கிறாய் - அதை ஏற்றுக் கொள்ள முடியாது - என்று பலரும் என்னை அம்பேத்கருக்கு விரோதியாக சித்தரித்தார்கள்; ஆனாலும் கொஞ்சமும் தயங்காமல், ஒரு சிந்தனையாளர், பகுத்தறிவாளர் என்று உலகமே போற்றுபவர் எப்படி மதத்தை ஆதரிப்பார் என்ற என் கருத்தில் பிடிவாதமாக  இருந்தேன். 

'விடுதலை'யில் வெளியான இந்தக் கட்டுரை எனக்கு மன நிம்மதியைத் தந்துள்ளது. என்னுடைய எண்ணம் வீணாகவில்லை என்றுபெருமைப்பட்டுக் கொள்வதில் பூரிப்படைகிறேன். தந்தை பெரியாரின் பார்வையில் "பவுத்தம்" என்ன என்பதை மக்கள் அறியட்டும்; டாக்டர் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகளை இனியாவது பவுத்தத்தை ஏற்றவர்கள் புரிந்து கொள்ளட்டும்; டாக்டர் அம்பேத்கர்  தழுவியது பவுத்த நெறியே! ஒருக்காலும் அது மதமாகாது என்ற எனது ஆணித்தரமான கருத்தை வெளியிடுவதில்  தயக்கமோ, அச்சமோ இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்!

- எஸ். இரணியன், திருமுல்லைவாயில்


No comments:

Post a Comment