கருநாடகாவில் ஆட்சி மாற்றமும் மக்கள் நலனும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 23, 2023

கருநாடகாவில் ஆட்சி மாற்றமும் மக்கள் நலனும்

விவசாயிகளின் நன்மைக்காகவும், மக்களின் புரதத்தேவையை முழுமையாக்கவும் கருநாடக அரசு விரைவில் மலிவு விலை  இறைச்சிக் கடைகளைத் தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் "பேக்கேஜ்" செய்யப்பட்ட செம்மறி ஆட்டின் இறைச்சியை நியாயமான விலையில் விற்க கருநாடக அரசு திட்டமிட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் கீழ் உள்ள இந்த நடவடிக்கை கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுகுறித்து மாநில அரசின் சிறப்புப் பிரதிநிதி டி.பி. ஜெயச்சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தும்கூரு மாவட்டம் சிரா தாலுகாவில் உள்ள சீலனஹள்ளியில் ஹைடெக் இறைச்சிக் கூடத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.  இந்த இறைச்சிக் கூடம் ஜனவரி மாதத்திற்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் செம்மறி ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கவும், மக்களுக்குத் தரமான இறைச்சியை வழங்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார். 

மேலும் "இத்திட்டத்தின் கீழ் கால்நடைகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும். இது அவர்களின் வருமானத்தை மேம்படுத்த உதவும். கருநாடகா பால் கூட்டமைப்பின் நந்தினி போன்ற இறைச்சி பிராண்டை உருவாக்க இத்துறை பாடுபடும். கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு லாபகரமான விலையைப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த விவசாயிகளின் நிதி நிலையை வலுப்படுத்த விரும்பு கிறோம். இந்த முழுப் பயிற்சியும் கிராமப்புறங்களில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும்,. இறைச்சிக்காக பயன்படுத்தப்படும் கால்நடைகளின் தோலில் இருந்து பொருட்களை தயாரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. கால்நடைகளின் தோலைப்  பயன்படுத்தி அங்கு தயாரிக்கப்படும் தோல் மற்றும் பிற பொருட்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக துறையின் அதிகாரிகள் தமிழ்நாடு மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.” எனத் தெரிவித்துள்ளார். 

கருநாடகா அரசின் சோப்பு நிறுவனம் இதே போன்று துவங்கப்பட்ட நிறுவனம்  - இன்று பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டிப்போட்டுகொண்டு இருக்கிறது,   இந்த நிலையில் கருநாடக அரசின் இறைச்சி நிறுவனமும் மக்களின் பேராதரவைப் பெற்று நாட்டின் தனியார் இறைச்சி நிறுவனங்களுக்குப் போட்டியாகவும், மக்களின் புரதத் தேவையை முழுமையடையச் செய்யும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இதே கருநாடக மாநிலத்தில் பிஜேபி ஆட்சியின் போது ஹிந்துக்கள் இறைச்சி உண்ணக் கூடாது என்று ஹிந்து அமைப்புகள் இயக்கம் நடத்தின என்பதுதான்.

ஒருவர் உண்ணும் உணவை வலுக் கட்டாயமாக நிர்ணயிப்பதற்குப் பெயர்தான் பாசிசம் என்பது.

"குடி மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்கிறதா - அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பதில் திட்டங்கள் தீட்டி நிறைவு படுத்துவதுதான் ஓர் அரசின் வேலையே தவிர, இந்த உணவை சாப்பிடாதே - அந்த உணவை சாப்பிடு!" என்று சொல்லுவதா ஓர் அரசின் வேலை?

ஆட்சி தன் கடமையை நிறைவேற்றக் கையாலாகாத நிலையில் இதைப் போன்ற திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடுகிறது - இதில் பிஜேபியும், அதன் அரசும் முதலிடத்தில் இருக்கிறது என்பது தான் உண்மை! உண்மையிலும் உண்மை.


 

No comments:

Post a Comment