ஒற்றைப் பத்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 3, 2023

ஒற்றைப் பத்தி

பெரும்பான்மை!

‘‘மதவாதம் என்பதைத் தவிர பா.ஜ.க.விடம் வேறு கொள்கை இல்லை. ஆட்சிக்கு வந்தாலும், சாதனைகளைக் காட்டி ஓட்டுகளைப் பெற முடியவில்லை. வெறுப்பரசியலை வைத்தே ஒட்டுப் பெற நினைக்கின்றனர் என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். பெரும்பான்மையினர் மீது வெறுப்பு, சிறுபான்மையினர்மீது விருப்புதான் முதல்வர் ஸ்டாலினின் மத நல்லிணக்கத்திற்கான பொருள் என்பதை நாடறியும்.''

- ‘தினமலர்', 2.11.2023, (பக்கம் 8)

- இவ்வாறு கூறி இருப்பவர் தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர்.

சிறுபான்மையினர் என்று சொல்லப்படுவோர் யார் என்பது எல்.கே.ஜி. படிக்கும் குழந்தைக்கும் தெரிந்த ஒன்றே!

அவர்களின் எண்ணிக்கையில் எத்தனை விழுக்காட்டினர் கல்வி, வேலை வாய்ப்பில் எத்தனை சதவிகிதம்?

தொழில்துறையில் அவர்களின் நிலை என்ன? என்பதைத் தெரிந்திருந்தும் அந்தச் சிறுபான்மையினர்மீது வெறுப்பு நெருப்பை வீசுபவர்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த வெளிச்சம்!

பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினால் அது வெறுப்பு அரசியலாம்.

அதேநேரத்தில், பெரும்பான்மையினர் என்று பி.ஜே.பி. துணைத் தலைவர் எடுத்துக்காட்டி, அவர்களுக்காக மூக்கால் அழுகிறாரே -

அதில் உள்ள பார்ப்பனத்தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஹிந்துக்கள் என்பதைத்தான் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறார்கள் - இது பார்ப்பனத்தனத்துக்கே உரித்தான ‘‘அக்மார்க்'' முத்திரை!

அந்தப் பெரும்பான்மை மக்களைப் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாக - உட்ஜாதிகளாகப் பிரித்ததுதானே ஹிந்து மதம்.

ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களைத் தீண்டத்தகாதவர்களாக ஆக்கியதுதானே உங்கள் ‘அர்த்தமுள்ள(?)' ஹிந்துமதம்.

பஞ்சமர்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் கூறுபோட்டு அவர்கள் படிக்கக் கூடாது - படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; படித்து நெஞ்சில் வைத்திருந்தால், நெஞ்சைப் பிளக்கவேண்டும் என்பதுதானே ஹிந்து மதம்.

பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கூறுவதுதானே உங்களின் பகவான் கிருஷ்ணனால் அ(ம)ருளப்பட்டதுதானே பகவத் கீதை.

ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3 பேர் இதர பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் பூஜ்யம் என்ற நிலைக்குக் காரண கர்த்தா யார்? பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று மார்தட்டும் பார்ப்பனர்கள்தானே!

பெரும்பான்மை என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு குறிப்பிட்ட மூன்று விழுக்காட்டுப் பார்ப்பனர்கள் ‘குளிர்காய்வது' தெரியாதா?

அப்படியானால் ஹிந்து மதத்தில் பெரும்பான்மை யார்? அவர்களுக்கான சமூகநீதிக் குரலை ஏற்கிறார்களா, பார்ப்பனர்கள்?

இது மனுதர்ம காலம் அல்ல - தந்தை பெரியார் சகாப்தம். ஆளுநர் நாராயண ரவியாக இருந்தாலும் சரி, பி.ஜே.பி. நாராயணனாக இருந்தாலும் சரி - இதை உணர வேண்டும் - இல்லையேல் பொதி சுமக்கவேண்டியதுதான்!

-  மயிலாடன்


No comments:

Post a Comment