பிற இதழிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

பிற இதழிலிருந்து...

தமிழ்க் காசுவும் தந்தை பெரியாரும்

[நவ.5 : கா.சுப்பிரமணியனார் 135ஆவது பிறந்த நாள்]

வெற்றிச்செல்வன்

தமிழ்க் காசு என்றழைக்கப்பட்ட கா.சுப்பிரமணி யனார் (கா.சு. பொ.ஆ. 1888 - 1945) தமிழையும் சைவ நெறியையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். அந்தக் காலத்திலேயே எம்.எல். பட்டம் பெற்றதோடு, தாகூர் சட்ட விரிவுரையாளர் என்கிற சிறப்புத் தகுதியையும் பெற்றவர். சமயம், நீதி, வரலாறு, இலக்கியம் என்று பல்வேறு துறைகளிலும் தனது தடத்தைப் பதியச் செய்தவர்.

1920களில் தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின்னர் எழுந்த கடவுள் மறுப்புப் பரப் புரைக்கு, கா.சுப்பிரமணியனார், மறைமலையடிகளார், திரு.வி.கல்யாணசுந்தரனார் உள்ளிட்டோர் கடுமை யான எதிர்வினை ஆற்றினர். 1929ஆம் ஆண்டு மே மாதம் திருப்பாதிரிப்புலியூரில் மறைமலையடிகள் தலைமையில் சைவர் மாநாடு கூட்டப்பெற்றது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே ‘கடவுள் உண்டென்னும் கொள்கை இன்றியமையாதது' என்பதுதான். கோயிலில் வழிபடுவதற்கு உயர்வு தாழ்வு பாராட்டுதல் கூடாது, தேவதாசிகளுக்குப் பொட்டுக் கட்டுதல் கூடாது என்பன போன்ற முற் போக்கான தீர்மானங்களும் இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. 

இம்மாநாட்டுக்குச் சில மாதங்கள் முன்னர்தான்  தந்தை பெரியார் முதல் சுயமரியாதை மாநாட்டைச் செங்கல்பட்டில் கூட்டியிருந்தார். அதில் கோயில்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் தீண்டாமை என் பதை ஒழித்து, அனைவரும் பயன்படுத்துவதற்கான உரிமையைக் கொடுக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அப்போது தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கோயில் நுழைவுப் போராட் டங்களைச் சுயமரியாதை இயக்கத்தினர் முன்னெ டுத்து வந்தனர். மேலும், தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற பரப்புரையினையும் பெரியார் தனது 'குடிஅரசு' இதழின் வாயிலாகத் தொடர்ந்து மேற் கொண்டு வந்தார். சைவர் மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களைப் பார்க்கும்போது, சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் சைவர் மாநாட்டிலும் எதிரொ லித்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. 

1937ஆம் ஆண்டு திருச்சியில் 'சென்னை மாகாண 3ஆவது தமிழர் மாநாடு' நடைபெற்றது. அம்மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசியவர் கா.சுப்பிரமணியனார். "தமிழர் மொழி, கலை, நாகரிகம் ஆகிய விஷயங்களில் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க முடிவு கூற உரிமையும், ஆற்றலும் உடையவர்" என்ற பாராட்டுரையோடு விடுதலை நாளிதழ் இவரது மாநாட்டு உரை முழுவதையும் வெளியிட்டது (விடுதலை 28.12.1937, 29.12.1937). 

இம்மாநாட்டில் தமிழர் என்பதற்கான வரையறையைக் கா.சு. அளித்தார். "தமிழர் என்பவர் தமிழைத் தாய் மொழியாக உடைய வர்கள் ஆவர். தமிழ்நாட் டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி எனக் கரு தாதவர் தமிழர் ஆக மாட்டார், தமிழ் நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழி போல் போற்று பவரைத் தமிழர் என்பது இழுக்காகாது" என்றார். 

மறைமலையடிகளும், கா.சுப்பிரமணியனாரும் எனது வலதுகையும் இடதுகையும் போன்றவர்கள் என்றார் பெரியார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தோடு கைகோத்தவர் கா.சு. 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரிந்தபோது, தந்தை பெரி யாரைப் பல்கலைக் கழகத்துக்கு அழைத்துப் பேச வைத்தார், தனது இறுதிக் காலத்தில் நோயுற்று அவதிப்பட்டார் கா.சு. அப்போது அவருக்கு உதவி யாக மாதந்தோறும் 50 ரூபாய் அனுப்பி உதவியவர் பெரியார். இவ்விரு ஆளுமைகளும் கடவுள் ஏற்பு-மறுப்புக்கொள்கையில் இருவேறு துருவங்களாக முரண்பட்டு இருந்தபோதும், தமிழ் மொழிப் பாதுகாப்பு தமிழர் நலன் ஆகியவற்றில் ஒன்றிணைந்து செயல்பட்டது நினைவு கூரத்தக்கது.

நன்றி: 'இந்து தமிழ் திசை', 4.11.2023


No comments:

Post a Comment