கவிஞர் கலி.பூங்குன்றன்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தங்களுடைய கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரபல தலைவர்கள் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தப் பட்டியலில் மேனாள் முதலமைச்சரும், 2003ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்குப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தவருமான உமா பாரதியின் பெயர் இடம் பெறவில்லை. கடைசி வரை தனக்குப் பரப்புரைக்கான முக்கிய பணியைத் தருவார்கள் என்று காத்திருந்த உமாபாரதி மனம் வெறுத்து இமயமலை நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
பா.ஜ.க.வுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரபல தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 15 ஒன்றிய அமைச்சர்கள், உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத், மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மகாராட்டிர துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உ.பி. மாநில துணை முதலமைச்சர்கள் பிரிஜேஜ் பதக், கேவவ் பிரசாரத் மவுரியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் மத்தியப் பிரதேச மாநில மேனாள் அமைச்சர்களும், இந்நாள் அமைச்சர்களும் மற்றும் மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மாவும் இடம் பெற்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் அதைத் தொடர்ந்து 2020இல் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்காக தீவிர பிரச்சாரம் செய்த உமாபாரதி பெயர் தலைவர்கள் பிரச்சார பட்டியலில் இடம் பெறவில்லை.
கட்சி தலைமையினால் ஏற்கெனவே புறக்கணிக்கப்பட்ட உமா பாரதியின் அரசியல் நடவடிக்கைளை 5 ஆண்டு களாகவே மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ரஜ்சிங் சவுகான் புறக்கணித்து வந்தார். இது தொடர்பாக தலைமைக்குத் தனது வருத்தத்தை தெரிவித்தபோதிலும் தலைமையிடமிருந்து வந்த உத்தரவின் பெயரில் தான் மத்தியப் பிரதேச பா.ஜ.க.வின் நிகழ்ச்சிகளில் உமாபாரதி பெயர் இடம் பெறவில்லை என்று அறிந்த பிறகு அரசியல் வாழ்க்கையில் இருந்தே ஒதுங்கிவிட்டார்.
இந்த நிலையில் மீண்டும் தனது அரசியல் வாழ்க்கையை புதிதாக துவங்க மத்தியப் பிரதேச தேர்தலை பயன்படுத்திக்கொண்டு தனது ஆதரவாளரான நிதின் கட்கரி போன்றோரிடம் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பரப்புரையில் தனது பங்கை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
மேலும் தனது ஆதரவாளர்களிடம் தேர்தல் பரப்புரை தொடர்பான வியூகங்களை வகுக்கவும் திட்ட மிட்டிருந்தார். இந்த நிலையிலும் பா.ஜ.க. டில்லி தலைமை - உமாபாரதி என்று ஒருவர் இருக்கிறார் என்பதையே அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சமீபத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான சட்டம் குறித்து அதில் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினப் பெண்களின் பங்கு எங்கே என்ற கேள்விக் கணையை ஏவினார். எதிர்க்கட்சிகளே ஆதரவு அளித்த நிலையில், பா.ஜ.க.வின் முக்கிய தலைவரே மோடி கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்புகிறார் என்ற ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை கொந்தளித்தது.
மோடியை எதிர்ப்பது என்றால் சும்மாவா? என்னாயிற்று? உமாபாரதியோடு நின்று விடுமா? உறவினர் வரை அந்த ஈட்டி பாய்ந்துள்ளது. அவர்களின் பதவிகளையும் பறித்துவிட்டது பாஜ.க. தலைமை.
பி.ஜே.பி. - மற்றும் சங் பரிவாரத்தில் தங்களை சங்கமித்துக் கொண்ட ஒடுக்கப்பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் உமாபாரதிக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்த பிறகாவது சிந்திப்பார்களா என்று தெரியவில்லை.
உமாபாரதியை அரசியலில் இருந்தே விலக்கி வைக்கவும் அவரை பா,.ஜ.க.வினர் யாருமே தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் தலைமை உத்தரவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் மனம் உடைந்து போன உமாபாரதி பா.ஜ.க.வின் ஆரம்பக் காலத்தில் அதனை நாடு முழுவதும் கொண்டு சென்ற 4 பேரில் தானும் ஒருவராக இருந்தும், தனது மாநிலத்திலேயே தன்னை மதிக்காமல் இருப்பது பெரும் அவமானகரமானதாக உணர்ந்தார். மனம் புழுங்கினார். தேர்தல் நேரத்தில் மாநிலத்தில் இருந்தால் பலர் வந்து துக்கம் விசாரிப்பது போல் ஏன் கட்சிப் பணி செய்வதில்லை என்று கேட்கிறார்கள்.
உண்மையைக் கூறவும் முடியாமல், தலைமைக்கு எதிராகப் பேசவும் முடியாமல் மவுனியாக இருந்த உமாபாரதி உடனடியாக மத்தியப் பிரதேச திகம்பர் மாவட்டத்தில் உள்ள தமது கிராமத்திலிருந்து இமய மலைக்கு ஆன்மீகப் பயணம் செல்வதாக அறிவித்தார். அவரது அறிவிப்பிற்குப் பிறகாவது கட்சியினர் தன்னை தேர்தல் நேரத்தில் செல்ல வேண்டாம் என்று தடுப்பார்கள் என்று நினைத்தார். ஆனால், யாருமே அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஆகையால், தனியாக இமய மலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
2003ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டவர் செல்வி உமாபாரதி. மாநிலத்தில் ஹிந்துத்துவ வகுப்புவாதத்தை தூண்டி விடுவதில் வீராதி வீரர் அவர். வெற்றியும் பெற்றார். சட்டமன்றத்தில் 230 இடங்களில் 173 இடங்களை வென்றது பா.ஜ.க.
ஆகஸ்ட் 2004இல், கருநாடக மாநிலம் ஹூபிளியில் 1994இல் நடந்த மதக் கலவரம் தொடர்பாக உமா பாரதிக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதனால்அவர் பதவி விலகினார்.
வழக்கில் அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்த நிலையில், நியாயமாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியை அவருக்கு மீண்டும் அளித்திருக்க வேண்டும். பதவியில் அமர்ந்து ருசி கண்ட பூனைகள் அவ்வாறு எளிதில் விட்டுக் கொடுப்பார்களா?
அதன் பிறகு பா.ஜ.க. தலைமையகத்தில் நடைபெற்ற அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட மேல்மட்டத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பா.ஜ.க.வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அடேயப்பா உமா பாரதி என்ன குதி குதித்தார்! பாபர் மசூதி தூள் தூளான நிலையில் முரளி மனோகர் ஜோஷி முதுகில் குதிரை சவாரி செய்யவில்லையா?
அப்பொழுதெல்லாம் பார்ப்பனர் களுக்கு அனுமார்கள் தேவைப் பட்டார்கள். இராமாயணத்தில் கூட 'பிராமணோத்தமர்'களுக்கே பொன்னும், மணியும் வழங்கிய சீதா தேவி, கஷ்ட காலங்களில் எல்லாம் உடன் இருந்து உதவிய அனுமனுக்கு அளித்தது வெறும் வஸ்திரம்தானே!
பார்ப்பனரல்லாத உமாபாரதிக்கு மட்டுமல்ல; எத்தனையோ பேர் பழிவாங்கப்பட்டனர் - உதாசீனப் படுத்தப்பட்டனர்.
1996ஆம் ஆண்டில் பா.ஜ.க.வின் இளைஞரணி தலைவராக உமாபாரதி இருந்த போதே - கட்சியின் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து அனல் கக்கினார்.
போபால் தொலைக்காட்சிக்கு வெளிப்படையான பேட்டியே அளித்தார். பா.ஜ.க.வின் தலைமை என்பது பார்ப்பன ஆதிக்கத்தில் இறுக்கமான பிடியில் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டோர் கட்சியில் புறக்கணிக்கப்படுவதாகப் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். அந்தப் பேட்டியை அப்பொழுதே 'விடுதலை' வெளியிட்டதுண்டு. (26.4.1996)
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தவரும் - பி.ஜே.பி.யின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கல்யாண்சிங் லக்னோவில் இந்துஸ்தான் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியது என்ன?
"உ.பி. மாநிலத்தில் புதிய சக்திகள் உருவாகிவிட்டன; நடந்து முடிந்த தேர்தல் - இதை நன்றாக உணர்த்தியிருக்கிறது; இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்தால் - அது தற்கொலைக்கு சமமானதாகி விடும்" என்று கல்யாண்சிங் கூறினார்.
"தலித்துகள் மற்றும் பிற்படுத்தப் பட்டோரிடையே எழுந்துள்ள இந்த விழிப்புணர்வை நான் வரவேற்கிறேன். பா.ஜ.க. இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியலில் தலித்துகளுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் சமத்துவமான - கவுரவமான பங்கு தரப்பட்டாக வேண்டும் என்ற அவர்களின் 'பசி'யை பூர்த்தி செய்யாவிட்டால், மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். அரசாங்கத்திலும்,நிர்வாகத்திலும் கட்சி அமைப்பிலும், இந்தப் பிரிவு மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்; பல நூற்றாண்டு காலமாக, இந்த மக்கள் புறக்கணிக்கப்பட்டு - அவமதிக்கப்பட்டுள்ளார்கள். அடிப்படை உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது; இன்னமும் உடல் உழைப்பு செய்யும் கூலித் தொழிலாளர்களாகவே இருக்க அவர்கள் தயாராக இல்லை; 'ஓட்டு உங்களது; ஆட்சி எங்களது' என்ற ஏமாற்று 'மந்திரம்' இனியும் எடுபடாது" என்றும் கல்யாண்சிங் கூறினார்.
"பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித்து களுக்கும் அதிகாரத்தில் உரிய பங்கு தரப் படாவிட்டால் நாங்கள் பேசும் 'இந்துத்துவா' கோட்பாடே முழுமை பெறாது'' என்று கூறிய கல்யாண்சிங், "நாங்கள் முன்வைத்த இந்துத்துவா கோட்பாடு - சமூகத்தின் மேல் ஜாதிப் பிரிவினருக்கான கோட்பாடாக அமைந்துவிட்டது வருந்தத்தக்கது - இந்துத்துவா என்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியது என்ற நிலை உருவாக வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
ஏற்கெனவே கட்சிக்குள்ளே இந்தப் பிரச்சினையை எழுப்பிப் போராடி வரும் அவர், "பா.ஜ.க. தனது குணாம்சத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால்,அது மேலும் படுதோல்விகளையே சந்திக்கும்" என்றும் கூறினர்."கட்சிக்குள்ளே என்னை எதிர்ப் பவர்கள், நான் பிற்படுத்தப்பட்டவர்களின் ஆதரவாளன் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் எல்லாம் - கட்சியின் உண்மையான நண்பர்களா?" என்றும் கட்சிக்குள் தன்னை எதிர்க்கும் பார்ப்பனர்களை அவர் கேட்டுள்ளார்.
"யாதவர்கள் அதிகமாக உள்ள அசம்கார் தொகுதியில் நான் ஒரு யாதவரை வேட்பாளராக்க பரிந்துரைத்தால் உடனே என்னை பிற்படுத்தப்பட்டோர் ஆதரவாளன் என்றும், முன்னேறிய ஜாதியின் எதிர்ப்பாளன் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்" என்றும் கல்யாண்சிங் கூறினார்.
"உ.பி., தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்; ஆனாலும், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உரிமைக்குக் குரல் கொடுப்பதையே கட்சிக்கு எதிரானது என்ற போக்கைக் கைவிட வேண்டும்; அதுவே கட்சிக்கும் நல்லது; இந்து சமூகத்துக்கும் நல்லது" என்று கல்யாண் சிங் கூறினார்.
('விடுதலை' - 11.11.1994)
பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவராக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் குமுறுவதைக் கேளுங்கள்! கேளுங்கள்!
பி.டி.அய் செய்தி நிறுவனத்திற்கு அளித் பேட்டி வருமாறு:
"மாநிலங்களவை உறுப்பினராக எனக்கு இரண்டாவது முறை பா.ஜ.க. தலைமை வாய்ப்பளிக்க மறுத்துவிட்டது. ஆனால், தென்னாப்பிரிக்காவில் நடந்த இன ஒதுக்கல் குறித்த பன்னாட்டு மாநாட்டுக்குப் பிரதிநிதியாக என்னை அனுப்பி வைத்தது அந்தக் குழுவுக்கும் என்னைத் தலைவராக கட்சித் தலைமை நியமித்தது. ஏன் இந்த இரட்டை வேடம்? கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி ஆட்சி மன்றக் குழு, நிர்வாகிகள் குழுக்களில் கட்சியின் மேனாள் தலைவர்கள் பங்கேற்க உரிமை உண்டு. ஆனால், மேனாள் தலைவரான எனக்கு அக்கமிட்டிக் கூட்டங்களில் அனுமதி மறுக்கப்படுவது ஏன்?
ஆகவே, கோவாவில் நடக்க இருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்.
டெகல்கா விவகாரத்திற்குப் பின்னர் அநேகமாக கட்சியின் அனைத்து முக்கியக் கூட்டங்களில் இருந்தும் நான் ஒதுக்கி வைக்கப்பட்டேன். 30 ஆண்டுகளாக கட்சிக்காக பாடுபட்டு வரும் ஒரு தொண்டருக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச மதிப்பை கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கின்றேன்.
உ.பி., உத்தராஞ்சல்,பஞ்சாப் பேரவைத் தேர்தல்களில் இதுவரை இல்லாத வகையில் பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்தது. சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தும் வேலையில் கட்சி கவனம் செலுத்தாமை, நலிந்த பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோரிடமிருந்து கட்சி அந்நியப்பட்டதுதான் தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்குக் காரணம்."
இவ்வாறு பங்காரு லட்சுமணன் கூறினார்.
தமிழ்நாட்டில் பி.ஜே.பி தலைவராக இருந்த டாக்டர் கிருபாநிதி எப்படி எல்லாம் அவமதிக்கப்பட்டார். "பா.ஜ.க. தலைமையிடமான கமலாலயத்தில் தனக்கு எந்தவித மரியாதையும் கிடையாது - வசதியும் கிடையாது" என்று குமுறினாரே!
இல.கணேசன் (இப்பொழுது ஆளுநர்) தன் கையை முறுக்கியது குறித்தெல்லாம் புலம்பியதுண்டே!
பிறகு தி.மு.க.வுக்கு வந்து சேர்ந்தார்.
பாரதிய ஜனதா என்றால் பார்ப்பன ஜனதாவே! அக்கட்சியில் இருக்கும் பார்ப்பனர் அல்லாதார் சிந்திப்பார்களாக!
No comments:
Post a Comment