காலேஸ்வரம் அணை தூண்கள் சரிவதற்கு தெலங்கானா அரசு காரணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 4, 2023

காலேஸ்வரம் அணை தூண்கள் சரிவதற்கு தெலங்கானா அரசு காரணம்

தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கை

அய்தராபாத்,  நவ.4  கோதாவரி ஆற்றைத் தடுத்து ரூ.1 லட்சம் கோடியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையின் தூண்கள் சரிய பல்வேறு தவறுகளே காரணம் என தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் சந்திரசேகர ராவின் ஆட் சியில் கடந்த 2019இ-ல் காலேஸ்வரம் மேடி கட்டா அணை ரூ.1 லட்சம்கோடி செலவில் கட்டப்பட்டது. ஆனால் இந்த அணை கட் டப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக ஆரம்பம் முதலே எதிர் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் குற்றம் சாட்டி வருகின்றன. 

இதனிடையே இந்த அணையின் 15-ஆவது தூண் முதல் 20-ஆவது தூண் வரை அண்மை யில் ஆற்றுமண்ணில் புதைந்தது.

இதுதொடர்பாக தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியஅதிகாரிகள் நேரில் வந்து அணையின் நிலையை ஆய்வு செய்து, அணை மீது போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த அணை மீதான வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்று பாதை ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி கோதாவரி ஆற்றின்மீது கட்டப் பட்டுள்ள இந்த அணையின் தூண்களில் சில ஏன் மண்ணில் புதைந்தது ? எங்கு தவறு நடந்தது ? என்பவை குறித்து தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அணையின் திட்டம், வரைபடம் போன்றவை சரியில்லை எனவும், ஒரு பிளாக்கில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் மொத்த அணையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அணையை உபயோகிக்கக் கூடாது என்றும், அது மிகவும் ஆபத்தில் முடியுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, அணைக்கு தொடர்புள்ள 20 கேள்விகள் மாநில அரசிடம் கேட்கப்பட்டதில், அவர்கள் அதில் வெறும் 12-க்கு மட்டுமே பதில் அளித்துள்ளதாகவும் தேசிய அணைகள் பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது. 

ரூ.80 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இந்த மாபெரும் காலேஸ் வரம் அணைதான் தெலங்கானாவுக்கே பெருமை என மார் தட்டிகொண்டிருந்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசுக்கு தற்போது இந்த அறிக்கை மாபெரும் இடியாக இறங்கி உள்ளது. அரசின் பல்வேறு தவறுகளே இந்த அணையின் இன்றைய நிலைக்கு காரணம் என அறிக்கை கூறுகிறது. இதில் பல கோடி முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவர் ராகுல் உட்பட பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பாஜகவினரும் ஆரம்பம் முதலே இதனை எதிர்த்து வந்தனர்.

ராகுல் காந்தி கூட அண்மையில் இந்த அணையை நேரில் சென்று பார்வையிட்டார். ஆதலால், தேர்தல் நடைபெற இன்னமும் 26 நாட்களே உள்ள நிலையில், இந்த மாபெரும் குற்றச்சாட்டு சந்திரசேகர ராவுக்கு எதிராக அமையுமா? எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment